2010-06-26 16:20:39

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
மே மாதம் என் நண்பர் ஒருவர் சொன்ன வேதனையான நிகழ்ச்சி இது. தமிழில் ஒரு புதுத் திரைப்படம் வெளியாவதற்கு முந்திய நாள், அந்தப் படத்திற்கான சுவரொட்டிகளை இரவு முழுவதும் ஒட்டிக் கொண்டிருந்தார் ஓர் இளைஞர். அடுத்த நாள், அந்த ஹீரோவின் படத்தை முதல் காட்சியில் பார்க்கும் ஆர்வத்தில் (வெறியில்????) அந்த மே மாத வெயிலில், பல மணி நேரம் வரிசையில் நின்று, டிக்கட் வாங்கி விட்டார். அப்போதுதான் அவருக்குத் தன் உடல் பசி தெரிந்தது. அதுவரைத்தான், அவர் அவராகவே இல்லையே! காட்சி ஆரம்பமாவதற்குள், ஒரு டீயும், பன்னும் சாப்பிடலாம் என்று அவர் அந்தத் திரை அரங்கத்தின் முன் இருந்த சாலையைக் கடக்கும் போது, மயக்கத்தில் தடுமாறி, அந்தப் பக்கம் வேகமாக வந்த ஒரு லாரியில் அடிபட்டு... அந்த இடத்திலேயே இறந்தார். நண்பர் ஒருவர் சொன்னது. இப்படி நடந்ததா என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவில் இது போல நடக்கக் கூடியதுதான் என்பது நமக்குத் தெரியும்.
நம் நாட்டில் சினிமா நடிகர்களுக்காக, அல்லது விளையாட்டு (கிரிக்கெட்) வீரர்களுக்காக கூடும் கூட்டத்தைப் பார்த்திருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் காணப்படும் ஆர்வம், சில சமயம் வெறியாக மாறும் போது, அங்கு வெடிக்கும் வன்முறைகளில் ஒரு சில உயிர்கள் பறி போயுள்ளன.

சினிமா, விளையாட்டு இவைகளால் ஏற்படும் உயிர் பலிகளை விட இன்னும் அதிகமாக அரசியல் விளையாட்டில் பல உயிர்கள் பலியாவதையும் நம் நாட்டில் பார்த்து வருகிறோம். அரசியல் தலைவர்களுக்காகத் தீ குளிப்பது, ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்வது, வெட்டிக் கொல்வது... என்று நடக்கும் உயிர் பலிகள் நம்மை நிலை குலைய வைக்கின்றன. இதேபோல், கொள்கைகளுக்காக உயிரைப் பணயம் வைப்பவர்களை, உயிரைத் தியாகம் செய்பவர்களைப் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் நான் வியந்திருக்கிறேன், குழம்பியும் போயிருக்கிறேன்.
விடுதலைப் புலிகள், நாக்சலைட் போன்ற தீவிரக் கொள்கைக் குழுக்களில், மத அடிப்படையில் எழும் தீவிரக் கொள்கைக் குழுக்களில் தற்கொலைப் படையினர் என்றே ஓர் அங்கம் இருப்பது நமக்குத் தெரிந்த ஒரு விவரம். இந்தத் தற்கொலைப் படைகள் தன்னையும், பிறரையும் அழிக்கும் செய்திகளைக் கேட்கும் போது.. வியப்பு, குழப்பம் இரண்டும் எனக்கு ஏற்படும். வியப்பை விட, குழப்பம் தான் அதிகம் எழும்.
தலைவன், தொண்டன், உயிர்பலி இவைகளைப் பற்றி ஏன் இந்த விவாதம்? இன்றைய நற்செய்தியைக் கேளுங்கள். ஓரளவு தெளிவு கிடைக்கும்.

லூக்கா 9: 51-62 
இயேசுவைத் தலைவனாக ஏற்று அவரைப் பின் தொடர்ந்த சீடர்களை, அல்லது, பின் தொடர விழைபவர்களைப் பற்றி நான்கு சம்பவங்களை இப்போது வாசித்தோம். ஒவ்வொரு சம்பவத்திலும் நமக்குத் தேவையான பாடங்கள் பல உள்ளன.

