2010-06-12 15:12:28

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3
Karl Menninger புகழ் பெற்ற ஒரு மன நல மருத்துவர். நலம் பெற வேண்டி பல நூறு பேர் Karl Menningerன் மருத்துவமனையில் காத்திருப்பர். அவர் ஒரு நாள் தன் நண்பரிடம், "என் மருத்துவமனையில் படுத்திருக்கும் நோயாளிகளிடம் அவர்களது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன என்ற உண்மையை மட்டும் அவர்களை நான் நம்ப வைத்து விட்டால்... இவர்களில் 75 விழுக்காடு பேருக்கு நோய் நீங்கி இன்றே வீடு திரும்புவர்." என்றார். ஆம் அன்பர்களே, Menninger சொன்னது ஆழமான ஓர் உண்மை.

நாம் ஒவ்வொருவரும் மன்னிக்கப்பட்டு விட்டோம் என்பதை மனதார நம்பினால் உலகில் எத்தனை பாரங்கள் குறையும். அள்ள அள்ளக் குறையாமல் சுரக்கும் மன்னிப்பு என்ற அமுதத்தை மனதார நாம் ஒவ்வொருவரும் பருகினால், நம் ஒவ்வொருவரையும் பல வகைகளில் வாட்டும் மன, உடல் நோய்கள் நீங்கும். நலம் பெருகும்.
இந்த ஒரு நல்ல செய்தியை முதலில் நாம் மனதார நம்பவும், அதன்பின் பிறரை அந்த நம்பிக்கைக்கு அழைத்து வரவும் இன்றைய ஞாயிறு சிந்தனை நமக்கு உதவி செய்யட்டும்.
இந்த ஞாயிறு சிந்தனைக்குத் தரப்பட்டுள்ள நற்செய்தியைக் கேட்போம்.

(லூக்கா 7: 36-50) 
இப்போது நாம் வாசித்த இந்த சம்பவம் நான்கு நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்த சம்பவம் இயேசுவின் சீடர்கள் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். நம் மனங்களிலும் இந்த சம்பவம் நல்ல பல பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவலோடு நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

இயேசுவுக்குப் பரிசேயர் ஒருவரது வீட்டில் விருந்து. இதுவே ஒரு பெரிய அதிசயம். இயேசுவுக்கு எதிரணியில் பரிசேயர்களும், மறை நூல் வல்லுனர்களும் சேர்ந்து சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த போது, சீமோன் என்ற இந்தப் பரிசேயர் இயேசுவை விருந்துண்ண அழைத்தது வினோதம் தான்.
இந்த அதிசயத்தை ஊரே, உலகே பேசியிருக்க வேண்டும். நற்செய்தியாளர்கள் அதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதியிருக்க வேண்டும். ஆனால், நடந்தது என்ன? அங்கு நடந்த விருந்தை விட, அங்கு அழைக்கப்பட்டிருந்த பல பெரியவர்களை விட, அழையாத விருந்தாளியாக அந்த வீட்டில் நுழைந்த ஒரு பெண் நற்செய்தியின் மையமானார். இயேசுவை அழைத்த அந்த பரிசேயருக்கு "சீமோன்" என்று பெயர் தரப்பட்டிருந்தது. அழையாமல் நுழைந்த பெண்ணுக்கோ பெயர் கூட இல்லை. அவர் ஒரு "பாவி" என்ற அடைமொழி மட்டும் அவர் மேல் ஒட்டப்பட்டிருந்தது. அந்தப் பாவி இந்த நற்செய்தி நிகழ்வின் மையமானார்.
அந்தப் பெண்ணைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் எல்லாருக்கும் அதிர்ச்சி, கோபம், எரிச்சல்... மனதை உறுத்தும் அத்தனை உணர்வுகளையும் பட்டியலிடுங்கள்... அனைத்தும் அங்கே இருந்திருக்கும்.
அவள் ஒரு விலைமகள். தன் உடலை விலைக்கு விற்பவர். பரிசேயர் ஒருவரது பரிசுத்தமான வீட்டையும், அங்கு வந்திருந்த அனைவரையும் தீட்டுப் படுத்திவிட்டார் அந்தப் பெண்.
இயேசு மட்டும் அங்கில்லையெனில், அந்தப் பெண்ணைப் பலவந்தமாய் அந்த வீட்டை விட்டு வெளியேற்றி, கல்லெறிந்து அவரைக் கொன்றிருப்பர் அங்கிருந்தோர்...
இயேசு மட்டும் அங்கில்லையெனில்...
இயேசு அங்கில்லையெனில், அந்தப் பெண்ணும் அங்கு வந்திருக்க மாட்டாரே. இயேசு இருந்த செய்தி கேட்டதால்தானே அவர் அங்கு வந்தார். அதுவும், அனுமதியின்றி, அழைப்பின்றி அங்கு வந்தார். இயேசுவிடம் வர, இயேசுவின் பாதங்களைச் சேர, அனுமதி எதற்கு?

