2010-06-14 15:48:34

2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டி


ஜூன்14,2010 RealAudioMP3 இங்கு உரோமையில் நேற்று மாலை ஒரு முக்கியமான தகவலைச் சொல்வதற்காக ஓர் அருட்பணியாளரை அவரது செல்லிட பேசியில் தொடர்பு கொள்ள பகீரத முயற்சி செய்தேன். ம்ஹூம்.... மனிதர் கிடைக்கவே இல்லை. அவரது தொலைபேசி எண் மாறிவிட்டதோ என்ற சந்தேகத்தில், அடுத்தநாள் காலை மீண்டும் எண்களைச் சுழற்றினேன். மனிதர் இணைப்பில் வந்தார். என்ன சாமி, நேற்று எங்கே போனீங்க என்று கேட்டால், அவர் சர்வசாதாரணமாக, தொலைக்காட்சியில் கால்பந்து மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டைப் பார்ப்பதற்குத் தொந்தரவாக இருக்குமே என்று நினைத்து கைத்தொலைபேசியை அறையிலேயே விட்டுச் சென்றேன். எங்கள் துறவு இல்லத்திலுள்ள ஓர் அறையில் பெரிய திரையில் நாங்கள் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தோம் என்றார். அப்புறம் என்ன... சொல்ல வேண்டிய தகவலைச் சொன்ன பின்னர், நானும் விடவில்லை. அன்று விளையாடிய அணிகள் பற்றி சிறிதுநேரம் விமர்சனம் செய்து கொண்டிருந்தோம். தென்னாப்ரிக்க நாட்டின் ஜோஹானஸ்பர்க்கில் நடைபெற்று வரும் இந்த 19வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடும் 32 நாடுகளில், ஆசியாவிலிருந்து ஜப்பான், தென்கொரியா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே விளையாடுகின்றன. ஆனாலும், நம் நாட்டு அணிகள் விளையாடுகிறதோ, இல்லையோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இரவெல்லாம் விழித்திருந்து இப்போட்டிகளை இரசிப்பது நம் வழக்கமாகிவிட்டது. நாம் அவ்வளவு தூரம் விளையாட்டுப் பிரியர்களாக இருக்கிறோம்.

இந்தப் பிரியம் எந்த அளவுக்கு இருக்கின்றது என்றால், இதில் பித்துப் பிடித்தவர்கள் போல் தெரியும் நம் கேரளக்காரர்கள் மத்தியில் இதுவே வில்லங்கமாக இருப்பதாக தமிழ்ப் பத்திரிகை ஒன்று சொல்லியிருக்கிறது. எந்த அணி, கோப்பையை வெல்லும் என்பதை மையமாக வைத்து கேரளாவில் சூதாட்ட அலை சுனாமியாகச் சுத்துகிறதாம். குக்கிராமங்களில்கூட இலட்ச ரூபாய் அளவுக்குச் சூதாட்டத் தொகையை நிர்ணயித்திருக்கிறார்களாம். இந்த விடயத்தில் நகரங்களில் கோடிக்கணக்கில் பணம் புரளுகிறதாம். கேரள உளவுத்துறை இதை அப்படியே அரசின் கவனத்துக்குக் கொண்டு போயிருப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. கேரள மாநிலத்தில் மட்டுமல்ல, ஹாங்காங், மலேசியா போன்ற பகுதிகளிலும் இதுமாதிரி சூதாட்டம் நடக்கின்றதாம். ஹாங்காக்கில் இம்மாதிரி சூதாடுவோரில் பெரும்பாலானோர் 18க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். கால்பந்து போட்டியை வைத்து விளையாடும் சூதாட்டம் ஏமாற்றத்திற்கும் இட்டுச் செல்லக்கூடும் என்று ஹாங்காக் இயேசு சபை அறநெறியியல் பேராசிரியர் Robert Ng Chi-fun எச்சரித்திருக்கிறார். இந்த விளையாட்டைப் பார்க்கும் எண்ணத்தில் சிலர் பொய்யாக மருத்துவ விடுப்பு எடுக்கின்றனர், இது குறித்துத் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டுமென்று மலேசியத் தொழிற்சங்கத் தலைவரும் எச்சரித்துள்ளார்.

இந்த உலகக் கோப்பையில் விளையாடும் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கப் போகிறார்கள். இப்போட்டியை நடத்தும் நாட்டுக்கும் பில்லியன் கணக்கில் வருமானம் கொட்டப்போகிறது. இதனைச் சூதாட்டமாக மாற்றும் தரகர்களும் பணமழையில் குளிக்கப் போகிறார்கள். இந்தப் போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் ஈ.எஸ்.பி.என். டி.விக்கு ஒரு மாதத்தில் 150 கோடி ரூபாய் இலாபமும் கிடைக்குமாம். ஆனால் வெற்றி யாருக்கு என்று சூதாட்டத்தில் ஈடுபடும் கால்பந்து வெறியர்களின் கதி.....? இந்தக் கால்பந்து விளையாட்டுப் பலரை, குறிப்பாக, மாதச் சம்பளத்துக்கு வேலை செய்யும் தொழிலாளர் பலரை ஓட்டாண்டியாக்கி இருக்கிறது என்பது கடந்த கால வரலாறு. கால்பந்து வெறியர்கள் இதை உணருவார்களா? இது மட்டுமா!

