2010-06-19 14:34:04

முப்பது இலட்சம் பெண் அகதிகளின் நெருக்கடி நிலைகள் களையப்படுவதற்குச் சர்வதேச காரித்தாஸ் நிறுவனம் வேண்டுகோள்


ஜூன்19,2010 இவ்வுலகிலுள்ள முப்பது இலட்சம் பெண் அகதிகளின் நெருக்கடி நிலைகள் களையப்படுவதற்கு உலக சமுதாயம் நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச காரித்தாஸ் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜூன்20, இஞ்ஞாயிறன்று உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட சர்வதேச காரித்தாஸ் நிறுவனம், தங்கள் வீடுகளைவிட்டு நீண்ட காலத்திற்கு வெளியேறும் அகதிகளுள் பெண் அகதிகளே பெரும்பாலும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில், இவர்கள் வன்முறைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும், அத்துடன் இவர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அந்நிறுவனத்தின் கொள்கைப்பிரிவு இயக்குனர் Martina Liebsch உலக சமுதாயத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று உலகில் சுமார் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் பேர் அகதிகள். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். உலக அகதிகளில் 49 விழுக்காட்டினர் பெண்கள் என்று காரித்தாஸ் உதவி நிறுவனம் அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.