2010-06-22 16:04:44

விவிலியத் தேடல்


RealAudioMP3
அண்மையில் எனக்கு வந்த மின்னஞ்சலில் நான் வாசித்த இரு வரிகள் இவை: "பாம்பு உயிரோடிருக்கும் போது, எறும்புகளைச் சாப்பிடும். ஆனால், பாம்பு இறந்ததும், எறும்புகள் பாம்பைச் சாப்பிடும்." இறந்த தாவரம், உயிரினம் இவைகளை உண்பது மனிதர்களாகிய நமக்கும், பிற உயிரினங்களுக்கும் பழக்கமான ஒன்று. ஆனால், உயிரோடிருப்பதை உண்பதென்பது கொஞ்சம் அபூர்வமான விஷயம்.... ஒரு சில உயிரினங்கள் இப்படி உண்பதாக நாம் அறிவோம். மனிதர்கள் மத்தியிலும் இது போல் நடந்ததாக, இன்றும் நடப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்களை அவ்வப்போது கேள்விப்பட்டிருக்கிறோம்.

உயிரோடு உள்ள ஒன்றை உண்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கும் போது, குளவிக் கூடுகள் என் நினைவுக்கு வருகின்றன. குளவிகளின் கூடுகளைப் பார்த்திருப்பீர்கள் தானே. பல முறை அந்தக் கூடுகளில் புழுக்கள் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். அந்தப் புழுக்கள் குளவியின் சந்ததிக்கான உணவாம். அதுவும் எப்படி? அந்தப் புழு உயிரோடு இருக்கும்போதே உணவாகுமாம். அந்தப் புழுக்களைக் குளவி கொட்டும்போது, அந்தப் புழுக்கள் இறப்பதில்லை, உணர்வுகளை மட்டும் இழந்து உடல் முழுவதும் மரத்துப் போகின்றன. உடல் மரத்துப் போன நிலையில், அந்தப் புழு உயிரோடு அந்தக் குளவியின் சந்ததிக்கு உணவாகிறது.
உயிரியல் பற்றிய பாடம் அல்ல, அன்பர்களே... உயிரோடிருக்கும் போதே உணவாக மாறும் அந்தப் புழு நமது இன்றைய விவிலியத் தேடலுக்கு உதவியாக இருக்கும் ஓர் உருவகம். நாம் இன்று சிந்திக்க இருக்கும் திருப்பாடலில் வரும் ஒருவரி – அதாவது, "நானோ ஒரு புழு; மனிதனில்லை." என்ற வரி இந்தச் சிந்தனைகளை ஆரம்பித்து வைத்தது.

இன்றைய நமது விவிலியத் தேடலில் திருப்பாடல் 22ஐப் பற்றி சிந்திப்போம். துன்பத்தைப் பற்றிக் கூறும் விவிலியப் பகுதிகள் பல உள்ளன. யோபு என்ற முழு நூலும் துன்பத்தை மையமாகக் கொண்ட ஒரு தேடல் தானே.
துன்பத்தைப் பற்றிய விவிலியப் பகுதிகளில் "யாவேயின் துன்புறும் ஊழியன்" என்ற எண்ணத்தைத் தாங்கிய பகுதிகள் சிறப்பாகப் பேசப்படுகின்றன. இறைவாக்கினர் எசாயா நூலில் 53ம் அதிகாரம், திருப்பாடல்கள் 22, 69 ஆகியவை துன்புறும் ஊழியன், மேசியாவைப் பற்றிப் பேசுவதாக விவிலிய அறிஞர்கள் கூறியுள்ளனர்.
உயிரோடு இருக்கும் போதே அணு அணுவாக இறக்கும், மனதளவில் மற்றவருக்கு இரையாகும் ஒரு மனிதன் தன் நிலையை விவரிப்பதாக உள்ளது இந்தப் பாடல். இந்த வேதனையைக் கூறும் வரிகளில் ஒரு சிலவற்றைக் கேட்போம்.

திருப்பாடல் 22 1, 6-8, 12, 13-15, 17-18 
என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்?
நானோ ஒரு புழு, மனிதனில்லை: மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்: மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்: உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 'ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்: தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும் என்கின்றனர்.
காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன. அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்: இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள். நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்: என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின: என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று: என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று. என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது: என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது: என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர். என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்: என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்: என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.

