2010-07-02 16:26:40

திருப்பீட உயர் அதிகாரி - பெண்களின் முன்னேற்றத்துக்கு உத்தரவாதம் அளிக்காத எந்த ஒரு நடவடிக்கையும் முற்றுப்பெறாததாகவே அமையும்


ஜூலை02,2010 குடும்பம், சமூகம், மற்றும் உலகின் வளர்ச்சியில் உயிர்த்துடிப்புள்ள செயல் திறனாளிகளாக இருக்கின்ற பெண்களின் முன்னேற்றத்துக்கு உத்தரவாதம் அளிக்காத எந்த ஒரு நடவடிக்கையும் முற்றுப்பெறாததாகவே அமையும் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்தார்.

பாலினச் சமத்துவம் மற்றும் அனைத்து நிலைகளிலும் பெண்களின் சக்தி ஊக்குவிக்கப்படல் என்ற தலைப்பு குறித்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் செலஸ்தினோ மிலியோரே, ஆணுக்கும் பெண்ணுக்குமிடையேயான சமத்துவம் குறித்து விளக்கினார்.

ஆணுக்கும் பெண்ணுக்குமிடையேயான சமத்துவம் என்பது ஒரேமாதிரி இருப்பதல்ல, ஆனால் அது பன்மைத்தன்மையிலானச் சமத்துவம் என்று விளக்கிய பேராயர், சமத்துவமும் பன்மைத்தன்மையும் உயிரியல் கூறின் அடிப்படையில் இருப்பது என்றார்.

வளர்ச்சியில் பெண்சக்தியை மேம்படுத்துவது என்பது ஒவ்வொரு பெண்ணின் திறமைகளையும் கொடைகளையும் ஏற்பதாகும் என்றும் கூறிய பேராயர் மிலியோரே, நலவாழ்வு, பொருளாதாரம், மாண்பு என ஒவ்வொரு துறையிலும் பெண்சக்தி அங்கீகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் கோடிட்டுக் காட்டினார்.

குடியேற்றதாரப் பெண்கள், அகதிப் பெண்கள், மாற்றுத்திறனுடைய பெண்கள் போன்றோரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் திருப்பீடம் ஆதரவளிக்கின்றது என்றும் பேராயர் மிலியோரே கூறினார்.

ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளரான பேராயர் செலஸ்தினோ மிலியோரே, போலந்து நாட்டுக்கானத் திருப்பீடத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.