2010-06-30 14:55:19

G-8 G-20 உச்சிமாநாட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ள உதவித் தொகை போதாது - கத்தோலிக்க நிதி உதவி நிறுவனங்கள்


ஜூன்30,2010 மருத்துவ உதவிகள் கிடைக்காமல் பல்லாயிரக் கணக்கில் இறக்கும் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்க G-8 G-20 உச்சிமாநாட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ள உதவித் தொகை போதாது என்று கத்தோலிக்க நிதி உதவி நிறுவனங்கள் கூறியுள்ளன.
கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில் கனடாவின் Ontarioவில் முடிவடைந்த இந்த உச்சி மாநாட்டின் முடிவில் உலகத் தலைவர்கள் உறுதி அளித்துள்ள 730 கோடி டாலர்கள் நிதி உதவி, உலகப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்தத் தலைவர்கள் முழு ஈடுபாடு கொண்டுள்ளனரா என்ற சந்தேகத்தை எழுப்புகிறதென கத்தோலிக்க நிதி உதவி நிறுவனங்களின் ஒரு அங்கமான World Solidarity என்ற அமைப்பின் பிரெஞ்ச் பிரதிநிதி Alexis Anagnan கூறினார்.
ஏழை நாடுகள் உட்பட அனைவருக்கும் சாதகமான, ஏற்புடையதான முன்னேற்றங்களையே இனி வரும் காலத்தில் வளர்க்க வேண்டும் என்று உலகத் தலைவர்கள் கூறினாலும், அவர்கள் எடுத்துள்ள முடிவுகளில் இந்த நிலைப் பாடு வெளியாகவில்லை என்று உலக இரட்சகர் சபையைச் சார்ந்தவரும், ‘விவிலிய நீதி ஆலோசனை’ என்ற அமைப்பின் இயக்குனருமான அருள் தந்தை Paul Hansen கூறினார்.அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, பேறுகாலத்தின் போது குழந்தைகள் இறப்பதைத் தடுக்க மட்டும் 1,500 முதல் 3,300 கோடி டாலர்கள் தேவைப்படும் என்று ஐ.நா.வின் கணிப்பு ஒன்று கூறுவதாகவும் அதற்கு உலகத் தலைவர்கள் அளித்துள்ள பதில் 730 கோடி டாலர்கள் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.