2010-06-26 16:11:08

புனித மரிய வியான்னியின் நற்செய்தியின் அடிப்படையிலான வாழ்வு குருக்களுக்கு மட்டுமல்லாமல் பொதுநிலை விசுவாசிகளுக்கும் எடுத்துக்காட்டாக அமைகின்றது - திருத்தந்தை


ஜூன்26,2010 உரோமையிலும் உலகின் பல பகுதிகளிலும் வறுமை மற்றும் கடின வாழ்வின் பல கூறுகள் இன்னும் காணப்படுகின்றன என்ற தனது கவலையை தெரிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இராயப்பர் காசு என்ற அமைப்பின் 45 உறுப்பினர்களை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தி்த்து உரையாற்றிய திருத்தந்தை, வாழ்க்கையில் கஷ்டப்படும் மக்களுடனான உண்மையான ஒருமைப்பாட்டுணர்வைத் திருப்பீடம் தெரிவிக்கிறது என்றார்.

புனித ஜான் மரிய வியான்னி இறந்ததன் 150ம் ஆண்டை முன்னிட்டு கொண்டாடப்பட்டு வந்த சர்வதேச குருக்கள் ஆண்டு குறித்தும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தப் புனிதர் ஏழைகள் மீது கொண்டிருந்த பரிவன்பால் அவர்களுக்குத் தன்னிடமிருந்த அனைத்தையும் கொடுத்தார் என்றார்.

புனித மரிய வியான்னி, தனது இல்லிடத்தில் பாதியை ஏழைச் சிறுமிகளுக்கென ஒதுக்கி அதை இறைபராமரிப்பு இல்லம் எனவும் அழைத்தார், இந்தப் புனிதரது நற்செய்தியின் அடிப்படையிலான வாழ்வு குருக்களுக்கு மட்டுமல்லாமல் பொதுநிலை விசுவாசிகளுக்கும் எடுத்துக்காட்டாக அமைகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

இராயப்பர் காசு, திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கெனச் செலவழிக்கப்படுகின்றது.

மேலும், உலக லூத்தரன் சபை கூட்டமைப்பின் பொதுச் செயலர் Ishmael Noko வையும் இச்சனிக்கிழமை சந்தித்தார் திருத்தநைத 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.