2010-06-08 16:13:34

விவிலியத் தேடல்:


RealAudioMP3
கடந்த ஐந்து வாரங்களாய் ஆறு திருப்பாடல்களின் விளக்கங்களைத் தந்து விவிலியத் தேடலில் நம்மை அற்புதமாய் வழி நடத்திய சகோதரி Tresaவுக்கு என் நன்றிகள். இன்று நமது தேடலில் திருப்பாடல் 17 இடம் பெறுகிறது.

இந்த வார துவக்கத்தில், ஜூன் 7 திங்கள் காலை என் கவனத்தை ஈர்த்தத் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா? 26 ஆண்டுகளுக்கு முன்னால், போபாலில் ஏற்பட்ட நச்சு வாயு விபத்து தொடர்பான வழக்கில் எட்டு பேரை குற்றவாளிகள் என்று போபால் நீதிமன்றம் முடிவு செய்தள்ளது... என்பது தான் அந்தச் செய்தி.
1984 டிசம்பர் 3 அதிகாலையில் நடந்த இந்த அகோர விபத்தில் 7,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். தொடர்ந்த ஒரு சில ஆண்டுகளில் 20,000க்கும் அதிகமானோர் இறந்தனர். குறைந்தது ஆறு லட்சம் பேர் பல வகைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளில் நூற்றுக்கணக்கானோர் இன்றும் உடல் ஊனத்துடன் பிறக்கின்றனர்.
இவ்வளவு பகிரங்கமாக நடைபெற்ற மனிதப் பலிகளுக்கு யார் காரணம் என்று 26 ஆண்டுகளாக இந்திய அரசும், நீதித் துறையும் தேடித் தேடி 8 பேரைக் குற்றவாளிகள் என்று கண்டுபிடித்துள்ளன.
அவர்களுக்கு நீதி மன்றம் விதித்திருக்கும் தண்டனை என்ன? இரண்டு ஆண்டுகள் சிறை. இந்தத் தீர்ப்பை குற்றவாளிகள் ஏற்றுக் கொள்ளப் போகிறார்களா என்ன? வழக்கம் போல் இவர்களும் மேல் முறையீடு என்ற பேரில், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இந்த வழக்கை இன்னும் பல ஆண்டுகள் நடத்த வாய்ப்புக்கள் உண்டு.
வழக்குகள் எங்கும், எப்போதும் ஒரு தொடர்கதை.
"Justice delayed is justice denied" என்பது ஒரு ஆங்கிலக் கூற்று. நீதி எவ்வளவுக்கெவ்வளவு தாமதமாக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு மறுக்கப்படுகிறது. நீதி, நியாயம் தாமதமாக்கப்படும் தொடர்கதைகள் உலகின் எல்லா நீதி மன்றங்களிலும் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

போபால் குறித்த இந்த செய்தி என் கவனத்தை ஈர்த்ததற்கு மற்றொரு காரணம் போலந்து நாட்டில் ஜூன் 6 இஞ்ஞாயிறன்று ஜெர்ஷி போப்பியவுஷ்கோ (Jerzy Popielusko) என்ற ஒரு கத்தோலிக்க குரு முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்பட்ட நிகழ்ச்சி.
1947ல் பிறந்த ஜெர்ஷி குருவாகப் பணி செய்த காலத்தில் போலந்தில் அப்போது இருந்த கம்யூனிச ஆட்சியை எதிர்த்து கோவில்களில், திருப்பலிகளில் குரல் கொடுத்தார். அவரது கருத்துக்களை Radio Free Europe என்ற வானொலி அடிக்கடி ஒலி பரப்பியது. இவர் தனது 37வது வயதில் கம்யூனிச அதிரடிப் படையினர் மூவரால் கொல்லப்பட்டார். இவ்விரு நிகழ்வுகளும் என் கவனத்தை ஈர்த்ததற்குக் காரணம் உண்டு.
ஜெர்ஷி கொலை செய்யப்பட்ட ஆண்டு 1984.
போபால் விபத்து நிகழ்ந்த ஆண்டு 1984.
ஜூன் 6 ஞாயிறு ஜெர்ஷி முத்திபேறு பெற்றவராக உயர்த்தப்பட்டார்.
ஜூன் 7 திங்கள் போபால் விபத்தில் 8 குற்றவாளிகளை நீதி மன்றம் அடையாளம் கண்டது.

