2010-06-06 14:51:47

ஜூன் 6 காலை - மக்களுக்கான திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


புனித பவுல், பர்னபா ஆகியோரின் முயற்சிகளால் ஆசீவதிக்கப்பட்ட இந்த மண்ணில் விசுவாசிகளாகிய உங்கள் மத்தியில் திருப்பலி செலுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இலங்கை, பிலிப்பின்ஸ் நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறியுள்ள கத்தொலிக்கர்களையும் வாழ்த்துகிறேன்.
இயேசுவின் திரு உடல், திரு இரத்தத்தின் மறை பொருளை இஞ்ஞாயிறு நாம் கொண்டாடுகிறோம். கன்னி மரியிடம் பிறந்த இயேசுவின் மனித உடல், நற்கருணையில் பிரசன்னமாகியுள்ள அவரது திரு உடல், திருச்சபை எனும் அவரது மறை உடல் என மூன்று அம்சங்களில் இயேசுவின் உடலை நாம் கண்ணோக்க வேண்டும்.
அன்று எருசலேமில், மேல் அறையில் அப்போஸ்தலர்கள் மீது இறங்கி வந்த தூய ஆவியானவர், இன்றும் அப்பம், இரசம் இவைகளின் மீது இறங்கி வந்து அவற்றை இயேசுவின் உடலாக, இரத்தமாக மாற்றுகிறார். ஆதி கிறிஸ்துவர்கள் அப்பத்தைப் பகிர்வதிலும், ஆவியால் இணைக்கப்படுவதிலும் தங்களை அடையாளப்படுத்தினர். தங்களிடம் உள்ள அனைத்தையும் பகிர்ந்து வாழ்ந்ததிலும், துன்பத்தில் ஒருவர் ஒருவருக்கு உறுதுணையாக இருந்ததிலும் கிறிஸ்துவர்களை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.
ஆதி கிறிஸ்தவர்கள் தங்கள் அன்பை தங்கள் குழுவுக்கு மட்டும் காண்பிக்கவில்லை. தங்களை தனித்ததொரு குழுவாக அவர்கள் கருதவில்லை, மாறாக கிறிஸ்துவின் நற்செய்தியை உலகிற்கு பறைசாற்றும் கருவிகளாகத் தங்களைக் கருதினர்.இந்த பாரம்பரியத்தில் வந்திருக்கும் நாம் இன்று உலகில் மோதல்களும், பிரச்சனைகளும் நிறைந்த இடங்களில் ஒப்புரவையும், ஒற்றுமையும், நம்பிக்கையையும் கொணர அழைக்கப்பட்டுள்ளோம்.







All the contents on this site are copyrighted ©.