எந்த அணி வெல்லும் என்று பந்தயம் கட்டுவது (betting) ஒருபுறமிருக்க, எந்த வீரர் அதிகக் கோல் அடித்து தங்கக் காலணியைத் தட்டிச் செல்வார் என்ற பெட்டிங்கும் சூடுபிடித்துள்ளதாம். அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சி, போர்ச்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இங்கிலாந்து வீரர் ரூனி ஆகியோர் மீதுதான் அதிகப் பணம் கட்டப்பட்டுள்ளதாம். அதேசமயம் சீனாவும் கம்போடியாவும் உலகக் கோப்பை சூதாட்டங்களை நசுக்கிவிட்டன. தாய்லாந்து, தனது சிறைக் கைதிகளுக்கென இத்தகைய விளையாட்டுப் போட்டியை நடத்துகிறது.

இந்த FIFA உலகக் கோப்பை அமைப்பில், சீனா, அரபு ஐக்கிய குடியரசு, இந்தோனேசியா, குவைத் போன்ற ஆசிய நாடுகள் ஒருகாலத்தில் உறுப்பினர்களாக இருந்தன. 1950ல் இந்தியாவும் இதில் அங்கம் வகித்தது. ஆனால் FIFA அமைப்பு, வெறுங்காலோடு விளையாடுவதற்கு அனுமதி தராததால் இந்திய அணி இந்த உலகக் கோப்பை போட்டியில் ஒருபோதும் விளையாடியதில்லை. 1930ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இந்த 2010 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஜோஹானஸ்பர்க்கில் 1500 கலைஞர்களின் ஆடல் பாடல்களுடன் தொடங்கியுள்ளது. ஆப்ரிக்கக் கண்டத்தில் முதன்முறையாக நடக்கும் இதன் தொடக்க விழாவில் சுமார் ஒரு இலட்சம் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். Vuvuzelas எனப்படும் பிளாஸ்டிக் கொம்புகளை வைத்துக் கொண்டு கால்பந்து விளையாட்டு விசிறிகள் எழுப்பும் சப்தம், விளையாடுவோருக்குக்கூட அதிகம் தொந்தரவு கொடுப்பதாக ஒரு செய்தியில் வாசித்தோம். அவ்வளவுதூரம் விசிறிகள் தங்களை மறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த உலகக் கோப்பையில் பயன்படுத்தப்படும் பந்தின் பெயர் ‘ஜபுலானி’. தென்ஆப்பிரிக்காவில் ஜபுலானி என்றால் ‘கொண்டாடுவதற்காக’ என்று அர்த்தமாம்.

இந்தத் தொடக்க விழாவில் கலந்து கொண்ட ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச் செயலர் பான் கி மூன் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்கள் நம்மை, சிறப்பாக, இந்தக் கால்பந்து விளையாட்டில் பைத்தியமாக இருப்போரைச் சிந்திக்க அழைக்கின்றன.

இந்நிகழ்வு ஆப்ரிக்கக் கண்டத்திற்கு மாபெரும் தருணமாக இருக்கின்றது. இத்தகைய உலக நிகழ்வை நடத்த இயலாமல் இருக்கும் வளரும் நாடுகளுக்கு நல்லதொரு நம்பிக்கை உணர்வை ஏற்படுத்துகின்றது. இந்தத் தொடக்க நிகழ்வு, ஒப்புரவு, வெற்றி, ஐக்கியம் ஆகியவற்றைக் கொண்டுவரும் நேரமாகவும் அமைகின்றது. விளையாட்டு, வளர்ச்சிக்கும், அரசியல் ஒப்புரவுக்கும் அமைதியைக் கட்டிஎழுப்புவதற்கும் மாபெரும் சாதனமாக இருக்கின்றது. மில்லெனேய வளர்ச்சித்திட்ட இலக்குகளை 2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்றுவதற்கு இது, ஐ.நா.குடும்பத்தினருக்குப் பெரிய உந்து சக்தியாக இருக்கின்றது. இந்த இலக்குகளை அடைவது ஏதோ விளையாட்டைப் பார்த்து இரசிப்பது போன்றது அல்ல, மாறாக இது ஒவ்வொருவரின் முயற்சியைச் சார்ந்தது. உலகினர் எல்லாரும் சேர்ந்து செயல்பட்டால் வறுமைமீது வெற்றியடைலாம். நாம் விரும்பினால் அறியாமையையும் பாகுபாட்டையும் வீழ்த்தலாம். இதனால் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் ஒவ்வொரு சிறுவனும் சிறுமியும் வாழ்க்கையின் விளையாட்டு மைதானத்தில் வாழ வாய்ப்புப் பொறுவார்கள்.

