2010-06-15 08:10:37

திருத்தந்தையுடனான முழு ஐக்கியத்தை ஊக்குவிக்க அழைப்பு


ஜூன் 14, 2010. ஆயர்களுக்கும் விசுவாசிகளுக்கும் இடையே நிலவும் ஒற்றுமையின் நிலையான ஊற்றாகவும் அடிப்படையாகவும் திருத்தந்தை இருப்பதால் அவருக்கும் திருச்சபைப் படிப்பினைகளுக்குமான திருச்சபை அங்கத்தினர்களின் முழு ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப உதவ வேண்டும் என திருச்சபைப் படிப்புகளுக்கான திருப்பீடக்கழகத்தின் அங்கத்தினர்களை விண்ணப்பித்தார் பாப்பிறை.

திருச்சபைப் படிப்புகளுக்கான திருப்பீடக்கழகத்தின் அங்கத்தினர்களை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய பாப்பிறை, திருச்சபை ஐக்கியத்திற்கு முதன்மை இடம் கொடுத்து ஒவ்வொருவரும் ஆர்வம் கொண்டுச் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

திருச்சபை மீதான ஆழமான அன்புடனும், ஒருவர் ஒருவர் மீது பொறுமையுடன் கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையுடனும், அதேவேளை ஆயர்களின் முயற்சிகளை மதித்துக் கொண்டாடுவதுடனும் திருச்சபைப் படிப்பினைகளை ஏற்றுச் செயல்படுத்தமுடியும் என்றார் பாப்பிறை.

ஒருவர் தன் திட்டங்களையும், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளையும் தியாகம் செய்து இறை அழைத்தலுக்கு பதிலுரைத்து குருவாவது என்பது ஒருவரின் தனித்தன்மையை கீழ்மைப்படுத்துவதாகாது மாறாக பெருமைப்படுத்துவதாகும் எனவும் திருச்சபைப் படிப்பினைகளுக்கான திருப்பீடக்கழக அங்கத்தினர்களிடம் கூறினார் பாப்பிறை.

நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கான திருப்பீடப்பிரதிநிதிகளின் தனித்தன்மை வாய்ந்த பணிகள் பற்றியும் இவ்வுரையின்போது குறிப்பிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.