2010-06-29 15:31:56

விவிலியத் தேடல்:


RealAudioMP3
விவிலியத் தேடலில் திருப்பாடல்கள் பற்றி நான் என் பகிர்வுகளை ஆரம்பித்ததற்குப் பல காரணங்கள் உண்டு. அந்தக் காரணங்களில் மிக, மிக முக்கியமான காரணம்... திருப்பாடல் 23. "ஆண்டவர் என் ஆயன்" என்று ஆரம்பமாகும் இந்தத் திருப்பாடலை நான் ஆங்கிலத்திலும், தமிழிலும் பாடி மகிழ்ந்திருக்கிறேன். பல முறை தியானித்துப் பலனடைந்திருக்கிறேன். உடல் நோய் கண்டவர்கள், குடும்பத்தில் ஒருவரை இழந்து தவித்தவர்கள் பலர் இந்தப் பாடல் வழியாக ஓரளவு மன சாந்தி அடைந்ததைப் பார்த்திருக்கிறேன்.
இந்தத் திருப்பாடலைப் பற்றி கட்டுரைகள் படித்திருக்கிறேன், இணையதளத்தில் விவரங்கள் சேகரித்திருக்கிறேன். இவைகளை விவிலியத் தேடல்கள் வழியாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். நான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டும் என்ற ஆவல்.
இந்தத் திருப்பாடலைக் குறித்து நான் கற்றவைகளில் என்னை அதிகம் கவர்ந்த, பாதித்த ஒரு நூல் Harold Kushner என்ற யூத குரு எழுதிய "The Lord is my Shepherd" என்ற நூல். 2003ம் ஆண்டு வெளியான இந்த நூல், திருப்பாடல் 23ஐப் பற்றிய மிக அழகான, ஆழமான விளக்கங்களைக் கூறும் ஒரு புத்தகம். 2001ம் ஆண்டு அமெரிக்காவில் வர்த்தகக் கோபுரங்கள் இரண்டு தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்க மக்கள், உலக மக்கள் எழுப்பி வந்த முக்கிய கேள்விகளுக்கு, உலகத்தில் நடக்கும் பல துன்பங்களையும், கடவுளையும் இணைத்து எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. இந்த நூலைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்பது என் கனவு. அந்தக் கனவுக்கு இந்தத் தேடல் ஒரு நல்ல முயற்சியாக இருக்கும்.

இதோ திருப்பாடல் 23

ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்: அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்: தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்: மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்: உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்: என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்: எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்: நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். 
திருப்பாடல் 23ல் 6 திருவசனங்கள் உள்ளன. அவைகளில் 14 கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருத்தும் ஒரு வைரச் சுரங்கம். எனவே இந்தத் திருப்பாடல் பற்றிய நமது தேடல், நமது பகிர்வுகள் நிச்சயம் ஒரு சில வாரங்களாவது தொடரும்.

விவிலியத்தின் எத்தனை பகுதிகளை உங்களால் மனப்பாடமாகச் சொல்ல முடியும்? உங்களில் ஒரு சிலர், ஒருவேளை பலர், விவிலியத்தின் பல பகுதிகளை வரிக்கு வரி சொல்லக் கூடிய திறமை பெற்றவர்களாய் இருப்பீர்கள். உங்களது ஆர்வத்திற்கு முன் நான் தலை வணங்குகிறேன். எனக்கு அவ்வளவு பகுதிகள் மனப்பாடமாய்த் தெரியாது. போலி தாழ்ச்சியல்ல, நண்பர்களே... உண்மை. இறைவன் தந்த பத்து கட்டளைகள், இயேசுவின் மழைப் பொழிவில் கூறிய 'பேறுபெற்றோர்' என்ற கூற்றுகள், இயேசு கற்பித்த செபம் அன்னை மரியாவின் புகழ் பாடல்... என்று ஒரு சில பகுதிகளையே என்னால் மனப்பாடமாய்ச் சொல்ல முடியும். அப்படி மனதில் பதிந்த விவிலியப் பகுதிகளில் திருப்பாடல் 23ம் ஒன்று. "ஆண்டவர் என் ஆயன்" என்று முதல் வரிகளில் ஆரம்பித்து, "நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்" என்ற இறுதி வரிகள் வரை அதிக தடுமாற்றம் இல்லாமல் என்னால் சொல்ல முடியும். அதுவும் இதைப் பாடலாகப் பாடச் சொன்னால், இன்னும் எளிது. எனக்குத் தெரிந்து, ஆங்கிலத்திலும், தமிழிலும் இந்தத் திருப்பாடல் பல கவிதை வரிகளில், இசையோடு வெளியாகி இருக்கிறது. எனக்குத் தெரிந்த பழைய பாடல்கள் இவை:

ஆண்டவர் எனது நல்லாயன், ஆகவே எனக்கொரு குறையுமிராது...
ஆண்டவர் என் ஆயன், ஏது குறை எனக்கு?...
The Lord is my Shepherd, there is nothing I shall want…
My Shepherd is the Lord, nothing indeed shall I want…
The Lord’s my Shepherd, I’ll not want…
எபிரேய மொழியில் திருப்பாடல் நூலை Tehilim அதாவது, புகழ் பாக்கள் என்றும் ஒவ்வொரு திருப்பாடலையும் Mizmorim என்றும் அழைக்கின்றனர். திருப்பாடல் 23 Mizmor Kaf Gimmel என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திருப்பாடல் Adonai Roi lo echsar என்ற வார்த்தைகளுடன் ஆரம்பமாகிறது. திருப்பாடல் 23ஐ அதன் மூல மொழியான எபிரேய மொழியில் பாடக் கேட்போம்.

