2010-06-06 15:49:33

சைப்ரஸ் நாட்டில் திருத்தந்தை இறுதி தின நிகழ்வுகளின் சுருக்கம்.


ஜூன்06,2010. சைப்ரஸ் நாட்டில் மூன்று நாட்கள் திருப்பயணத்தை மேற்கொண்டுவரும் திருத்தந்தை கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் குறித்து கடந்த இரு நாட்களாக நோக்கி வரும் நாம், அதன் தொடர்ச்சியாக இன்று அவரின் சைப்ரஸ் நாட்டிற்கான இறுதி நாள் பயண நிகழ்வுகள் குறித்து காண்போம்.
இறுதி நாள் ஞாயிறு தின நிகழ்ச்சிகளை நோக்குவதற்கு முன்னால், சனிக்கிழமை மாலையில் நிக்கோசியா திருப்பீடத் தூதரகத்திற்கருகில் இருக்கும் திருச்சிலுவை கோவிலில் குருக்கள், துறவியர், தியாக்கியோன்கள், வேதியர்கள் மற்றும் கத்தோலிக்க பொதுநிலை விசுவாச அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு திருப்பலி நிறைவேற்றி அவர்களுக்காக திருத்தந்தை ஜெபித்ததையும் நாம் குறிப்பிட்டேயாகவேண்டும்.
லத்தீன் ரீதி பங்குதள கோவிலான இத்திருச்சிலுவை ஆலயம் 350 பேர் அமரும் வசதியுடையது. இத்திருப்பலியில் கிரேக்கம், லத்தீன் மற்றும் ஆங்கிலத்தில் ஜெபங்கள் இடம்பெற்றன.
திருப்பலிக்குப் பின் இருநூறு மீட்டர்கள் தொலைவிலுள்ளதிருப்பீடத்தூதரகம் சென்று இரவு உணவு அருந்தி நித்திரையிலாழ்ந்தார் திருத்தந்தை.
இதற்கிடையில் திருத்தந்தையின் இரண்டாம் நாள் பயணத்தின் நிகழ்வுகள் குறித்து பத்திரிகையாளர்களிடையேப் பேசிய திருப்பீடப்பேச்சாளர் குரு ஃபெதெரிக்கோ லொம்பார்தி, சைப்ரஸ் சிறிய நாடாக இருப்பினும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களை அதிகம் கொண்டதாக இருப்பினும், பயண நிகழ்வுகளில் மக்களின் பங்கேற்பு சிறப்பான முறையில் இருந்தது என மகிழ்ச்சியை வெளியிட்டார்.

