2010-06-18 14:58:54

கியூபாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான உறவுகள் மேலும் மேலும் வலுப்படுத்தப்படும் - பேராயர் மம்பர்த்தி


ஜூன்18,2010 கியூபா நாட்டுக்கும் வத்திக்கானுக்கும் இடையேயான உறவுகள் மேலும் மேலும் உறுதிப்படுத்தப்படும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் பேராயர் தொமினிக் மம்பர்த்தி.

கியூபத் திருச்சபை சிறப்பித்து வரும் சமூக வாரத்தை முன்னிட்டு அந்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் திருப்பீடத்தின் நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் மம்பர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.

கியூபாவுக்கும் வத்திக்கானுக்கும் இடையே அரசியல் உறவுகள் உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிகழ்வுகளில் தான் கலந்து கொள்வது குறித்த மகிழ்ச்சியையும் பேராயர் தெரிவித்தார்.

1935ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி இவ்வுறவு உருவாக்கப்பட்டது. 1959ம் ஆண்டு கியூபாவில் ஏற்பட்ட புரட்சிக்குப் பின்னர் அந்நாடு கம்யூனிச நாடாக அறிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும், இவ்வரசியல் உறவு முறிக்கப்படாமல் இருந்து வந்துள்ளது.

மேலும், கியூபா நாட்டுப் பாதுகாவலித் திருவுருவம் கண்டுபிடிக்கப்பட்டதன் 400ம் ஆண்டையொட்டி, அதாவது 2012ம் ஆண்டில் திருத்தந்தை அந்நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொள்ளக்கூடும் எனத் தலத்திருச்சபை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

1612ம் ஆண்டு El Cobre எனும் நகரில் மூன்று பேர் கடற்கரையோரத்தில் மிதந்த ஒருமரச்சிலையைக் கண்டெடுத்தனர். அதில் நானே பிறரன்பின் கன்னி என்று எழுதியிருந்தது. 1916ம் ஆண்டில் இவ்வன்னை கியூபா நாட்டுப் பாதுகாவலி எனவும் அறிவிக்கப்பட்டாள்.








All the contents on this site are copyrighted ©.