இவ்விரு துயர சம்பவங்களும் நடந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. இரண்டிலும் உலக அளவில், மனிதர்கள் நடுவில் நீதி, நியாயம் கிடைத்துள்ளதா என்பதில் தெளிவில்லை. ஆனால், இந்த இரு துயர சம்பவங்களின் போது, ஒரு சில நல்லவைகளும் நடந்திருக்கின்றன என்பது நமது நம்பிக்கை.
போலந்து நாட்டில் குரு ஜெர்ஷி கொலையுண்ட நிகழ்ச்சி பலரை இறைவன் பக்கம் இழுத்து வந்துள்ளதென்பது தெளிவாகிறது. இவரது சாவுக்கு சட்டப்படி நீதி கிடைத்ததா? தெரியவில்லை. ஆனால், இவரது சாவினால் பல ஆயிரம் பேருக்கு நிறை வாழ்வு, இறை வாழ்வு கிடைத்தது என்பதை அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு முத்திபேறு பெற்ற நிலையைத் திருச்சபை வழங்கியுள்ளது. அதேபோல், போபாலிலும் கட்டாயம் இந்தக் கொடூர விபத்து பலரை இறைவன் பக்கம் அழைத்து வந்திருக்க வேண்டும்.
உலகில், நீதி மன்றங்களில் சரியான தீர்ப்பு கிடைக்காமல் மனிதர்கள், அதிலும் முக்கியமாக நீதியை விலை கொடுத்து வாங்க முடியாத ஏழைகள், அணுகும் நீதி மன்றம்... கடவுளின் சந்நிதி.
நீதி தேடி கடவுளின் சந்நிதியை நாம் எப்போது, எவ்வாறு நாடுகிறோம்? அவநம்பிக்கையின், தோல்வியின் உச்சத்தில் இறைவனை நாடுகிறோமா அல்லது நடக்கும் அனைத்திற்கும் அந்த ஆண்டவனே நாயகன் என்ற நம்பிக்கையோடு நாடுகிறோமா? தாவீதின் திருப்பாடல்கள் நமக்குப் பாடங்கள் சொல்லித் தரட்டும்.
இன்று நம் சிந்தனைக்கு நாம் எடுத்துக் கொண்டுள்ள 17ம் திருப்பாடல் தமிழில் “மாசற்றவனின் மன்றாட்டு” என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் இதை Prayer of the innocent man என்றும், ஒரு சிலர் இதை Prayer of the perfect man என்றும் கூறுகின்றனர். அதாவது, இந்தத் திருப்பாடல் “மாசற்றவனின் மன்றாட்டு” அல்லது “உன்னதமான, சீரிய மனிதன் ஒருவனது மன்றாட்டு” என்று கூறப்படுகிறது. இதனால், ஒரு சில விவிலிய ஆராய்ச்சியாளர்கள் இந்த உன்னதமான மனிதன் இயேசு என்றும், இயேசுவின் வாழ்வை, மனநிலையை முன்னறிவிக்கும் விதமாக தாவீது இந்தத் திருப்பாடலைப் பாடியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

இயேசு திருப்பாடல்களைத் தன் வாழ்வில் பயன்படுத்தினார் என்பதை ஏற்கனவே சிந்தித்தோம். அந்தக் கோணத்திலிருந்து பார்க்கையில், இயேசு கட்டாயம் திருப்பாடல் 17ஐ உளமாரப் பாடியிருப்பார்.

திருப்பாடல் 17ன் முதல் வரிகள் இவ்வாறு ஆரம்பமாகின்றன:

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்: என் வேண்டுதலை உற்றுக் கேளும்: வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். உம் முன்னிலையினின்று எனக்கு நீதி கிடைக்கட்டும்: உம் கண்கள் நேரியன காணட்டும். 
இந்த வரிகளுடன் இறைவன் சந்நிதியில் தன் வழக்கை ஆரம்பிக்கிறார் திருப்பாடலின் ஆசிரியர்.