இப்போது நாம் கேட்ட இந்த வரிகள் துயரத்தின் சிகரத்தில், வேதனையின் கொடுமுடியில் இருக்கும் ஒரு மனிதனிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள். இந்த வரிகள் எல்லாமே இயேசுவின் கல்வாரி அனுபவத்தைக் கூறும் வரிகள் என விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தத் திருப்பாடலை இயேசு சிலுவையில் தொங்கியபோது பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
"என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று ஆரம்பமாகும் இந்தத் திருப்பாடலின் வரிகள் இயேசு சிலுவையில் சொன்ன அந்த அற்புதமான ஏழு வசனங்களில் ஒன்று என்பதை நாம் அறிவோம். அதேபோல், "தந்தையே, உமது கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்." என்ற இயேசுவின் இறுதி வார்த்தைகளும் திருப்பாடல் 31ன் எதிரொலி... எனவே, இயேசு கல்வாரியில் அந்தச் சிலுவைச் சித்ரவதையின் கொடுமுடியில் திருப்பாடல்களைக் கூறி, தனக்கு ஆறுதல் தேடிக் கொண்டார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

உடல் வேதனைகளை விட, உள்ள வேதனைகள்தாம் ஒருவரை மிக அதிகமாய்ப் பாதிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. உடல் வேதனைகளிலும், ஒரு சில மிகக் கொடியது. உதாரணமாக, நகக் கணுக்களில் ஊசியை வைத்து குத்தும் போது, அல்லது, மரத்துப் போக வைக்கும் எந்த வித மருந்தும் இல்லாமல், பல்லைத் துளைத்து, நரம்பு வேர்களைத் தொடும் போது... நாம் அனுபவிக்கும் வேதனைகள், மிகக் கொடியது. எனவேதான், சித்திரவதைகளில் இந்த வேதனைகள் வழியே உண்மைகளை வரவழைக்கின்றனர்.
உடல் வேதனைகளில் இப்படி பல நிலைகள் இருப்பது போல், உள்ள வேதனைகளிலும் ஒரு சில சாதாரண வேதனைகள்... வேறு சில உள்ள வேதனைகளின் சிகரங்கள்.
அந்தச் சிகரங்களில் ஒன்று... நமக்கு மிக நெருங்கியவர்கள், வாழ் நாள் முழுவதும் நம்முடன் இருப்பவர்கள், நம்மை வெறுத்து ஒதுக்குதல், மறுதலித்தல், காட்டிக் கொடுத்தல், கைவிடல்...
திருப்பாடல் 22ன் ஆசிரியர் கூறும் வேதனையின் உச்சி என்ன? இறைவன் அவரைக் கைவிட்டது தான். அதுவும், ஊரார் முன்னிலையில் இறைவன் இவரைக் கை விட்டதால், ஊராரின் பழிச் சொல்லுக்கும் ஆளாக வேண்டிய நிர்ப்பந்தம்.

அனலில் இட்ட மெழுகு, தணலில் விழுந்த புழு... என வேதனையில் துடிக்கும் உள்ளத்தை நாம் வர்ணிக்கிறோம். திருப்பாடலின் ஆசிரியரும் இவைகளை ஒத்த வர்ணனைகளைத் தருகிறார்.
தான் எலும்புகள் கழன்று போன, அல்லது எலும்புகளே இல்லாதஒரு புழு. மனிதனில்லை. தன்னைச் சாவின் புழுதியில் இறைவன் போட்டு விட்டார். என்று கூறுகிறார் தாவீது.
திருப்பாடல் 22: 14-15
நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்: என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின: என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று: என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று. என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது: என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது: என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர். 
புழு, புழுதி... இவைகள் ஆழமான உருவகங்கள். மனித உள்ளம் மிக, மிகத் தாழ்ந்துப் போனதாய் உணரும் போது புழுவாகிப் போனதாக, புழுதியில் மிதிபடுவதாகப் பேசுகிறோம். வாழ்வு முடிந்து, அழுகல், அழிவு இவை ஆரம்பமாவதை உணர்த்தும் ஒரு முக்கிய அடையாளம்... புழுக்கள். யோபு தன் உடல் அழுக ஆரம்பித்து விட்டதைக் கூறும் வரிகள் நினைவுக்கு வருகின்றன:


