2010-06-09 15:48:21

நலவாழ்வுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வத்திக்கான் உயர் அதிகாரி ஐ.நா.வை வலியுறுத்தல்


மே09,2010 அத்தியாவசிய மருந்துகள் சமமாகப் பகிர்ந்து கொடுக்கப்படுவதற்கு உறுதி வழங்கி, நலவாழ்வுக்கான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுமாறு வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டார்.
ஐ.நா.மனித உரிமைகள் அவையின் 14வது அமர்வில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும்பிற சர்வதேச நிறுவனங்களுக்கானத் திருப்பீட பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி, பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளின் அடிப்படையில் உலகின் நலவாழ்வுத்துறையில் கத்தோலிக்கத் திருச்சபை ஆற்றிவரும் பணிகளைப் பட்டியலிட்டார்.
தலத்திருச்சபைகளும் துறவு நிறுவனங்களும் தனியார் அமைப்புகளும் ஒவ்வொரு நாட்டிலும் சட்டத்தை மதித்து நலவாழ்வுத்துறையில் குறிப்பிடத்தக்கப் பணிகளைச் செய்து வருகின்றன என்றுரைத்த பேராயர், கத்தோலிக்கத் திருச்சபை, 5,378 மருத்துவமனைகள், 18,088 மருந்தகங்கள், 521 தொழுநோயாளர் மையங்கள், 15,448 முதியோர், மாற்றுத்திறனுடையோர் இல்லங்கள் உட்பட பல நலவாழ்வு மையங்களை நடத்தி வருகின்றது என்றார்.வளரும் நாடுகளில் 50 விழுக்காட்டினர் ஏழ்மையினால் ஏற்படும் நோய்களால் துன்புறுகின்றனர், இது வளர்ந்த நாடுகளைவிட சுமார் பத்து மடங்கு அதிகம் என்றும் சுகாதாரத்திற்குப் பணம் செலவிடவேண்டியிருபப்தால் ஆண்டுதோறும் 10 கோடிக்கு மேற்பட்டோர் வறுமைக்கு உள்ளாகின்றனர் என்றும் வளரும் நாடுகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 50 முதல் 90 விழுக்காடுவரை நோயாளிகளே செலவழிக்க வேண்டியிருக்கின்றது, சுமார் 200 கோடிப்பேர் அத்தியாவசிய மருந்துகளின்றி கஷ்டப்படுகின்றனர் என்றும் பேராயர் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.