2010-06-05 16:36:39

சைப்ரஸில் Agia Kiriaki Chrysopolitissa கோவிலில் திருத்தந்தையின் உரை


என்னை அன்போடு வரவேற்ற இரண்டாம் க்ரிஸோஸ்தமசுக்கும் பஃபோசின் பெருங்குரு Georgoisக்கும் என் நன்றி. அர்மீனியன், லூதரன், ஆங்கலிக்கன் சபைகளிலிருந்து வந்திருக்கும் அன்பர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
Agia Kiriaki Chrysopolitissa கோவிலில் நாம் கூடியிருப்பது தனிப்பட்ட ஒரு வரம். அப்போஸ்தலர் பவுல் தன் மறைபரப்பு பணியின் முதல் பகுதியாக சைப்ரஸில் இருந்ததை திருத்தூதர் பணியிலிருந்து நாம் வாசித்த வாசகத்தில் இப்போது கேட்டோம். அவரோடு, சைப்ரஸில் பிறந்த பர்னபாவும், நற்செய்தியின் ஆசிரியர் மாற்கும் இருந்தனர். எனவே, திருச்சபை, ரோமைய சாம்ராஜ்யம் அனைத்துக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது இங்கிருந்துதான் ஆரம்பமானது.
சைப்ரஸில் உள்ள திருச்சபை, இதே விசுவாசத்தைப் பாதுகாக்கும் பிற சபைகளுடன் வேறுபாடுகளைக் களைந்து, ஒருமைப்பாட்டை வளர்க்க அழைக்கப்பட்டுள்ளது. பவுலும் இதையேக் கூறியுள்ளார்: “நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே: தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே: நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே: திருமுழுக்கு ஒன்றே.” (எபே. 4: 4-5 )
இந்த ஒருமைப்பாட்டை வளர்க்கும் நோக்குடன் வருகிற அக்டோபர் மாதம் உரோமையில் கூடவிருக்கும் மத்திய கிழக்கு பகுதிக்கான சிறப்பு ஆயர் பேரவை, இப்பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களின் பங்கு, பிற கிறிஸ்தவ சபைகளுடன் மேற்கொள்ள வேண்டிய சமய உரையாடல், நற்செய்தியின் அடிப்படையில் வாழும் சாட்சிய வாழ்வு ஆகியவை குறித்து சிந்திக்கவிருக்கின்றது.
இந்தப் பேரவையில் பிற சபைகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்வதால், கடவுளின் ஒப்புரவாக்கும் அருளைப் பெறுவதற்கு திறந்த மனம் கொண்டிருக்கும் நம் எண்ணங்கள் உலகுக்குத் தெளிவாகும்.
தன் சீடர்கள் அனைவரும் ஒன்றிணைந்திருக்க கிறிஸ்து சிறப்பாக வேண்டிக் கொண்டார். (யோவான். 17:21) இந்த ஒருமைப்பாட்டிற்காக தந்தையை நாம் தொடர்ந்து வேண்ட கடமைப் பட்டிருக்கிறோம். இந்த ஒற்றுமையால் நற்செய்தியின் சான்றுகளாய் இந்த உலகத்தில் இன்னும் சிறந்த முறையில் நாம் திகழ முடியும். கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் பிரிவுகள் நற்செய்தி போதனைகளுக்கு மாற்று சான்றாக இருப்பதை உணர்ந்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர் Edinburgh மறைபணி கருத்தரங்கில் நவீன கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம் துவக்கப்பட்டது. கிழக்கித்திய, மேற்கத்திய அப்போஸ்தலிக்க பாரம்பரியங்களை உணர்ந்து, திறந்த உள்ளங்களுடன் பொறுமையாக நம் உரையாடல்களை கடந்த சில ஆண்டுகளாக நாம் மேற்கொண்டிருப்பது நல்லதொரு எதிர்காலத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்.
கிழக்கு, மேற்கு என்ற இரு உலகங்களுக்கும் ஒரு பாலமாக அமைந்து, சைப்ரஸ் திருச்சபை இந்த ஒப்புரவை வளர்ப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. இந்த ஒருமைப்பாட்டைக் கொணர்வதில் கட்டாயம் பல பிரச்சனைகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. இருந்தாலும், சைப்ரஸ் கத்தோலிக்கத் திருச்சபையும், சைப்ரஸ் ஆர்த்தடாக்ஸ் சபையும் இந்த முயற்சிகளைத் தொடர தூய ஆவியானவர் நமக்குத் துணை அளிப்பாராக!அன்பு சகோதர, சகோதரிகளே, சைப்ரஸ் திருச்சபையின் அணிகலன்களாய் இருக்கும் புனிதர்களை, சிறப்பாக, சலாமிஸ் ஆயர் புனித Epiphanius குறித்து நாம் சிந்திக்க வேண்டும். கிறிஸ்துவ வாழ்வின் முழுமையே புனிதம். தூய ஆவியின் குரலுக்கு நாம் தொடர்ந்து செவிமடுத்து, மீட்பராம் கிறிஸ்துவைப் போல் மாறுவதே புனிதமடைவதற்கான சிறந்த வழி. சகோதர அன்புடன் கூடிவந்திருக்கும் நாம், இந்த சந்திப்பிற்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம். இறைவன் நம் குடும்பங்களை ஆசீர்வதிக்கவும், அப்போஸ்தலர்களின் விழி வந்த விசுவாசத்தை நாம் பாதுகாக்கவும், நம் எல்லாரையும் அன்பிலும், அமைதியிலும் வழி நடத்தவும் புனித பேதுரு, பவுல், பர்னபா, Epiphanius வழியாக வேண்டுவோம்.







All the contents on this site are copyrighted ©.