யோபு 7: 5-6
புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின என் உடலை: வெடித்தது என் தோல்: வடிந்தது சீழ். என் நாள்கள்... நம்பிக்கையின்றி முடிவடைகின்றன. 
கோபத்தில் சாபமிடுகிறவர்களை நாம் பார்த்திருக்கிறோம். புழுதியை வாரி இறைத்து, சாபத்திற்கு ஆளாகும் மனிதர்களின் உடலில், செல்வத்தில் புழுக்கள் நிறைய வேண்டும் என்று சாபமிடுவார்கள். யோபுவின் நூலில் இதே போன்ற வரிகள் உள்ளன. தீயவர்களின் முடிவைக் கூறுகையில், யோபு பயன்படுத்தும் வார்த்தைகள் இவை:
யோபு 21: 26
புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்: புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே. 
இப்படி அழிவுக்கும், சாபத்திற்கும் அடையாளமாகும் புழுக்கள், புழுதி இவைகளின் மறுபக்கம் நம்மை வியக்க வைக்கும். மாற்றங்களுக்கும், மறு வாழ்வுக்கும் இவை அடையாளங்களாகின்றன. மண்ணோடு, புழுதியோடு தன்னை ஐக்கியமாக்கும் மண்புழு, அந்த மண்ணை, புழுதியை உயிரூட்டும் உரமாக மாற்றும் அற்புதம் நமக்குத் தெரிந்த ஒன்று. அதே போல், கூட்டுக்குள் போராட்டமே நிகழ்த்தும் கூட்டுப் புழுவின் மாற்றங்கள் வண்ணத்துப் பூச்சியாக வடிவெடுப்பதும் நாம் கண்டு வரும் அதிசயம் தானே.

தன்னைப் புழுவாக, புழுதியில் கிடப்பவராக உருவகிக்கும் தாவீது, புழுவின் அடையாளங்களான அழுகல், அழிவு இவைகளை மட்டும் நினைத்து இந்தத் திருப்பாடலைப் பாடியதாகத் தெரியவில்லை. மாறாக, அதேப் புழு மாற்றங்களையும், மறு வாழ்வையும் கொணரும் அந்தக் குணத்தையும் மனதில் வைத்தே, தன்னை ஒரு புழுவாக நினைத்திருக்க வேண்டும். எனவேதான், இந்தத் திருப்பாடல் அவநம்பிக்கையில் முடியாமல், நம்பிக்கையில் முடிகின்றது.

"இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று இந்தத் திருப்பாடலின் வரிகளைச் சிலுவையில் தன் கதறலாக்கிய இயேசு, எப்படி இறுதியில் "உமது கரங்களில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று வேறொரு திருப்பாடலின் நம்பிக்கை வரிகளோடு தன் வாழ்வை முடித்தாரோ, அதே போல், தாவீதும், இறைவனால் கைவிடப் பட்டதாக உணர்ந்த அந்த வேதனையில் இந்தத் திருப்பாடலின் முதல் பாதியில் புலம்பினாலும், பாதி பாடலுக்குப் பின் நம்பிக்கை தரும் வரிகளால் தன் நெஞ்சையும், நம் நெஞ்சங்களையும் நிறைக்கிறார். நம்பிக்கை தரும் அந்தப் பகுதியின் இறுதி வரிகள் இதோ:

திருப்பாடல் 22: 29-31
ஆண்டவருக்கு அஞ்சுவோரே: அவரைப் புகழுங்கள். மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்: புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.
 புழுவும், புழுதியும் அழிவுக்கும், அழுகிப்போவதற்கும் இலக்கணமாகலாம். ஆனால், அதே புழுவும், புழுதியும் மாற்றங்கள், மறு வாழ்வு என இலக்கியங்களாவதும் உண்மை.







All the contents on this site are copyrighted ©.