2010-06-16 15:38:19

பாலைவனமாதல் மற்றும் வறட்சியை ஒழிப்பதற்கான உலக நாள் - பான் கி மூனின் செய்தி


ஜூன்16,2010 ஐ.நா.வின் மில்லென்னிய வளர்ச்சித்திட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் உலகின் வறண்டநிலப் பகுதிகளில் வாழும் நூறு கோடிக்கு மேற்பட்ட ஏழை மற்றும் நலிந்த மக்கள் கடும் சவால்களை எதிர்நோக்குகின்றனர் என்று பான் கி மூன் கூறினார்.
பாலைவனமாதல் மற்றும் வறட்சியை ஒழிப்பதற்கான உலக நாள் இவ்வியாழனன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் மூன் இவ்வாறு கூறினார்.
உலகில், மேய்ச்சல் நிலங்களில் ஏறத்தாழ நான்கில் மூன்று பகுதி பாலைநிலமாகி வருவதற்கான அடையாளங்கள் தெரிந்து வருகின்றன என்றும், கடந்த நாற்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளில், உலகின் சாகுபடி நிலங்களில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி, பயனற்ற நிலங்களாக மாறியுள்ளன என்றும் அச்செய்தி கூறுகிறது.
வறண்ட நிலங்கள், எண்ணற்ற பலவகை உயிரினங்கள் வாழுகின்ற மற்றும் அவற்றின் இனப்பெருக்கம் இடம் பெறுகின்ற பகுதிகள் என்பதை இந்தச் சர்வதேச உயிரியல் பன்மைத்தன்மை ஆண்டில் நினைவில் கொள்ளுமாறும் மூனின் செய்தி வலியுறுத்துகின்றது. வறண்ட நிலங்களில் வாழும் உயிரினங்கள், இப்பூமிக்குத் தேவையான பெருமளவு கார்பனை வெளியேற்றுவதை உணர்ந்து இந்த நிலங்களைப் பாதுகாப்பதற்கு எல்லாரும் நடவடிக்கை எடுக்குமாறு, இவ்வுலக நாளில் கேட்டுக் கொள்வதாக, ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.