2010-07-05 15:39:57

பிணி போக்கும் சொல்


ஜூலை05,2010 உரோமையில் அந்த மருத்துவமனையைக் கடந்து செல்லும் பொழுதெல்லாம் அங்கு ஒருநாள் இரவு அவசர சிகிச்சைக்காகச் சென்ற ஞாபகம் வரும். அங்கு, அந்த நள்ளிரவில் அவசர சிகிச்சைக்காகக் காத்துக் கிடந்த மாரடைப்பு நோயாளிகள், சிகிச்சை பலன் தராமல் இறந்த வாகன விபத்து நண்பர், இவ்வாறு பல சிந்தனைகள் வரும். இந்த மருத்துவமனைகள் மனிதனை உயிர்ப்பிக்கும் விஞ்ஞான வளாகம்! பணம் போட்டு நலம் காக்கும் பொதுச் சேவை வியாபாரம் மையம். உயிரோடு விளையாடி தொழில் கற்கும் ஏகாந்தம். உயிர் கொடுத்தும் உயிர் காக்கும் மதம் தாண்டிய மருத்துவாலயம்! பணம் தாண்டியும் மனிதம் சுரப்பிக்கும் கடவுள்கள் மருத்துவர்களாக மாறிய இடம்! மருத்துவர்களின் கவனக் குறைவால் உயிர் தின்னும் பொழுதுபோக்கிடம். மருத்துவரில்லாத அவசரத்தில் உயிர் காத்த செவிலித் தாய்களின் அன்பு பூக்கும் தளம்! மருத்துவமனைகள் பற்றி இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இந்த மருத்துவர்களை அவர்களின் சாதனைகளுக்காகப் போற்றும் ஊடகங்கள், அவர்களின் அலட்சியங்களில் அப்பாவி உயிர்கள் பலியாகும் பொழுது சாடவும் செய்கின்றன. உயிர்காக்க உறுதி மொழி எடுக்கும் மருத்துவர்கள் சிலவேளைகளில் உறுதிமொழியை மறந்தும் போகின்றனர். இவர்களின் மெத்தனப் போக்கால் காலமெல்லாம் கண்பார்வை இழந்திருப்பவர்களின் சோகக் கதை தெரியும். நவீன மருத்துவ வசதிகள் நலிவடைந்த இந்தக் காலத்திலும், நாடுகளில், ஏன் இந்த இத்தாலியில்கூட ஒருவருக்கு மாத்திரைகள் மாற்றிக் கொடுக்கப்பட்டதால் அவருக்கு ஏற்பட்ட பக்கவிளைவையும், ஓர் இளம்பெண்ணுக்குத் தவறாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அவர் வாழ்நாளெல்லாம் தள்ளுவண்டியில் இருக்க நேர்ந்ததையும் நேரிடையாகப் பார்க்க நேர்ந்தது.

கடந்த வாரத் தமிழ்ப் பத்திரிகை ஒன்று, “நான்கு மணி நேர நரக வேதனை! என்று தலைப்பிட்டு பிரசவ வேதனையில் ஒரு பெண் இறந்ததை விளக்கியிருந்தது. நெல்லை மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த உணவுவிடுதித் தொழிலாளி சுபஹானி. இவரது மனைவி ஷமீலா பீவி. நிறைமாத கர்ப்பிணியான ஷமீலாபீவிக்கு கடந்த 23-ம் தேதி பிரசவ வலி ஏற்பட, அரசு மருத்துவமனை ஒன்றிற்கு அதிகாலை 6 மணிக்கு சென்றார். டாக்டர்கள் இல்லாததால் நான்கு மணி நேரம் பிரசவ வேதனையில் துடித்த ஷமீலா பீவிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அந்த துயரம் அடங்குவதற்குள் அவரது உயிரும் அடங்கிப்போனது என்று வாசித்தோம். மனைவி இறந்தது பற்றி விவரித்த அவளது கணவர், மருத்துவரும் தாமதமாக வந்தார். காலை 9 மணிக்குத் தாதியரும் டிரிப்ஸ் ஏத்திட்டு தேனீர் குடிக்க வெளியே போயிட்டாங்க. அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தை இறந்தே பிறந்துச்சு. கொஞ்ச நேரத்திலேயே என் ஷமீலாவும் கண்ணை மூடிட்டா என்று கண்ணீர்மல்க கூறியிருக்கிறார். இம்மாதிரியானச் சம்பவங்களின் போது ஆயிரம் விசாரணைகள் நடக்கலாம்; அறிக்கைகளும் கொடுக்கலாம். கட்சிகளும் அவற்றை அரசியலாக்கலாம். ஆனால் பறிபோன உயிர்களுக்கு யார் பொறுப்பு?