இப்படி ஏறக்குறைய உலகின் எல்லா மொழிகளிலும் திருப்பாடல் 23 கவிதையாக, இசையாக வெளி வந்த வண்ணம் உள்ளது. திருப்பாடல் 23ஐ மையமாக்கி வெளிவந்துள்ள கதைகள், சம்பவங்கள், விளக்கங்கள் பல நூறு உள்ளன. அவைகளில் இந்தக் கதையும் ஒன்று. Shakespeare எழுதிய நாடகங்களின் பல பகுதிகளை மனப்பாடம் செய்து, அவற்றை மக்களுக்கு முன் உணர்வுப் பூர்வமாய் சொல்லி புகழ் பெற்ற கலைஞர் ஒருவர் தன் நிகழ்ச்சியின் முடிவில் எப்போதும் திருப்பாடல் 23ஐ மிக அழகாகச் சொல்லி முடிப்பார். அவர் அப்படி சொல்லி முடித்ததும், கரவொலியில் அந்த அரங்கமே அதிரும். பல சமயங்களில் அந்தத் திருப்பாடலை மட்டும் மீண்டும், மீண்டும் சொல்லச் சொல்லி கூட்டத்தினர் கேட்பர். ஒவ்வொரு முறை அவர் சொல்லும் போதும், மக்கள் மெய் மறந்து அதைக் கேட்டு, கரவொலி எழுப்புவர். ஒரு நாள் அவர் இப்படி அந்தத் திருப்பாடலைச் சொல்லி முடித்தார். வழக்கம் போல் மக்களும் மிகவும் ரசித்து, பரவசமடைந்து, கரவொலி எழுப்பினர்.
அப்போது, அங்கிருந்த வயதான ஒருவர் தானும் அந்தத் திருப்பாடலை மேடையேறிச் சொல்ல அனுமதி கேட்டார். மக்களும், கலைஞரும் தயங்கினர். இருந்தாலும், அவரது வயதுக்கு மதிப்பு கொடுத்து அவருக்கு அனுமதி அளித்தனர். வயதான அவர் மேடையேறி, "ஆண்டவர் என் ஆயன்" என்று ஆரம்பித்து, திருப்பாடலைச் சொல்லி முடித்தார்.
அவர் முடித்ததும், அரங்கில் ஒருவரும் கை தட்டவில்லை. ஆழ்ந்த அமைதி அங்கு நிலவியது. பலரது கண்களில் கண்ணீர் வழிந்தது. மேடையேறி சொன்னவர் கண்களிலும் கண்ணீர். அரங்கமே, அமைதியில் தியானத்தில் ஆழ்ந்திருந்தது.
இதுவரை பல முறை, பல இடங்களில் இந்தத் திருப்பாடலைச் சொல்லி மக்களிடம் பாராட்டுக்களையும், கரவோலியையும் பெற்ற அந்தக் கலைஞர் முன் வந்தார். அவர் கண்களிலும் கண்ணீர். தொண்டையைச் சரி செய்து கொண்டு, "நான் பல முறை இந்தத் திருப்பாடலைச் சொல்லி உங்களைப் பரவசப்படுத்தி பாராட்டைப் பெற்றிருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் நீங்கள் என்னையே நினைக்கும் படி செய்திருக்கிறேன். ஆனால், இவர் இன்று உங்களை எல்லாம் செபிக்க வைத்திருக்கிறார். அவரை விட அவர் சொன்ன அந்த ஆண்டவரை நினைக்க வைத்தார். எனக்கும் அவருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு... எனக்கு இந்தத் ஆயனைப் பற்றிய திருப்பாடல் தெரியும், இவருக்கு ஆயனான ஆண்டவரைத் தெரியும்."
 நமது தேடலில் இந்தத் திருப்பாடலின் ஆயனைத் தெரிந்து கொள்ள முயல்வோம். தினமும் இந்தத் திருப்பாடலை ஒரு முறை வாசித்தால், மனப்பாடமாய்ச் சொன்னால், மனதார செபித்தால்... அறுபுதமான உணர்வுகள் மனதை நிறைக்கும், அற்புதங்கள் வாழ்வில் நிகழும். தொடர்வோம் நம் தேடலை.







All the contents on this site are copyrighted ©.