2010-06-16 15:34:31

கலை வழி ஆன்மீகத்தை உருவாக்க இளையோர் முயலவேண்டும் - Madrid துணை ஆயர்


ஜூன்16,2010 அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் வைபவங்களில் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்ட பல சிலைகள் ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்படும் என்று Madrid உயர் மறைமாவட்ட துணை ஆயர் Cesar Franco கூறினார்.
அழகு, கலை வழி ஆன்மீகத்தை உருவாக்கும் நோக்குடன், ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல சிலைகள் Madrid கொண்டு வரப்படும் என்று துணை ஆயர் Franco கூறினார்.
2011ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி, திருத்தந்தை தலைமை தாங்கி நடத்தும் சிலுவைப் பாதையில் இந்த உருவங்களும் பங்கு பெறும் என்று துணை ஆயர் மேலும் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஸ்பெயின் நாட்டில் புனித வாரத்தில் கிறிஸ்துவின் பாடுகளைக் குறிக்கும் பல உருவச் சிலைகள் Madrid வீதிகளில் எடுத்துச் செல்லப்படுவது பழக்கம் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்த ஊர்வலம் நடத்தப்படுவது கலைப் பொருட்களைக் கண்காட்சியாக்கும் நோக்கத்தினால் அல்ல என்றும், மாறாக, ஸ்பெயினில் உள்ள பிரபலமான பக்தி முயற்சியின் மூலம் மக்களிடம் ஆன்மீகத்தை வளர்ப்பதே என்றும் இந்த உலக இளையோர் நாள் ஏற்பாடுகளைச் செய்து வரும் Javier Cremades கூறினார்.இந்த உலக இளையோர் நாளைக் குறித்த இணையதள செய்திகள் 16 மொழிகளில் வெளியாவதாகவும், ஈராக், இந்தோனேசியா போன்ற பல நாடுகளிலிருந்தும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளையோர் இந்த இணையதளத்தில் வரும் செய்திகளைத் தினமும் பார்த்து வருவதாகவும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.