அந்த மனிதருக்கு வயது 48 இருக்கும். ஆயுள்காப்பக ஊழியர். திடீரென ஒருநாள் மூட்டு வலியால் அவதிப்படத் துவங்கினார். வீட்டின் அருகில் உள்ள மருத்துவரிடம் காட்டினார். அந்த மருத்துவர் வெறும் எம்.பி.பி.எஸ்., அவரால் இதைச் சரியாகக் கண்டுபிடிக்க முடியாது என்று அவநம்பிக்கைகொண்ட அவர், பெரிய மருத்துவமனைக்குப் போய் வரலாம் என்றார். குடும்பத்தினரும் நகரின் அதிநவீன மருத்துவமனையில் சிறப்பு மருத்துவரிடம் காட்டினார்கள். ஸ்கேன் எடுக்கப்பட்டது. வலி நிவாரணிகள், மருந்துகள் தரப்பட்டன. உடனே அவர், இது பணம் பறிக்கும் வழி. மூன்றாவதாக ஒரு டாக்டரிடம் காட்டி கருத்துக் கேட்டுவிடலாம் என்றார். அதற்கும் வீட்டார் சம்மதித்தனர்.

இப்படியாக, அவர் இரண்டு வாரங்களில் ஏராளமான டாக்டர்களிடம் தனது மூட்டு வலியைக் காட்டிவிட்டார். உடல் எடை அதிகமாவதன் காரணமாக மூட்டுவலி உருவாகி இருக்கக்கூடும் அல்லது வயதாவதன் காரணமாகத் தேய்மானம் ஏற்படுவது இயல்பு. ஆகவே, வலி அதிகமானால் நிவாரணிகள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் சொன்னதை அவரால் நம்ப முடியவில்லை. தனது நோய் மிக இயல்பானது. பெரும்பான்மையினருக்கு வரக்கூடியது என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தொடர்ந்த சந்தேகத்துடனே இருந்தார். மருத்துவர் தந்த மருந்துகளை முறையாகச் சாப்பிடவும் இல்லை. ஒரு மாதத்துக்குப் பிறகு ஆயுர்வேத மருத்துவமனைக்குச் சென்று இரண்டாயிரம் ரூபாய்க்கு மருந்து வாங்கி வந்தார். இரண்டு நாட்களில் அக்குபஞ்சர் சிகிச்சை செய்தார். அவரது உறவினர் வழியாக ஹோமியோபதி வைத்தியச் சிகிச்சைபற்றிக் கேள்விப்பட்டு, அங்கேயும் போய் வந்தார். இடையில் 12 கோயில்களில் பிரார்த்தனை, பூஜைகள் செய்துகொண்டார். எதனாலும் மூட்டு வலி குறையவே இல்லை. அவரின் அப்பாவுக்கு வயது 75. அவருக்கும் கடுமையான கால்வலி இருக்கிறது. அவர் ஒருபோதும் தனது வலியைக் காட்டிக்கொண்டதே இல்லை. தானாகத் தைலம் தேய்த்துக் கொள்வதோடு முடிந்தவரை தனது வேலைகளை அவரே செய்து வந்தார். தினசரி நடைப்பயிற்சி, எளிய உணவு, புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது – இவற்றில் தன்னை ஈடுபடுத்தி வந்தார். அவருக்குத், தனது 48 வயது மகன் வலி தாங்கமுடியாமல் கூப்பாடு போடுவதையும், மருத்துவர்களைத் தேடி அலைவதையும் காண்பது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. எனவே அவர் ஒருநாள் தனது மகனை அழைத்து, "நீ இன்னும் சின்னப் பிள்ளை இல்லை. ஏதாவது ஒரு டாக்டர் கொடுத்த மருந்தை ஒழுங்காச் சாப்பிட்டா, இந்நேரம் நீ சரியாகி இருப்பே. உனக்கு எல்லாத்துக்கும் பயம். அதுல பாதி நீயே ஏற்படுத்திக்கிட்டது. 100 பேர் கூடவே இருந்தாலும், நோய் யாருக்கு வருதோ, அவங்கதான் அத்தனையும் அனுபவிக்கணும். நோய்ல இருந்து விடுபட மருந்து மட்டும் போதாது. மனசுதாம்ப்பா முக்கியம்" என மனம்விட்டுச் சொன்னார். தற்போது அவர் மறுபடியும் முதலில் பார்த்த மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம் என்று தொடங்கி இருக்கிறார்

