2010-06-30 14:55:35

கந்தமால் பகுதியில் கொலை குற்றம் சாற்றப்பட்ட மனோஜ் பிரதான் என்ற சட்டசபை உறுப்பினருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது


ஜூன்30,2010 ஒரிஸ்ஸாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்துவர்களுக்கு எதிராக எழுந்த கலவரங்களில் கொலை குற்றம் சாற்றப்பட்ட மனோஜ் பிரதான் என்ற சட்டசபை உறுப்பினருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கந்தமால் பகுதி கலவரங்களை விசாரித்து வரும் விரைவு நீதி மன்றம் இச்செவ்வாயன்று இந்தத் தீர்ப்பை வழங்கியது. பரிகிதா திகால் (Parikhita Digal) என்ற கிறிஸ்தவரை 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொலை செய்ததற்காக மனோஜ் பிரதானுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்குவதாக, விரைவு நீதி மன்றத்தின் நீதிபதி S.K.தாஸ் தன் தீர்ப்பில் கூறியுள்ளார்.
வீடுகளுக்குத் தீ வைத்தல், வன்முறையைத் தூண்டுதல், கொலை செய்தல் உட்பட எட்டு இந்திய தண்டனை விதிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்ட மன்ற உறுப்பினர் பிரதான், இச்செவ்வாயன்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகக் கூறினார்.2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் கந்தமால் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக சிறையிலிருந்தே போட்டியிட்ட பிரதான், பிணையத் தொகையில் விடுவிக்கப்பட்டு தற்போது சட்ட மன்றக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.