2010-06-26 16:16:56

உண்மைகள் வெளிவராது: இலங்கைக்கு ஐ.நா. கண்டனம்


ஜூன் 26,2010 "போர்க்குற்றம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு இலங்கை அனுமதி மறுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதனால், உண்மைகள் வெளிவராமலேயே போய்விடும்'என, ஐ.நா., கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்தாண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போது, மனித உரிமை மீறல், போர்க்குற்றம் ஆகியவை நடந்ததாக பரவலாக புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து. இதுகுறித்து விசாரிப்பதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மருகி தருஸ்மன் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை, ஐ.நா., அமைத்துள்ளது.

இந்தக் குழு, இலங்கைக்கு சென்று, போர்க்குற்றம் குறித்து விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், "இந்தக் குழுவினர் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க முடியாது' என, இலங்கை கண்டிப்பாகக் கூறி விட்டது.

இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் கூறுகையில், "போர்க்குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக, நாங்களே ஒரு குழு அமைத்துள்ளோம். இந்நிலையில், இந்த விடயத்தில் ஐ.நா., தலையிடுவதை அனுமதிக்க முடியாது. ஐ.நா., குழு இலங்கை வருவதற்கு விசா வழங்க மாட்டோம்'என்றார்.

இதுகுறித்து ஐ.நா., குழுவைச் சேர்ந்த மருகி தருஸ்மன் கூறுகையில்,"இலங்கையின் இதுபோன்ற நடவடிக்கைகள் துரதிர்ஷ்டவசமானது. ஐ.நா,, குழு இலங்கை செல்லாவிட்டால், போரின்போது அங்கு என்ன நடந்தது என்ற உண்மைகள் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விடும்'என்றார்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில்,"ஐ.நா.,குழுவின் விசாரணைக்கு இலங்கை அனுமதி அளிக்க வேண்டும். இந்த வாய்ப்பை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.








All the contents on this site are copyrighted ©.