தாவீது இறைவனின் சந்நிதியை, இறைவனின் நீதி மன்றத்தைத் தேடி வரக் காரணம் என்ன? சவுல் அவரைக் கொல்ல வெறியாய் அலைகிறார் என்ற செய்தி.
பார்க்கும் இடத்திலெல்லாம் பகை சூழ்ந்துள்ள நிலையில் தாவீது தன் வழக்கை இறைவனிடம் கொண்டு வருகிறார். 17ம் திருப்பாடலில் 15 திருவசனங்கள் உள்ளன. அவற்றை ஐந்து தெளிவான பகுதிகளாகக் காணலாம்.

இந்த ஐந்தில், தாவீது தன்னைப் பற்றிக் கூறும் ஒரு பகுதியும், தனக்குத் தீங்கிழைக்கக் காத்திருப்பவர்களைக் குறித்துப் பேசும் ஒரு பகுதியும் உள்ளன. தாவீது தன்னைப் பற்றிக் கூறும் வரிகள் இவை:
4 பிற மானிடர் செய்வது போல் அல்லாமல், நீர் உரைத்த வாக்கிற்கிணங்க, வன்முறையாளரின் வழிகளை விட்டு விலகியுள்ளேன்.
5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது: என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. 
தனக்குத் தீங்கிழைக்கக் காத்திருப்பவரைப் பற்றி கூறும் வரிகள் இவை:
10 அவர்கள் ஈவு இரக்கம் அற்ற கல் நெஞ்சர்கள்: தங்கள் வாயினால் இறுமாப்புடன் பேசுபவர்கள்.
11 அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்: இதோ! என்னை வளைத்துக் கொண்டனர்: அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு, வைத்த கண் வாங்காது காத்திருக்கின்றனர்.
12 பீறிப்போடத் துடிக்கும் சிங்கத்திற்கும் அவர்கள் ஒப்பாவர்: மறைவிடத்தில் பதுங்கியிருக்கும் இளஞ்சிங்கத்திற்கு நிகராவர். 
தாவீது தனக்குள்ளேயே ஒரு நீதிமன்றத்தை அமைத்து, தன் நிலையையும், தன் எதிரிகள் நிலையையும் விளக்கி இறுதியில் "மாண்பு மிகு நீதிபதி அவர்களே... என்று இறைவனிடம் தன் விண்ணப்பங்களைக் கூறுகிறார் இந்தத் திருப்பாடல் வழியாக.

நாமும் வாழ்க்கையில் பல முறை நம் மனங்களில், நம் குடும்பங்களில் நீதி மன்றங்களை அமைக்கிறோம். வாதிடுகிறோம் தீர்ப்பும் சொல்கிறோம். அந்த நேரங்களில் தாவீதிடமிருந்து, இந்தத் திருப்பாடல் வழியாக ஒரு சில பாடங்களைக் கற்றுக் கொள்ள முயல்வோம். நாம் வாழ்க்கையில் வழக்குகளை உருவாக்கும் போது, அல்லது சந்திக்கும் போது, நம்மைப் பற்றிய தெளிவும், நாம் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றிய தெளிவும் இருக்க வேண்டும். இந்தத் தெளிவு நம் வழக்குகளை, பிரச்சனைகளை பாதி தீர்த்து விடும். தீராததாய்த் தெரியும் பிரச்சனைகள் சூழும் போது, இறைவன் மேல் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால், மீதிப் பிரச்சனைகளும் தீர்ந்து விடும்... இதைத் தான் திருப்பாடலின் ஆசிரியர் இன்று நமக்குச் சொல்லித் தருகிறார்.
தீராததாய்த் தெரியும் பிரச்சனைகள், வழக்குகள் மத்தியில் இறைவன் மீது நம் நம்பிக்கை இன்னும் ஆழப்படும் வண்ணம் இந்தத் திருப்பாடலின் ஒருசில வரிகள் நம் மனங்களில் இன்றும் இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து ஒலிக்கட்டும்.

7 உமது வியத்தகு பேரன்பைக் காண்பித்தருளும்: உம்மிடம் அடைக்கலம் புகுவோரை அவர்களுடைய எதிரிகளிடமிருந்து உமது வலக்கரத்தால் விடுவிப்பவர் நீரே!
13 ஆண்டவரே, எழுந்து வாரும்: அவர்களை நேருக்குநேர் எதிர்த்து முறியடையும்: பொல்லாரிடமிருந்து உமது வாளால் என்னைக் காத்தருளும்.
15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்: விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்: உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும்.







All the contents on this site are copyrighted ©.