2010-06-24 15:59:22

வாடகைத் தாய்மையைச் சட்டமயமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்குக் கேரள கத்தோலிக்கத் திருச்சபை எதிர்ப்பு


ஜூன்24,2010 வாடகைத் தாய்மையைச் சட்ட மயமாக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டிருப்பது, நாட்டில் குடும்பம் எனும் இலக்கணத்தையே மாற்றி விடும் என்று கேரளாவில் உள்ள சீரோ மலபார் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை கூறியுள்ளது.
ஒன்பது மாதங்களுக்கும் மேலாக, தாயின் உதரத்தில் வளரும் ஒரு குழந்தைக்கும், அதை உடலளவில் பேணும் பெண்ணுக்கும் இடையே உள்ள உறவானது, வாடகைத் தாய் என்ற கருத்தினால் பொய்யாக்கப்படுகிறது என்றும், இதனால் குடும்பம் சார்ந்த மதிப்பீடுகள் குலைவதற்கு வாய்ப்புகள் அதிகமாகும் என்றும் சீரோ மலபார் பேராயர் கர்தினால் வர்கி விதயத்தில் கூறினார்.
இந்தியாவில் குடும்பம் என்பது ஒரு பாரம்பரியமான, உறுதியான அடையாளமாய் இருப்பதை புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் குலைப்பது நியாயமல்ல என்றும், இது போன்ற செயற்கையான குழந்தைப்பேறு முறைகள் திருச்சபையின் படிப்பினைகளுக்கு எதிரானவை என்றும் அருட்தந்தை பால் தெலகாத் கூறினார்.Assisted Reproductive Technology அல்லது, ART என்று வழங்கப்படும் இந்தத் திட்டம், 5.4 பில்லியன் டாலர்கள், அதாவது, ஏறத்தாழ 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு தொழில் முறையை இந்தியாவில் உருவாக்கும் என்றும், இதனால் பல வெளிநாட்டு தம்பதியர் பயனடைவர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.