2010-06-26 16:17:46

நக்சல்கள் வன்முறையால் பாதிப்பு 5 ஆண்டுகளில்10 ஆயிரம் பேர் பலி




ஜூன் 26,2010 : இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்கள் உட்பட 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நக்சல் வன்முறையில் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் இந்த நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் இந்த உயிரிழப்பு கணிசமான அளவில் உயர்ந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த உள்துறை அமைச்சகம், கடந்த 2005லிருந்து 2010 மே மாதம் வரை, 10 ஆயிரத்து 268 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறியது.

ஆந்திரா, பீகார், சத்திஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ஒரிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய ஒன்பது மாநிலங்களில் உள்ள 83 மாவட்டங்கள் நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், "க்ரீன் ஹன்ட்' என்ற பெயரில் நக்சல்களுக்கு எதிராக எந்தத் தாக்குதலையும் அரசு நடத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நக்சல்களின் மிகப் பெரிய தாக்குதலில், 2008 ஜூலை 16ம் தேதி மால்காங்கிரி மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 21 பாதுகாப்பு வீரர்களும், இவ்வாண்டு பிப்ரவரியில் 24 பாதுகாப்பு வீரர்களும் நக்சல்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

தாந்தேவாடா சம்பவம் குறித்த ராம்மோகன் கமிட்டியின் அறிக்கை, தேசத்தின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் பல்வேறு நலன் கருதி இணைக்கப்படவில்லை என்று உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.