முதல் சம்பவம்:
இயேசுவின் சீடர்களைப் பற்றியது. இயேசுவுக்கு ஓர் ஊரில் சரியான வரவேற்பு இல்லை. உடனே, அவரது சீடர்கள் யாக்கோபு, யோவான் இருவரும் ஆவேசத்தோடு இயேசுவிடம் வந்து, "தலைவா, நீங்க ‘சரி’ன்னு சொல்லுங்க... இந்த ஊரை உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்." என்றார்கள். யாக்கோபு, யோவான் இருவரும் 'இடியின் மக்கள்' அல்லவா? எனவேதான் இந்த ஆவேசம். நினைவிருக்கிறதா? இந்த இருவரும்தான் இயேசுவின் வலப்பக்கமும், இடப்பக்கமும் அமர விரும்பினார்கள். விண்ணப்பித்தார்கள். (மத். 20: 20-21)
நம்ம ஊர் அரசியல் தலைவன் என்றால், தொண்டர்களின் இது போன்ற ஆவேசத்தைக் கண்டு, அதுவும், தலைவனுக்காக ஊரையே அழிக்கத் துடிக்கும் அவர்களது ஆவேசத்தைக் கண்டு உள்ளம் குளிர்ந்து, அவர்கள் கேட்ட அந்தப் பதவிகளை ஒதுக்கிக் கொடுத்திருப்பார். இயேசு நம்ம ஊர் அரசியல் தலைவன் இல்லையே... அவர் உலகின் மற்ற எல்லாத் தலைவர்களையும் விட மிகவும் வித்தியாசமானவர் ஆயிற்றே!
ஆவேசப்பட்ட சீடர்களுக்கு இயேசு தந்த பதில் என்ன? "அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்." (லூக்கா 9: 55) அவர் கடிந்து கொண்டதற்குக் காரணம் இருந்தது. அந்த ஊரை அழிப்பதற்கு, வானத்திலிருந்து சக்தியைக் கொண்டு வர நினைத்தனர் அந்தச் சீடர்கள். கடவுளின் சக்திகளைத் தவறான நோக்கங்களுக்கு, அதுவும் அழிவான நோக்கங்களுக்குப் பயன்படுத்த எண்ணிய அவர்களது சுயநலத்தை அதிகம் கடிந்து கொண்டார்.
தொண்டர்களின் ஆர்வம், ஆவேசம், தன்னிடம் உள்ள அதிகாரம்... இவைகளை அழிவுக்குப் பயன்படுத்தும் தலைவர்களை எண்ணி நாம் வெட்கப்படுகிறோம். இந்தத் தன்னலத் தலைவர்களுக்காக, தங்கள் உயிரையும், பிற உயிர்களையும் பலியாக்கும் தொண்டர்களையும் எண்ணி வெட்கப்படுகிறோம். வேதனைப் படுகிறோம்.

இரண்டாவது சம்பவம்:
இயேசுவைத் தொடர நினைக்கும் ஓர் இளைஞன், "தலைவா, நீர் எங்கே சென்றாலும்,நானும் உம்மைப் பின்பற்றுவேன்." என்று சொல்கிறார். இயேசு அவரை ஆதங்கத்துடன் பார்க்கிறார். "எங்கே சென்றாலும்" என்று அந்த இளைஞன் சொன்னதுதான் அந்தப் ஆதங்கத்திற்குக் காரணம்... இயேசுவுக்கு, தான் எங்கே போகிறோம் என்பது ஓரளவு தெளிவாக இருந்தது. இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளில் வாசித்ததுபோல், அவர் எருசலேம் நோக்கிச் செல்ல தீர்மானித்து விட்டார். எருசலேம் நோக்கிச் செல்வது அங்கிருந்த அதிகாரங்களுடன் மோதுவதற்கு. இந்த மோதலில் தனக்கு நேர இருப்பதையும் ஓரளவு இயேசு உணர்ந்திருந்தார். இந்த நேரத்தில், இந்த மோதலில் இன்னும் ஒரு தொண்டரை ஈடுபடுத்த வேண்டுமா என்பதுதான் அவரது ஆதங்கம்.
மீண்டும் நம்ம ஊர்த் தலைவர்கள் தான் என் நினைவுக்கு வருகிறார்கள். எதிர்ப்பு, மோதல் என்று வந்தால், அதுவும் அந்த நேரத்தில் தன்னோடு தொண்டர்கள் இருந்தால், தொண்டர்களை அந்த மோதலில் ஈடுபடுத்தி விட்டு, ஒதுங்கி இருப்பது நம் தலைவர்களின் இலக்கணம். இயேசு இப்படி ஓரு தலைவன் இல்லையே...

தன் போராட்டத்தைப் பற்றி மறைமுகமாகச் சொல்லி, அதில் பங்கு பெற இயேசு அந்த இளைஞனுக்கு விடுக்கும் அழைப்பு அழகானது: "நரிகளுக்கு... இடமில்லை." (லூக். 9: 58) நரிகள், பறவைகள் இவைகளை எடுத்துக் காட்டாகக் கூறுகிறார் இயேசு. பொதுவாக மிருகங்கள், பறவைகள் புறப்படும் இடம், சேரும் இடம் இவைகளைத் தீர்மானிப்பது இல்லை. பறவைகள் ஒரு மரத்துக் கிளையிலிருந்து காலை பறக்க ஆரம்பிக்கும், பல திசைகளில் பரந்து திரிந்து பல மரக்கிளைகளில் அவ்வப்போது அமர்ந்து நாளைக் கழிக்கும். பொழுது சாயும் வேளை, அருகிலுள்ள ஏதாவது ஒரு மரக் கிளையில் இரவைக் கழிக்கும். இதே கதைதான் நரிகளுக்கும். இப்படி எந்த வித குறிக்கோளும் இல்லாமல் அலையும் மிருகங்கள், பறவைகள் இவைகளுக்குக் கூட பாதுகாப்பான இடங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், தனக்கு அந்தப் பாதுகாப்பு கூட இல்லை என்று தன் நிலையைத் தெளிவாக்குகிறார் இயேசு.