நேயர்களே, இது, இந்த 48 வயது ஆளின் பிரச்னை மட்டும் இல்லை. பலரின் பிரச்னையாகவே இருக்கின்றது. “இக்காலத்தில் பலர் மருத்துவத்தையும், மருத்துவர்களையும் சந்தேகத்துடனே பார்க்கிறார்கள். இது நோயைவிட அதிக அச்சம் ஊட்டுகிறது. நம் காலத்தின் தீர்க்கவே முடியாத நோய் மருத்துவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல்போன நோய்” என்று ஒருவர் சொல்கிறார். அவர் மேலும் சொல்கிறார் – “ஆங்கில மருத்துவம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே மாற்று மருத்துவத்துக்குத் தாவுகிறார்கள். அதைச் சாப்பிடத் துவங்குவதற்குள் சந்தேகம் வருகிறது. உடனே, விட்டுவிடுகிறார்கள். மருத்துவம் தொடர்பாக யார் எந்தத் தகவல் சொன்னாலும் அதை நம்பி விடுகிறார்கள். அதை நினைத்து நினைத்து அச்சப்படுகிறார்கள். அந்தப் பயம்தான் நம் காலத்தின் தீர்க்க முடியாத நோய்” என்று.

நம்பிக்கைதானே மருத்துவத்தின் முதல்படி. அதைக் கைவிட்டால் எப்படி நோய் குணமாகும்? நோயாளி - மருத்துவர் என்ற உறவு கடுமையானது அல்ல; மாறாக, அது அன்பு கலந்த உறவு. ஒருகாலத்தில் கிராமங்களில் மருத்துவர்களே, நோயாளிகளுக்குப் பேருந்துக்காகப் பணம் கொடுத்து அனுப்பிவைத்த சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதேபோல், மருத்துவரைப் பார்க்கச் செல்லும் கிராமத்தவர், அவருக்காகத் தங்கள் நிலத்தில் விளைந்த பழங்கள், தானியங்கள், கீரைகள், பால் போன்ற பொருட்களைக் கொண்டு போகக்கூடிய அளவுக்கு மரியாதையுடன் இருந்திருக்கிறார்கள்.

நேயர்களே, சொற்கள் சக்தி வாய்ந்தவை. அன்பும் ஆறுதலும் ஆதரவும் அக்கறையும் அடங்கிய சொற்கள் நோயாளியின் உடல் நோயை மட்டுமல்ல, உள்ள நோயையும் குணமாக்கும் மருத்துவக் குணம் கொண்டவை. மருந்து இல்லாமலேகூட சொற்கள் குணப்படுத்திவிடும். நான் வாழ்ந்த குழுவில் பணிபுரிந்த தாதிச் சகோதரி ஒருவரிடம் இந்தவகைக் குணப்படுத்தலை நேரிடையாகவே பார்த்திருக்கிறேன். ஒருநாள் இரவு ஒருமணிக்கு ஒருபெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். பல்கட்டி மூர்ச்சை இழந்திருந்தாள் அந்தப் பெண். ஆனால் அவளுக்கு மாத்திரை எதுவும் கொடுக்காமல் அவளோடு சிறிது நேரம் தனியாகப் பேசினார் அந்தச் சகோதரி. பின்னர் சிலநிமிடங்களில் அப்பெண் எழுந்து நடந்து சென்றதைப் பார்த்து அதிசயித்துப் போனேன். உண்மைதான். நோய், உடலைவிட மனதைத்தானே அதிகம் பாதிக்கிறது.

ப்ரெஞ்ச் பேரரசனாகக் கோலோச்சிய நெப்போலியன் இத்தாலியில் ஒரு சிறு தீவில் பிறந்தவர். அவர் சிறுவனாக இருந்த போது அவரது பாட்டி அவரிடம் ஓர் உயர்ரக மரகதக் கல்லைக் கொடுத்து இந்தக் கல்லை வைத்திருப்பவன் பிற்காலத்தில் பிரான்ஸ் நாட்டு மன்னன் ஆவான் என்று சொல்லி நம்ப வைத்தாள். நெப்போலியனும் பாட்டியின் சொற்களை நம்பி வாழ்க்கையில் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவர் இறந்த பிறகு அந்தக் கல்லைச் சோதனை செய்தனர். அது வெறும் பச்சைக் கண்ணாடிக்கல் என்றும், மரகதக்கல் இல்லையென்றும் கண்டறியப்பட்டது. நம்பிக்கையைக் கைவிடாதே என்று அறிஞர் அண்ணாவும் சொன்னார். நம்பிக்கை இருந்தால் மலையைக்கூட நகர்த்தலாம். இது இயேசு சொன்னது.

அன்பர்களே, நோய் குணமாவதற்கு நோயாளிகளுக்குத் தேவை நம்பிக்கை. மருத்துவர்களுக்குத் தேவை நோயாளிகள்மீது அன்பும் அக்கறையும்.








All the contents on this site are copyrighted ©.