இயேசுவின் பாதங்களைச் சேர்ந்த பெண், அந்தப் பாதங்களைக் கண்ணீரால் கழுவி, தன் கூந்தலால் துடைத்து, முத்தமிட்டு, நறுமண தைலத்தைப் பூசினார். அந்த விலையுயர்ந்த தைலத்தின் நறுமணம் அந்த வீட்டை நிரப்பிய போது, அதுவரை அதிர்ச்சியில், கோபத்தில் உறைந்திருந்த அந்தக் கூட்டம் விழித்தெழுந்தது.
உண்மையிலேயே, விழித்து எழுந்ததா? இல்லை. விழித்தெழுவதற்கு இறைவன் கொடுத்த அழைப்பைப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் அந்தக் கூட்டம் தனது பழைய குருட்டுத் தனத்தில் கண் மூடிவிட்டது.

அவர்களது குருட்டுப் பார்வையில் குற்றங்கள் மட்டுமே தெரிந்தன. அந்தப் பாவி மேல், இயேசு மேல் குற்றம் கண்டனர். "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால்..." என இயேசுவை அழைத்த அந்த பரிசேயர் ஓர் இலக்கணத்தைத் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
இயேசுவுக்குத் தான் இலக்கணங்கள் பிடிக்காதே.

இறைவாக்கினர் என்றால்...
பரிசேயர் என்றால்... சதுசேயர் என்றால்...
சட்ட திட்டங்கள் என்றால்...
ஒய்வு நாள் என்றால்...
கடவுள் என்றால்...
இப்படி வாழ்நாள் முழுவதும் இலக்கணங்களை, வரையறைகளைச் சொல்லிச் சொல்லியே வாழ்ந்து வந்த அந்த பரிசேயர்களின் இலக்கணங்களை இல்லாமல் செய்வதே இயேசுவின் முக்கியப் பணியாகிவிட்டது.
இயேசுவைப் பொறுத்தவரை, அந்த பரிசேயர்களோ, அவர்களின் இலக்கணங்களோ, அவர்கள் தன் மீது போட்டுக் கொண்டிருந்த தப்புக் கணக்குகளோ... எதுவுமே முக்கியமல்ல. அவரைப் பொறுத்த வரை அவரது காலடியில் இருந்த அந்தப் பெண் தான் முக்கியம்.

இந்த சம்பவத்தின் இருட்டுப் பகுதியைப் பார்த்தது போதும். அங்கு நடந்த அழகானவைகளைக் கொஞ்சம் அசைபோடுவோம்.

பல பெரியக் கடைகளில் "பழுதடைந்த பொருட்கள்" என்று பலகையில் எழுதி, கடையின் ஓரத்தில் அந்தப் பொருட்களை வைப்பார்கள்.
அந்தப் பொருட்களின் வழக்கமான விலையில் பாதி கொடுத்து, அந்த பழுதடைந்தப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இருந்தாலும், கடையின் அந்தப் பகுதிக்குப் பெரும்பாலானவர்கள் போகக்கூட மாட்டார்கள். பழுதடைந்ததை விலை கொடுத்து வாங்குவதா?
இப்படி ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களைத் தேடிச் சென்ற ஒருவரிடம், அவர் நண்பர் "அதுதான் பழுதடைந்திருக்கிறதே. அதை ஏன் எடுக்கிறீர்?" என்று கேட்டார். "வெளியில்தான் இது பழுதடைந்துள்ளது. உள்ளிருக்கும் பொருள் நன்றாகவே இருக்கிறது." என்று பதில் சொன்னார்.

