2010-06-07 15:10:09

வாரம் ஓர் அலசல் - இரவீந்திரநாத் தாகூர் பிறந்ததன் 150ம் ஆண்டு


ஜூன் 07, 2010 இரவீந்தரநாத் தாகூர் என்றாலே அவரது அமர காவியம் கீதாஞ்சலி பற்றி எல்லாருக்கும் நினைவுக்கு வரும். இந்தக் காவியத்துக்காக அவர் 1913ல் நோபல் இலக்கிய விருது பெற்றார். அச்சமயத்தில் இவ்விருது பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இந்தக் கீதாஞ்சலியில் பல சம்பவங்கள் உண்டு. அவற்றை எப்பொழுது சொன்னாலும், எத்தனைமுறை சொன்னாலும் கேட்க கேட்கத் தெவிட்டாது. தாகூர் அதில் சொல்கிறார் :

நான் வீதியில் நின்று கொண்டிருந்த போது தேவாதி தேவன் வலம் வந்தான். அவன் எல்லாரிடமும் கைகளை ஏந்திக் கொண்டே வலம் வந்தான். நான் என் பைக்குள் கையை விட்டேன். அதில் கொஞ்சம் நெல்மணிகள் இருந்தன. அவற்றில் ஒன்றிரண்டு மணிகளை மட்டும் அவன் கைகளில் போட்டுவிட்டு மீதமிருந்த மணிகளை என் பையில் போட்டேன். அப்படிப் போடுகிறபோதுகூட அந்த நெல் மணிகளை கொடுக்கவேண்டி இருக்கிறதே என்ற சந்தேகத்தோடு அவற்றைப் போட்டேன். அவன் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டான். அவன் சென்ற பிறகு நான் என் கால்சட்டைப் பைக்குள் கையை இட்டு மணிகளை வெளியில் எடுத்தேன். அவற்றில் இரண்டு மணிகள் மட்டுமே தங்க மணிகளாக மாறி இருந்தன. அப்போது நினைத்துக் கொண்டேன். கையிலிருந்த அனைத்து நெல்மணிகளையும் அவனிடம் போட்டிருக்கக் கூடாதா என்று.

தாகூர், எந்த நெல்மணிகளை எடுத்து தேவாதி தேவனிடம் போட்டாரோ அந்த மணிகள் மட்டுமே தங்க மணிகளாக மாறியிருந்தன. இதிலிருந்து நல்லதொரு படிப்பினையைத் தாகூர் சொல்கிறார். நற்செய்தியில் இயேசு சொல்லியிருப்பது போல கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.' (லூக்.6,38). முன்கை நீண்டால் முழங்கை நீளும் என்று தமிழில் முதுமொழியும் இருக்கின்றது. நாம் எதைத் தருகிறோமோ அது பன்மடங்காகத் திருப்பி வருகிறது. மாறாக எதைப் பதுக்கி வைக்கிறோமோ அது மக்கி புழுத்துப் போகிறது.

இப்படி பல அருமையான வாழ்க்கைப் பாடங்களை மிக எளிய முறையில் சொல்லியிருக்கிற இரவீந்திரநாத் தாகூர் இந்தியாவின் நவீன இலக்கியத்தின் தந்தை எனக் கருதப்படுபவர். இவர் பிறந்ததன் 150ஆம் ஆண்டையொட்டிய ஓராண்டுக் கொண்டாட்டங்கள் இந்த மே 9ம் தேதி தொடங்கியுள்ளன. அரசுமுறைப் பயணமாக சீனா சென்ற இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், இந்த மே 30ம்தேதி ஞாயிறன்று ஷாங்காய் நகரில் இரவீந்திரநாத் தாகூரின் சிலையை திறந்து வைத்தார். சீனாவின் வர்த்தக பகுதியான மயோ சிங் சாலை மற்றும் நன்சாங் சாலைப் பகுதிகளின் சந்திப்பில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தாகூரின் 150 வது பிறந்த தினம் கொண்டாடப்படும் இந்த வேளையில் தாகூரின் சிலையை சீனாவில் திறந்து வைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பிரதீபா பாட்டீல் தெரிவித்தார். இந்தத் தாகூர் யார்? இவரைப் பற்றி கவிஞர் பொன்னடியான் தொலைபேசி வழியாக பேசியதைத் தருகிறோம். கவிஞர் பொன்னடியான், பாவேந்தர் பாரதிதாசனின் மாணவர், அவரோடு வாழந்தவர். அவர் விட்டுச் சென்ற இலக்கியப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறவர்.

RealAudioMP3

1861ம் ஆண்டு மே 7ம் தேதி பிறந்த தாகூர், தனது 80வது வயதில் 1941ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக உள்ளது. கல்கத்தாவைச் சேர்ந்த பிராலிப் பிராமணரான இவர் தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். பதினாறாவது வயதில் இவரது முதலாவது குறிப்பிடத்தக்க கவிதையை பானுசிங்கோ அதாவது சூரிய சிங்கம் என்னும் புனை பெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் வெளிவந்தன. இவர் பிரித்தானிய காலனி அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார். இவரது முயற்சிகள் இவர் எழுதிய ஏராளமான எழுத்துக்கள் மூலமும், விசுவபாரதி பல்கலைக்கழகம் என்னும் அவர் நிறுவிய கல்வி நிறுவனத்தின் மூலமும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

 நாம் கொடுக்கக் கொடுக்க நீரூற்றுப் போல் நம்மிடம் அன்பு ஊறும். நம் கண்களில் அன்பு தோன்றினால் அதில் மற்றவர்கள் பிரதிபலிப்பார்கள்.







All the contents on this site are copyrighted ©.