மூன்றாவது, நான்காவது சம்பவங்கள்:
இந்த சம்பவங்களில் இருவர் தங்கள் குடும்பம் சார்ந்த கடமைகளை, கணக்குகளை முடித்துவிட்டு, இயேசுவைப் பின் பற்ற தீர்மானிக்கின்றனர். இயேசு அவர்களிடம் சொல்லும் பதில்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது, கடுமையானவைகளாகத் தெரிகின்றன.
தன் பெற்றோரை அடக்கம் செய்துவிட்டு வர விழையும் இளைஞனிடம் "இறந்தோரைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்." என்கிறார் இயேசு. வீட்டாரிடம் விடை பெற்று வர விழைந்த மற்றோவரிடம், "வேண்டாம். இப்போதே புறப்படு. பின்னால் திரும்பிப் பார்க்காதே." என்று சொல்கிறார்.

இந்த ஞாயிறுத் திருப்பலியில் முதல் அரசர் நூலில் நாம் வாசிக்கும் ஒரு சம்பவம் இது. எலிசா என்ற இளைஞன் ஏர் பூட்டி உழுது கொண்டிருந்தார். எலியா என்ற இறைவாக்கினர் வந்து அவரை இறைவாக்கு உரைப்பவராகத் தேர்ந்து கொண்டார். "நான் என் தாய் தந்தையிடம் விடை பெற்று வர அனுமதி தாரும்." என்று கேட்கும் எலிசாவுக்கு, அந்த அனுமதியை எலியா கொடுத்தாரா என்பது சரிவரத் தெரியவில்லை. ஆனால், அதைத் தொடர்ந்து, எலிசா செய்த செயல் வியப்பைத் தருகிறது.
எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.
(1 அர. 19: 21)

1519ம் ஆண்டு Hernando Cortes என்ற படைத் தளபதி க்யூபாவை விட்டுத் தன் தொண்டர்களுடன் மெக்சிகோ வந்து சேர்ந்தார். தன்னைப் பின் தொடர்ந்தவர்கள் மெக்சிகோவில் மேற்கொள்ள விருக்கும் போராட்டங்களுக்காகப் பயந்து, மீண்டும் க்யூபாவிற்குத் திரும்பக் கூடாதென, அவர்கள் வந்தக் கப்பலை எரித்து விட்டார். துணிந்த பின் மனம் திரும்பிப் பார்க்கக் கூடாதென்ற கருத்தை வலியுறுத்த, இந்த நிகழ்வைச் சுட்டிக் காட்டி, ஆங்கிலத்தில் வழக்கமாக, "படகுகளை எரித்தல்" Burning the boats என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகின்றனர்.
தளபதி Cortes ன் செயல், தன்னைப் பின் பற்றுகிறவர்களைக் கட்டாயப் படுத்தும் ஒரு செயல். எலிசா செய்ததோ தானாகவே மனமுவந்து செய்தது. எலிசாவின் இந்தச் செயலை மனதில் வைத்து, இயேசு “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” (லூக். 9: 58) என்ற இந்த வரிகளைச் சொல்லியிருக்கலாம்.

நல்லது ஒன்று செய்ய வேண்டும் என்று மனதில் பட்டால், அதை உடனடியாகச் செய்து விடுவது மிகவும் நல்லது. மாறாக, அதை ஆறப் போட்டால்... ஆற்றோடு போய்விடும். அதாவது, நமது ஏனைய எண்ணங்கள், கவலைகள், கணக்குகள், வாழ்வின் நிர்ப்பந்தங்கள் என்ற அந்த வெள்ளம் இந்த நல்லெண்ணத்தை ஆற்றோடு கொண்டு செல்ல வாய்ப்புண்டு.
இயேசுவைப் பின் பற்றுவது, அவரைப் போல வாழ முற்படுவது மிக, மிக நல்லதொரு எண்ணம். அந்த எண்ணம் மனதில் தோன்றினால், முக்கியமாக, இளையோரே, உங்கள் உள்ளத்தில் இவ்வகை எண்ணங்கள் தோன்றும் போது, தாமதிக்க வேண்டாம். உங்கள் இறந்த காலத்தைப் புதைத்து விட்டு, பின் வந்து இயேசுவைப் பின் தொடரலாம் என்று தாமதிக்க வேண்டாம். இறந்தவைகள் புதைக்கப்படும்.
இயேசுவின் மீது உங்கள் கண்கள் பதிந்து விட்டால், பின்னே பார்க்க வேண்டாம். முன்னே செல்லுங்கள்.
 ஒன்றே செய்யினும், நன்றே செய்க; நன்றே செய்யினும், இன்றே செய்க.







All the contents on this site are copyrighted ©.