இயேசு வாழ்ந்த காலத்தில் இப்படி ஊருக்கும், உலகுக்கும் உடலால், மனத்தால் பழுதடைந்தவர்களாய்த் தெரிந்தவர்களை அவர் தேடித் போனார். இப்படி பழுதடைந்தவர்கள் பலர் அவரைத் தேடி வந்தனர். அவர்களில் ஒருவர் தான் இன்றைய நற்செய்தியின் மையமாய் நாம் சிந்திக்கும் இந்தப் பெண்.
உலகமெல்லாம் "இவள் ஒரு பாவிப் பெண்" என்று சொன்ன போது... இயேசு அவரை "பாவம் அந்தப் பெண்" என்று சொன்னார். "பாவம்" ஒரே வார்த்தைதான். ஆனால், அதை பயன்படுத்தும் வழியில்தான் எத்தனை, எத்தனை வேறுபாடுகள்!

உலகம் இவரைப் "பாவி" என்று முத்திரை குத்தி குத்தி... இந்தப் பெண் தலை நிமிர முடியாமல், தாழ்த்தப் பட்டிருந்தார். இப்படி தன்னைத் தாழ்த்திய இந்த உலகத்தை அவர் வெறுத்தார். இருந்தாலும் வேறு வழியின்றி, தாழ்நிலையில் இருந்ததைப் போல் நடித்தார். ஆனால், இன்று முதன் முறையாக, மற்றொரு மனிதன் முன் மனதாரத் தன்னைத் தாழ்த்திக் கொண்டார்.
இயேசுவின் பாதங்களைக் கண்ணீரால் கழுவி, கூந்தலால் துடைத்து, காலடிகளை முத்தமிட்டு... ஒரு மனிதப் பிறவி இதைவிட அதிகமாய்த் தன்னைத் தாழ்த்திக் கொள்ள முடியாது.
தன்னையே மனமுவந்து தாழ்த்திக் கொண்ட அந்தப் பெண்ணை இயேசு தூக்கி நிறுத்தினார். அதுவும் தங்களையே உயர்ந்தோர் என்று எண்ணிக் கொண்டிருந்த அந்த பரிசேயர் கூட்டத்திற்கு முன் அந்தப் பெண்ணை உயர்த்தினார்.
பலருக்கும் பாடங்களைச் சொல்லித் தந்து பழகிப் போன பரிசேயருக்கே அந்தப் பெண் வழியாக பாடம் ஒன்றைச் சொல்லித்தந்தார் இயேசு.
இயேசு சொல்லித் தந்த பாடம் என்ன? அவரது வாழ்வின் உயிர்மூச்சான, தாரக மந்திரமான அன்பு, மன்னிப்பு என்ற பாடங்கள்.

மன்னிப்பைப் பற்றிப் சிந்திப்போம்... உணர்வோம்... பேசுவோம்... உயிர் மூச்சாய் உள் வாங்குவோம்... மன்னிப்பை வாழ்வோம்.
மன்னிப்பைப் பற்றிய இரு எண்ணங்கள் இதோ:


இரு உருவகங்களுடன் இச்சிந்தனைகளை முடிப்போம்.

இறைவன் என்ற ஒளியை நோக்கி நடந்தால் குற்றங்களாகிய நம் நிழல்கள் நமக்குப் பின்னால்தான் விழும். அந்த ஒளியிலிருந்து திரும்பி நின்றால், அந்த ஒளியை விட்டு விலகி நடந்தால் அந்த நிழல்கள்தாம் நம் கண்களை நிறைக்கும்.

குழாய் நீரைப் போல் சின்னதாய் விழுந்து கொண்டிருக்கும் அருவி ஒன்றை கற்பனை செய்து கொள்வோம். அந்த அருவிக்கடியில் அழுக்கான ஒரு பாத்திரத்தை வைத்தால், பாத்திரத்தில் உள்ள அழுக்குகள் கழுவப்படும். பாத்திரமும் நீரால் நிறையும். பாத்திரம் அழுக்காய் உள்ளதே என்று பயந்து, வெட்கப்பட்டு, அருவிக்கடியில் பாத்திரத்தைத் திறந்து வைக்காமல், கவிழ்த்து வைத்தால், தண்ணீர் அதைச் சுற்றி கொட்டிக் கொண்டிருக்கும். ஆனால், பாத்திரம் கழுவப்படாது. நிறையாது.
 இறைவனின் அன்பு, மன்னிப்பு நம்மைச் சுற்றி எப்போதும் கொட்டிக் கொண்டிருப்பதை உணர்வோம். நம் மனங்களை அந்த அருவிக்கடியில் திறந்து வைப்போம்.







All the contents on this site are copyrighted ©.