2010-07-02 16:21:52

ஈராக் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமாறு திருத்தந்தை அழைப்பு


ஜூலை02,2010 ஈராக்கில் வாழும் சிறுபான்மை கிறிஸ்தவர்கள் தங்களது மூதாதையரின் பூமியை விட்டுச் செல்லாதிருப்பதற்கு உதவும் வண்ணம் அவர்கள் அந்நாட்டில் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்பு விடுத்தார்.

திருப்பீடத்துக்கான ஈராக்கின் புதிய தூதர் Habbeb Mohammed Radi Ali Al-Sadr ஐ இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கேட்டுக் கொண்ட திருத்தந்தை, சமய சுதந்திரம் சட்டத்தில் மட்டுமல்லாமல் செயலிலும் காட்டப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தினார்.

புதிய தூதரிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, அண்மை ஆண்டுகளாக ஈராக்கில் இடம் பெற்ற பல வன்செயல் தாக்குதல்களுக்கு அப்பாவி கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் பலியாகியிருக்கின்றனர் என்றும், இரு சமூகத்தவரும் அனுபவித்தத் துன்பங்கள் அந்நாட்டில் அமைதி மற்றும் ஒப்புரவிற்குச் சேர்ந்து உழைப்பதற்கு வழி அமைக்கின்றன என்றும் கூறினார்.

வருகிற அக்டோபரில் வத்திக்கானில் இடம்பெறவிருக்கும் மத்திய கிழக்குப் பகுதிக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றம் இந்த விவிலிய பூமியில் கிறிஸ்தவர்கள் தங்களது பங்கைக் கண்டுணர வாய்ப்பாக அமையும் என்றும் ஈராக் புதிய தூதரிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

மேலும், புதிய தூதர் Habbeb Mohammed Radi Ali Al-Sadr, ஈராக் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களையும் அவற்றைக் களைவதற்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளையும் திருத்தந்தையிடம் எடுத்துச் சொன்னார். இவரின் உரைக்குப் பதில் சொல்லும் விதமாகத் திருத்தந்தையும் தனது வேண்டுகோள்களை அவரிடம் முன்வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.