2010-06-16 15:36:42

தென்னாப்ரிக்க ஆயர் பேரவையின் ஆதரவுடன் சமாதானக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன


ஜூன்16,2010 தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இணையாக, தென்னாப்ரிக்க ஆயர் பேரவையின் ஆதரவுடன் சமாதானக் கோப்பை என்ற கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூன் 5ம் தேதி ஆரம்பமான இந்த போட்டிகளில் பல நாடுகளிலிருந்து 26 அணிகள் பங்கேற்று வருகின்றன.
தென் ஆப்ரிக்க ஆயர் பேரவையுடன் சேர்ந்து ‘Damietta அமைதி முயற்சி’ என்ற நிறுவனமும், காரித்தாஸ் அமைப்பும் இந்தப் போட்டிகளை நடத்தி வருகின்றன.
முஸ்லிம், கிறிஸ்தவர்கள் மத்தியில் சண்டைகள் நிறைந்த நைஜீரியா போன்ற பல நாடுகளிலிருந்து வந்துள்ள அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டிகள் வழியே, மதம், இனம் என்ற அடிப்படையில் பிரிந்து கிடக்கும் ஆப்ரிக்க நாடுகளில் வளரும் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால், அமைதி முயற்சிகள் பலனளிக்கும் என்று இப்போட்டிகளை வழிநடத்தும் கப்புச்சின் சபையைச் சார்ந்த குரு Kees Thonissen கூறினார்.மேலும், உலகின் கவனத்தை ஈர்த்துவரும் இந்த உலகக் கோப்பை போட்டிகளை அடுத்து, தென் ஆப்ரிக்க திருச்சபை "Church on the ball" என்ற தலைப்பில் இணையதளத்தில் தினமும் செய்திகளை வெளியிட்டு வருகிறது. தென் ஆப்ரிக்காவில் பல்வேறு பங்கு தளங்களிலும், வேறு பல அமைப்புகள் வழியாகவும் ஆப்ரிக்க இனங்களுக்கிடையே உருவாக்கப்படும் ஒற்றுமை முயற்சிகள் குறித்து ஒவ்வொரு நாளும் இந்த இணைய தளத்தில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. கர்தினால் Wilfrid Napier இந்த இணையதளத்தின் துவக்கத்தில் வாழ்த்துச் செய்தி அனுப்பியது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.