2010-06-16 16:33:46

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


RealAudioMP3 ஜூன் 16, 2010. கோடைக்கால வெயில் ரோம் நகரைத் தன் பிடியில் வைத்து மக்களை வியர்வைச் சிந்த வைத்துக் கொண்டிருந்தாலும் திருத்தந்தையின் புதன் மறைபோதகத்திற்குச் செவிமடுக்க வரும் கூட்டத்திற்குக் குறைவில்லை. புனித பேதுரு பேராலய வளாகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் பல ஆயிரக்கணக்கானோர் வெயிலையும் பொருட்படுத்தாது கூடியிருக்க, திருத்தந்தையும் தன் புதன் மறைபோதகத்தின் தொடர்ச்சியாக புனித தாமஸ் அக்குவினாஸ் பற்றி மீண்டும் எடுத்தியம்பினார்.

மத்தியக் காலக் கிறிஸ்தவக் கலாச்சாரம் குறித்த நம் மறைக்கல்வி போதனையின் தொடர்ச்சியாக, புனித தாமஸ் அக்குவினாஸின் படிப்பினைகள் பக்கம் இன்று திரும்புவோம் எனத் தன் உரையைத் துவக்கினார் பாப்பிறை. இவரின் படிப்பினைகளையே திருச்சபை தொடர்ந்து, உறுதியான இறையியல் முறையின் எடுத்துக்காட்டு வடிவமாக தூக்கிப்பிடித்து வருகின்றது. விசுவாசத்திற்கும் பகுத்தறிவுக்கும் இடையேயான இணக்கத்தை வலியுறுத்திய தாமஸ் அக்குவினாஸ், அவைகளின் தனித்தன்மையையும் அவைகள் ஒன்றையொன்று நிறைவு செய்பவைகளாக உள்ளதையும் மதித்தார். இறைவார்த்தையில் தன் மூலத்தைக் கொண்டிருக்கும் உண்மையை அறிவதற்கான இரு வழிகளே பகுத்தறிவும் விசுவாசமும். பகுத்தறிவால் இயற்கையாகவே அறிந்துகொள்ளவல்ல உண்மைகளின் மீது முழு ஒளியை வீசி உதவுகிறது விசுவாசம். மூவொரு இறைவன் மற்றும் தெய்வீக மறையுண்மைகள் பற்றிய மேலான அறிவை இறைவெளிப்பாடுகள் மூலம் பெறுவதன் வழி இவ்வொளி விசுவாசத்திற்கு கிட்டுகிறது. அதே வேளை பகுத்தறிவோ, விசுவாசத்தின் நம்பகத்தன்மை, உள் உறுதிப்பாட்டு நிலை, அறிவுபூர்வ நிலை ஆகியவைகளை வெளிப்படுத்தவும், விசுவாசத்தின் படிப்பினைகளுக்கு ஆதரவளித்து பக்கபலமாய் நிற்கவும் செய்கின்றது.

மனிதனின் உள்ளார்ந்த ஆவலாய் இருக்கும் மகிழ்வைத் தேடி அடைவதற்கு உதவும் வகையில் மனித இயல்பானது இறை அருளால் கட்டியெழுப்பி, உயர்த்தப்பட்டு முழுமையடைய வைப்பது குறித்த உண்மையானது, விசுவாசத்திற்கும் பகுத்தறிவுக்கும் இடையே இருக்கும் ஒன்றையொன்று நிறைவுச் செய்யக்கூடிய உறவினால் வெளிப்படுத்தப்படுகின்றது. இயல்பான ஒழுக்க ரீதிச் சட்ட விதிகளை இயல்பாகவே ஏற்றுக்கொள்ளும் நிலையில் நாம் உள்ளோம் என்ற தாமஸ் அக்குவினாஸின் உறுதிப்பாடானது இன்றும் உண்மையானதாய் உள்ளது. ஏனெனில் மனித இயல்பின் உண்மையில் வேரூன்றப்பட்டுள்ள இச்சட்டமானது, மனித மாண்பையும் சர்வதேச மனித உரிமைகளையும் மதிப்பதற்கான அடிப்படையாக உள்ளது. ஆழமான மற்றும் உயிரோட்டமான கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து பிறந்த ஞானம் மற்றும் புரிந்துகொள்ளுதலை நமக்குப் பெற்றுத்தருமாறு, கத்தோலிக்கப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பாதுகாவலரான புனித தாமஸ் அக்குவினாஸை நோக்கி இறைஞ்சுவோம் என உரைத்து தன் புதன் மறைபோதகத்தை நிறைவுச் செய்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

RealAudioMP3 மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.