2010-06-15 15:40:38

பாகிஸ்தானின் தேவநிந்தனைச் சட்டம் அகற்றப்பட விண்ணப்பிக்கிறது Aid to the Church in Need அமைப்பு


ஜூன் 15, 2010. பாகிஸ்தானில் பெரும் அநீதச்செயல்களை அனுமதிக்கும் தேவநிந்தனைச் சட்டம் அகற்றப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தில் கையெழுத்திடவேண்டும் என உலகின் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது Aid to the Church in Need என்ற கிறிஸ்தவ அமைப்பு.
இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தானில் 1000 பேர் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக தண்டணைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளனர் எனக் கூறும் இவ்வமைப்பு, கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்திற்காக இந்நாட்டில் 5 வயது குழந்தை ஒன்று நெருப்பிட்டுக் கொளுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த வாரமே கணனியின் பன்வலைத்தொடர்பகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்விண்ணப்பத்தில் ஏற்கனவே 4600பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோரின் ஆதரவுக் கையெழுத்து எதிர்பார்க்கப்படுவதாகவும் இவ்வமைப்பின் பன்வலைத் தொடர்பகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் சிறுபான்மை சமுதாயத்திற்கான உரிமைகள் மதிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் இதில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 1.6 விழுக்காட்டடினரே கிறிஸ்தவர்கள். கடந்த 24 ஆண்டுகளில் இந்நாட்டில் 993 அப்பாவி மக்கள் தேவநிந்தனைச் சட்டத்தின் கீழ் பழிவாங்கப்பட்டுள்ளனர், இதில் 120 பேர் கிறிஸ்தவர்கள். தேவநிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டுபவர் எவ்வித சாட்சியத்தையும் கொணர வேண்டும் என்பது தேவையில்லை என்பதால் எதிரிகளைப் பழிவாங்க இச்சட்டம் பலவேளைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.







All the contents on this site are copyrighted ©.