2010-06-21 16:01:45

தெற்கு சூடான் குறித்த கருத்துக் கணிப்பு அரசியல் ஆதாயங்களுக்காகப் பலியாகக் கூடாதென சூடானிலுள்ள இரு கத்தோலிக்க ஆயர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்


ஜூன்21, 2010. தெற்கு சூடான் தனியொரு சுதந்திர நாடாகப் பிரிவதற்கான கருத்துக் கணிப்பு மனித மாண்பு, நீதி, ஒற்றுமை ஆகிய நலன்களைப் புறந்தள்ளும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பலியாகக் கூடாதென சூடானிலுள்ள இரு கத்தோலிக்க ஆயர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கத்தோலிக்கர்களை அதிகமாய் கொண்டிருக்கும் தெற்கு சூடான், வட சூடானுடன் கடந்த 21 ஆண்டுகளாய் மேற்கொண்டிருக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் வருகிற 2011ம் ஆண்டு, ஜனவரியில் தெற்கு சூடான் தனியொரு சுதந்திர நாடாகப் பிரிவதற்கான இந்தக் கருத்துக் கணிப்பு நடைபெற உள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்பும், அதைத் தொடரும் செயல் திட்டங்களும் இரு பகுதி மக்களுக்கும் நன்மைகளைக் கொண்டு வர வேண்டுமே தவிர, இரு பகுதிகளிலும் உள்ள அடிப்படை வாதக் குழுக்களோ, இந்த முயற்சிகளை முன்னின்று நடத்தும் அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள், அரசு அதிகாரிகளோ பிற தனிப்பட்ட ஆதாயங்களுக்காக இந்த ஒற்றுமை முயற்சிகளைத் திசை திருப்பக் கூடாதென சூடான் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவரான ஆயர் Rudolf Deng Majakம், Khartoum மறைமாவட்டத்தின் துணை ஆயர் Daniel Adwokம் கூறியுள்ளனர்.

தென் சூடான் பகுதியில் எண்ணெய் வளம் அதிகமாய் இருப்பதால், பல சுயநலக் குழுக்கள் இந்த சமாதான முயற்சிகளுக்கு முட்டுக் கட்டையாய் இருக்கின்றன என்றும் ஜனவரியில் நடைபெறும் இந்தக் கருத்துக் கணிப்பிற்குப் பிறகு, வடக்கு பகுதியில் உள்ள சிறுபான்மை இஸ்லாமியரும், தெற்குப் பகுதியில் உள்ள சிறுபான்மை கிறிஸ்தவர்களும் பயமின்றி தங்கள் மதம் சம்பந்தமான செயல்பாடுகளில் ஈடுபட அனைவரும் முயற்சிகள் செய்ய வேண்டுமென்றும் ஆயர் Deng மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.