திருத்தந்தையின் ஞாயிறு தினப் பயணத்திட்டத்தில் முதலில் இடம்பெற்றது பொதுமக்களுடன் கூடிய திருப்பலியே.
திருப்பீடத் தூதரகத்திலிருந்து திருப்பலி நிறைவேற்றுவதற்காக திருச்சிலுவை கோவிலை நோக்கி திருத்தந்தை புறப்படும் நேரத்தில் அவருக்காக இஸ்லாமிய தலைவர் Cheikh Mohammed Nazim Abil Al-Haqqani காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதால் உடனே அவரை சந்திக்க வந்தார் திருத்தந்தை. இஸ்லாமிய சுஃபி அமைப்பைச் சேர்ந்த 89 வயது ஆன்மீகத்தலைவரான இவர் திருத்தந்தையைச் சந்தித்து வாழ்த்துக் கூறுவதற்காக வந்திருந்தார். திருத்தந்தையுடனான இவரின் சந்திப்பு ஏற்கனவே திருப்பயணத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தைக்காகக் காத்திருந்த நேரத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன் ஏனெனில் நான் மிகவும் வயதானவன் என்று சிரித்துக்கொண்டே திருத்தந்தையிடம் அந்த இஸ்லாமியத்தலைவர் கூற, திருத்தந்தையும் சிரித்துக்கொண்டே நானும் முதியவன் தான் என்று கூறினார். இஸ்லாமியத்தலைவர் Nazim Abil Al-Haqqani திருத்தந்தைக்கு அரபு மொழியில் அமைதி வார்த்தை ஒன்று எழுதப்பட்டத் தகடு, சில உருவங்கள் பொறிக்கப்பட்ட கோல் மற்றும் இஸ்லாமிய ஜெபமாலையையும் பரிசளித்தார். திருத்தந்தையும் தன் சார்பாக இஸ்லாமியத் தலைவருக்கு பதக்கம் ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார். இந்த ஆன்மீகத்தலைவர் Nazim Abil Al-Haqqani திருச்சிலுவை கோவிலுக்குச் சிறிது பின்னால் தான் வாழ்ந்து வருகிறார். ஆனால் அப்பகுதியோ துருக்கியர் வசமிருக்கும் வட சைப்ரஸாகும். தலை நகர் நிக்கோஸியாவானது துருக்கி ஆக்ரமிப்புத் துருப்புகளால் பிரிக்கப்பட்டு, இரு சைப்ரஸ் பகுதிகளுக்கும் ஒரே தலைநகராக இருப்பது நமக்குத் தெரிந்ததே.
திருத்தந்தையிடமிருந்து விடைபெறுமுன் இஸ்லாமியத்தலைவர் தனக்காக ஜெபிக்கும்படி திருத்தந்தையிடம் வேண்ட, தான் அவருக்காக ஜெபிப்பதாக உறுதியளித்ததுடன், ஒருவர் ஒருவருக்காக ஜெபிப்போம் எனவும் கூறினார் திருத்தந்தை.
திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றிய தலைநகர் நிக்கோஸியாவின் எலெஃப்தேரியா விளையாட்டரங்கானது 5000 பேர் அமர்ந்து பார்க்கவும் 1000 பேர் நின்று பார்க்கவும் வசதி உடையது. திருப்பலியைத் திருத்தந்தையுடன் மத்தியக்கிழக்குப்பகுதியின் 30 ஆயர்கள் இணைந்து நிறைவேற்றினர். இதில் 17 பேர் மெரோனைட் கத்தோலிக்க ரீதியைச் சேர்ந்தவர்கள். திருப்பலி நிறைவேற்றப்பட்ட விளையாட்டரங்கினுள் 6000 பேர் குழுமியிருக்க, ஏறத்தாழ 2000 பேர் உள்ளே இடமின்மையால் வேளியே நின்று திருப்பலியில் பங்கேற்றனர். திருப்பலியில் பாடிய மெரோனைட் பாடகர் குழுவில் ஆசிய மற்றும் ஆப்ரிக்க மக்களும் இடம்பெற்றிருந்தனர்.
இயேசுவின் திரு உடல், திரு இரத்த திருவிழாவைச் சிறப்பிக்கும் விதமாக நிறைவேற்றப்பட்ட இத்திருப்பலியில் சைப்ரஸின் மேரோனைட் பேராயர் முதலில் திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்றார்.
ஞாயிறு காலை இடம்பெற்ற திருத்தந்தையின் இத்திருப்பலி மத்தியக்கிழக்குத் திருச்சபையின் வரலாற்றில் முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாகும்.
மத்தியக்கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு ஆயர் பேரவை வரும் அக்டோபரில் இடம்பெறுவதற்குத் தயாரிப்பதற்கான திட்ட முன்வரைவை அப்பகுதி ஆயர்களிடம் இத்திருப்பலியின் போது வழங்கினார் திருத்தந்தை.
திருப்பலிக்குப்பின் 7 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள திருப்பீடத்தூதரகம் சென்ற திருத்தந்தை, அங்கு மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தில் கலந்துகொள்ள உள்ள அப்பகுதி கத்தோலிக்க பிதாப்பிதாக்கள் மற்றும் ஆயர்களுடன் மதிய உணவருந்தினார்.
ஆயர்களுடன் உரையாடி முடித்து சிறிது நேர ஓய்வும் எடுத்து மாலை உள்ளூர் நேரம் 4 மணியளவில், அதாவது, இந்திய நேரம் ஞாயிறு மாலை 6.30 மணியளவில் திருப்பீடத் தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பிரியாவிடை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் பாப்பிறை.
பின்னர் அங்கிருந்து அருகாமையிலுள்ள மரியன்னை பேராலயம் சென்றார் அவர். மெரோனைட் கிறிஸ்தவ சபையின் இப்பேராலயம் விசுவாசிகள் வழங்கியக் கொடைகளுடனும் சைப்ரஸ் அரசின் நிதியுதவியுடனும் கட்டப்பட்டு 1960ம் வருடம் திருநிலைப்படுத்தப்பட்டது.
திருத்தந்தை இப்பேராலயத்தைத் தரிசிக்கச் சென்றபோது அங்கு மெரோனைட் பாடர்குழு ஒன்று கூடியிருந்து பண்ணிசைக்க, சிறு ஜெப வழிபாடு ஒன்றும் நடத்தப்பட்டது. 300 பேர் அமரும் வசதியுடைய இப்பேராலயத்தில் கிரேக்கம், அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் ஜெபங்கள் இடம்பெற்றன. வழிபாட்டின் இறுதியில் திருத்தந்தைக்கு தலத்திருச்சபையின் சார்பில் நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டது.
விமான நிலையத்தில் சைப்ரஸ் மக்களிடமிருந்து விடைபெறுவதற்கு முன்னால் அந்நாட்டில் திருத்தந்தை கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சியாகும் இது.நேயர்களே இத்துடன் திருத்தந்தையின் சைப்ரஸ் நாட்டிற்கான திருப்பயணம் குறித்த நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது.







All the contents on this site are copyrighted ©.