இந்த உலகக் கோப்பை குறித்து கருத்து தெரிவித்தத் தென்னாப்ரிக்கக் கறுப்பினக் காந்தியான நெல்சன் மண்டேலா, “இந்த உலகக் கோப்பை, மக்களை ஒன்றிணைக்கும், இந்தப் பூமிப்பந்தில் மக்களை ஒருங்கிணைக்கும் சக்தியைக் கொண்ட ஒன்று இருக்கின்றதென்றால் அது கால்பந்து விளையாட்டு” என்று கூறியிருக்கிறார். ஐ.நா. மனித உரிமைகள் அவையின் உயர் இயக்குனரும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் உச்ச நீதிமன்ற குற்றவியல் நடுவரும் தமிழனத்தவருமான நவநீதம்பிள்ளை, “பாகுபாட்டையும் நிறவெறியையும் இனவெறியையும் தோற்கடிப்பதற்கு இந்த உலகக் கோப்பை நல்ல வாய்ப்பு” என்று சொல்லியிருக்கிறார்.

ஆப்ரிக்காவில் முதன்முறையாக நடக்கும் இந்த விளையாட்டுப் போட்டியை, “ஆப்ரிக்க உலகக் கோப்பை” என்று சொல்லியே பெருமை அடைகிறார் தென்னாப்ரிக்கா அதிபர் ஜேக்கப் ஜூமா. “1990ம் ஆண்டு நெல்சன் மண்டேலா, நீண்ட சிறைவாசத்திலிருந்து விடுதலையான பின்னர் இப்போதுதான் தென்னாப்ரிக்காவின் விடுதலை முழுமை பெறுகிறது, அந்நாளில் தொடங்கிய இனவெறி விடுதலை, இப்போது கால்பந்து போட்டியுடன் நிறைவடைகிறது. இந்த உண்மையான விடுதலைக்காகத்தான் ஒட்டுமொத்த தென்னாப்ரிக்காவும் கனவு கண்டது” என்று இப்போட்டி அமைப்புத் தலவர் டேனி ஜோர்டன் சொன்னார். இனவெறியால் பலகாலம் துண்டாடப்பட்டு, புண்பட்டுப் பொலிவிழந்து கிடந்த ஒருநாட்டில் நடைபெறும் இந்தப் போட்டித் தொடர், விளையாட்டு உலகில் மட்டுமல்ல, மனிதகுல வரலாற்றிலும் முக்கியமான நிகழ்வாகும்.

இவ்வளவுப் பெருமையாகக் கருதப்படும் இப்போட்டித் தொடரானது, மக்கள் மத்தியில் ஒப்புரவு, அரசியல்ஒப்புரவு, வெற்றி, ஒருங்கிணைப்பு, வளர்ச்சி, பாகுபாடும் நிறவெறியும் இனவெறியும் வீழ்தல் போன்றவற்றைக் கொண்டுவர வேண்டும் என்பதே நல்ல உள்ளங்களின் எதிர்பார்ப்பு. இந்தப் போட்டி மட்டுமல்ல, எல்லா விளையாட்டுப் போட்டிகளுமே இந்தப் பண்புகளை வளர்க்க வேண்டுமென்பதே எல்லாரின் விருப்பமும். இவை வளர அன்புள்ளங்களே, நம் ஒவ்வொருவரது பங்கு என்ன?

உம்மான் என்ற குரு தன் சீடர்களிடம், இந்த உலகம் மிகப்பரந்தது. நீங்கள் எதற்காக இந்த மணி ஓசைக்கும், அலங்காரமான பலவண்ண மேல்அங்கிக்கும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். இதற்கு ஓர் இந்திய தத்துவஞானி பதில் சொல்கிறார். இந்தப் பிரபஞ்சம் நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று உங்களைப் படைத்திருக்கிறது. நீங்கள் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லாமல் இருப்பதுதான் நீங்கள் சார்ந்துள்ள மதத்திற்குப் புறம்பானது. கொள்கை, நீதி என்று எதையும் திணித்துக் கொள்ளாமல் உங்கள் உள்உணர்வுப்படி செயல்படுங்கள். அடுத்தவர்போல் ஆகவேண்டும் என்று முயற்சிக்காதீர்கள். தாமரை மல்லிகையாக முடியுமா? என்று கேட்கிறார்.

எனவே நாம் ஒவ்வொருவரும் நமது உள்தூண்டுதலின்படி நடந்தாலே விளையாட்டுகள் முன்வைக்கும் பண்புகளில் உலகம் சிறந்தோங்க உதவ முடியும்.








All the contents on this site are copyrighted ©.