2010-06-09 15:47:39

புதிய உலகின் உண்மையான இறைவாக்கினர்களாக வாழும் அருட்பணியாளர்கள், தேவை- கர்தினால் பெர்த்தோனே


ஜூன்09,2010 புதிய உலகின் உண்மையான இறைவாக்கினர்களாக வாழும் அருட்பணியாளர்கள், இந்தக் கடினமான காலத்தில் திருச்சபைக்கும் மனித சமுதாயத்துக்கும் தேவைப்படுகிறார்கள் என்று கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே இப்புதனன்று கூறினார்.
ஓர் அருட்பணியாளர் கடவுளின் மனிதர், கிறிஸ்துவின் சாயலாக இருப்பவர் என்று சொல்வது அவர் செபிக்கும் போதும் திருவருட்சதானங்களை நிறைவேற்றும் போதும் மட்டும் அல்ல, அவர் தனது வாழ்நாள் முழுவதும் அவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கர்தினால் பெர்த்தோனே, கூறினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகள் உரோமையில் இப்புதனன்று தொடங்கியுள்ளவேளை, இதனைத் தொடங்கி வைத்து உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே அருட்பணியாளர்கள் மீது திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு இருக்கும் அன்பையும் அக்கறையையும் எடுத்துச் சொன்னார்.
ஓர் அருட்பணியாளர், அன்பாக, இரக்கமாக சிலுவையில் அறையப்பட்ட அன்பாக இருக்கும் கடவுளின் சாயல் என்றும் அவர் உரைததார்.
இந்த நிகழ்வானது இன்றைய அருட்பணியாளர்கள் என்ற தலைப்பில் நடைபெறுகின்றது என்பதைக் குறிப்பிட்ட கர்தினால், இது ஒருமையில் இல்லாமல் பன்மையில் இருப்பது, அருட்பணியாளர்களின் வாழ்வு பலவகைப்பட்டதை இது குறித்து நிற்கிறது என்று விளக்கினார்.
சர்வதேச அருட்பணியாளர்கள் ஆண்டின் மூன்று நாள் நிறைவு நிகழ்ச்சிகளின் முதல் கட்டமாக இப்புதனன்று புனித பவுல் பசிலிக்காவில் “மனமாற்றமும் மறைப்பணியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. ஜெர்மனியின் Cologne கர்தினால் Joachim Meisner சிந்தனைகளை வழங்கினார். இந்த நிகழ்வு புனித ஜான் லாத்தரன் பசிலிக்காவில் கூடியிருந்தவர்களுக்கும் நேரடி ஒளிபரப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒப்புரவு அருட்சாதனமும் திருப்பலியும் நடைபெற்றன.
இவ்வியாழனன்று புனித மேரி மேஜர் பசிலிக்காவில் “சகோதரத்துவ ஐக்கியத்தில் மரியாளோடு சேர்ந்து தூய ஆவியிடம் செபித்தல்” என்ற தலைப்பில் நிகழ்வுகள் நடைபெறும்.
வியாழன் மாலை குருக்கள் அனைவரும் வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் திருத்தந்தையைச் சந்திப்பர். திருநற்கருணை ஆராதனையுபம் ஆசீரும் இடம் பெறும்.இவ்வெள்ளி காலை பத்து மணியளவில் திருத்தந்தை நிறைவுத் திருப்பலியை நிகழ்த்துவார். குருக்கள் அனைவரும் தங்களது வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிப்பார்கள். புனித ஜான் மரிய வியான்னி குருக்கள் அனைவருக்கும் பாதுகாவலர் எனத் திருத்தந்தை அறிவிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.