2010-06-18 14:59:34

ஜூன் 19. நாளும் ஒரு நல்லெண்ணம்


ஒவ்வொரு செயலும் தன் தன்மைகளுக்கு சம விகிதத்தில் எதிர் செயலைத் தோற்றுவிக்கின்றது என்பது நியூட்டன் விதி.

"வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்கிறது பழமொழி.

விளைவுகள் ஒவ்வொன்றும் செயலின் நோக்கத்தையும் செயல்முறையையும் அது ஆற்றப்பட்ட சூழ்நிலையையும் பொறுத்தது.

அதன் பாதிப்போ, விளைவுகளின் அணுகுமுறையையும், பதில் மொழியையும் சார்ந்தது.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்பார்.

பாவமும் புண்ணியமும் அதற்குரிய பலன்களை அளந்தேத் தந்துவிடும், இறந்த கால நடவடிக்கைகளை இமை முன் கொணர்ந்து விடும்.

"ஆசையே துன்பத்திற்குக் காரணம்" என்றார் புத்தர்.

விளைவுகள் சரிதான். நம் விளக்கங்கள் என்ன?

வேண்டாதவன் கஷ்டப்பட்டால், இறைவன் கொடுத்த தண்டனை என குதூகலிக்கிறோம்.

அதுவே வேண்டியவன் எனில், "யார் செய்த பாவமோ, பாவம் இவன் கஷ்டப்படுகிறான்" என பரிதாபப்படுகிறோம்.

விளைவுகளின் ஆராய்ச்சியில் இரு வேறு நோக்கங்களை புகுத்திப் பயணிக்கிறோம்.

எல்லா விளைவுகளும் நியாயத்தராசு கொண்டு கணிக்கப்படுவதில்லை.

நாமாகவே தீர்வுகளை வகைப்படுத்திக்கொண்டு வாழ்கிறோம்.

நமக்கு நாமே இதமாய், மிதமாய், வேறு விதமாய்த் தீர்ப்பு எழுதக் கற்றுக்கொண்டிருக்கிறோம்.

நம்மைப் பாதிக்கும்போது மட்டும் தான் வேறு விளக்கங்கள் தேவைப்படுகின்றன.

விளைவுகள் என்னவோ பொதுதான்.

எப்படி தீர்ப்பு எழுதுகிறோம் என்பதில்தான் வேறுபடுகிறோம், வேறுபடுத்துகிறோம்.








All the contents on this site are copyrighted ©.