2010-06-19 14:33:14

விசுவாசிகள் திருவழிபாட்டில், உயிரூட்டமுடன் கலந்து கொள்வதற்கு ஆவன செய்ய வேண்டியது ஆயர்களின் முக்கிய கடமை - திருத்தந்தை


ஜூன்19,2010 திருச்சபையின் உண்மையான இயல்பை வெளிப்படுத்தும் பேருண்மையாக அமைந்துள்ள திருவழிபாட்டில், விசுவாசிகள் உயிரூட்டமுடன் கலந்து கொள்வதற்கு ஆவன செய்ய வேண்டியது ஆயர்களின் முக்கிய கடமையாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

நம் ஆண்டவரின் திருவிருந்துக் கொண்டாட்டங்களில், குறிப்பாக, ஞாயிறு திருப்பலியில் விசுவாசிகள் பங்கு கொள்ளச் செய்வதற்கு ஆயர்கள் அக்கறை எடுக்குமாறு, பிரேசில் நாட்டு கிழக்குப் பகுதியின் 35 ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை.

ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்தித்து தங்களது மறைமாவட்டங்கள் பற்றிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் அட் லிமினாவை முன்னிட்டு இச்சனிக்கிழமை வத்திக்கானில், தான் சந்தித்த இந்தப் பிரேசில் ஆயர்களிடம், கடவுளை மறந்து வாழும் இக்கால மக்கள் தனியாகவும் குழுவாகவும் செபிப்பதற்கு ஏற்ற இடங்களும் சூழல்களும் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்றார் பாப்பிறை.

விசுவாசத்தைப் போதிப்பவர்கள் முதலில், அதை வாழ்ந்து காட்டுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை ஆயர்களிடம் நினைவுபடுத்திய திருத்தந்தை, மிகுந்த அர்ப்பணம் மற்றும் அன்புடன் திருச்சபைக்கு பிரேசில் ஆயர்கள் ஆற்றி வரும் பணிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.

மேலும், இஞ்ஞாயிறன்று உரோம் மறைமாவட்டத்தின் 14 தியாக்கோன்களைக் குருக்களாகத் திருநிலைப்படுத்துகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.