2010-06-22 14:41:23

நகரைத் தூய்மையாக்கும் நடவடிக்கையில் மக்களின் மாண்பும் உரிமைகளும் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் சான் சால்வதோர் துணை ஆயர்.


ஜூன் 22, 2010 சான் சால்வதோர் நகராட்சி நகர்ப்புறங்களையும் சாலைகளையும் சுத்தப்படுத்துகிறேன் என அண்மையில் மேற்கொண்ட செயல்பாடுகள் மக்களின் மாண்பையும் உரிமைகளையும் மீறுவதாக இருந்தது எனக் குற்றஞ்சாட்டினார் அந்நகர் துணை ஆயர் கிரகோரியோ ரோஸா சாவேஸ்.

அரசின் நகரைத் தூய்மையாக்கும் நடவடிக்கையால் மக்கள் சில இடங்களிலிருந்து குடிபெயர வேண்டியிருந்தது என்ற ஆயர், இந்நடவடிக்கைக் குறித்து முதலிலேயே மக்களுடன் விவாதித்திருக்க வேண்டிய வாய்ப்பை நகராட்சி தவறவிட்டுள்ளது என்றார்.

எந்த ஒரு பொதுநலத்திட்டமும் மக்கள் நலனை மையம் கொண்டதாக இருக்கவேண்டும் எனவும் விண்ணப்பித்தார் ஆயர் சாவேஸ்.

சாலையோர வியாபாரங்களைத் தடை செய்ய அரசு முயல்வதற்குமுன் அது உருவாவதற்கான காரணங்களைக் கண்டு அகற்ற முன்வர வேண்டும் எனவும் கூறிய ஆயர், வேலைவாய்ப்பின்மைகளையும் ஏழ்மையையும் இதற்கு உதாரணங்களாகக் காட்டினார்.

சாலையோர வியாபாரிகளுக்கும் நகராட்சிக்கும் இடையே நடுநிலையாளராகச் செயல்பட்டு இப்பிரச்னைக்குத் தீர்வு காண உதவ தலத்திருச்சபை எப்போதும் தயாராக உள்ளது என மேலும் கூறினார் சான் சல்வதோர் துணை ஆயர் சாவேஸ்.








All the contents on this site are copyrighted ©.