2010-06-06 14:51:28

ஜூன் 05 மாலை - திருச்சிலுவைக் கோவிலில் குருக்கள், துறவியருக்கான சிறப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


புனித பவுல் தன் மறைப்பணியை ஆரம்பித்த இந்த மண்ணில் உங்கள் கிறிஸ்துவ விசுவாசத்தை உறுதிப்படுத்தவும், உலகிற்கு நம்பிக்கை தரும் நற்செய்தியை அறிவிக்கவும் புனித பவுலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நானும் உங்கள் மத்தியில் வந்திருக்கிறேன்.
முதல் மனிதன் ஆதாம் புதைக்கப்பட்ட இடத்தில் அவரது மகன் செத் நட்டு வைத்த மரத்திலிருந்து கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை செய்யப்பட்டதாக ஒரு பாரம்பரியம் கூறுகிறது. சிங்கார வனத்தின் நடுவே இருந்த மரத்திலிருந்து கிடைத்த ஒரு விதையை கொல்கொத்தா என்றும் இடத்தில் செத் புதைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த மரத்தைச் சுற்றி பாம்பு வடிவத்தில் வந்த அலகையின் சோதனையால் மனித குலம் வீழ்ந்தது. எந்த ஒரு மரத்திலிருந்து நமது வீழ்ச்சி வந்ததோ, அதே மரம் சிலுவையாக மாறி, நமது மீட்பையும் கொணர்ந்தது. இது இறைவனின் அற்புதத் திட்டம்.
சிலுவை மரம் துன்பம், சித்ரவதை, தோல்வி ஆகியவைகளின் அடையாளமாக இருந்தது. அதே சிலுவை கிறிஸ்துவின் மரணத்தால் வெற்றியின் அடையாளமாக மாறியுள்ளது. இதனால், உலகில் இன்றும் துன்புறும் மக்களுக்கு சிலுவை நம்பிக்கையின் அடையாளமாகிறது.
சிலுவை வெறும் தனிப்பட்ட பக்திக்கான ஒரு அடையாளம் அல்ல. மாறாக, உலகில் துன்புறுவோர், ஒடுக்கப்படுவோர், வன்முறைகளுக்கு ஆளாவோர் அனைவருக்கும் மன உறுதியளிக்கும் ஒரு அடையாளம். வெறுப்பை அன்பால் வெல்லக்கூடிய நம்பிக்கையைத் தரும் ஒரு அடையாளம்.
என் சகோதர குருக்களே, துறவியரே, மறைகல்வி ஆசிரியர்களே, உலகிற்கு இன்றும் நம்பிக்கையை வெகுவாகத் தந்து வரும் இச்சிலுவையின் செய்தியை உலகிற்கு கூற நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.குருக்களுக்கான இவ்வாண்டில் இன்று குருக்களாய் இருப்பவர்களுக்கும், குருத்துவத்திற்காகத் தங்களையே தயாரித்து வருபவர்களுக்கும் நான் சிறப்பாக கூற விழைவது இதுவே: சிலுவையில் குருவாகவும், பலியாகவும் மாறிய கிறிஸ்துவைப் போல், தன்னலமற்ற அன்பை நீங்கள் உலகிற்குப் பறை சாற்ற வேண்டும். சிலுவையை உங்கள் வாழ்வின் ஒரு முக்கிய கருவாக நீங்கள் ஏற்றுக் கொள்வதன் மூலம், நீங்கள் பணி புரியும் இந்த மத்திய கிழக்குப் பகுதிக்கும், உலகிற்கும் நம்பிக்கையைக் கொணரும் கருவிகளாக நீங்கள் மாற முடியும்.







All the contents on this site are copyrighted ©.