2010-06-05 16:25:54

சைப்ரஸிற் நாட்டிற்கான திருத்தந்தையின் திருப்பயணம் இரண்டாம் நாள்


விசுவாசத்தில் அனைத்துக் கிறிஸ்தவர்களின் தந்தையர்களான புனிதர்கள் பவுல் மற்றும் பர்னபாஸின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி ஒரு திருப்பயணியாக நான் இங்கு வந்துள்ளேன் என திருத்தந்தை தன் முதல் உரையில் கூறி சைப்ரஸிற்கானப் பயணத்தைத் துவக்கியுள்ளார்.
சைப்ரஸ் நாடு திருத்தந்தைக்கு வழங்கிய வரவேற்பில் உரையாற்றிய அரசுத்தலைவர் தெமத்ரியூஸ் கிறிஸ்டோஃபியாஸ், திருத்தந்தையின் வருகை அமைதியின் செய்தியைக் கொண்டு வந்துள்ளது என்றார். 1974ம் வருட ஆக்ரமிப்பால் அவதியுறும் சைப்ரஸ் நாடு திருத்தந்தையின் அமைதிச் செய்திக்காய்க் காத்திருக்கிறது என்றார். வட சைப்ரஸிலான துருக்கியின் ஆக்ரமிப்பால் கிறிஸ்தவ சொத்துக்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளதையும், கொள்ளையடிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார் அரசுத்தலைவர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பின் விமான நிலையத்திலிருந்து 25கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள Agia Kiriaki Chrysopolitissa என்ற வரலாற்று சிறப்பு நிறைந்த புனித இடம் நோக்கி காரில் பயணமானார் பாப்பிறை.
Agia Kiriaki Chrysopolitissa என்ற இந்த இடமானது சைப்ரஸின் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்குச் சொந்தமானது. இருப்பினும் கத்தோலிக்கர்களும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்களும் இங்கு வழிபாடுகளை நடத்த உரிமைப் பெற்றுள்ளனர். இவ்விடத்திலிருந்துதான் புனித பவுல் நற்செய்தியை அறிவித்தார். இங்குதான் அவர் ரோமைய ராணுவ வீரர்களால் தூணில் கட்டப்பட்டு சாட்டையால் அடிக்கப்பட்டார். அந்த தூண் இன்றும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதே இடத்தில் 4ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பசிலிக்கா 7ம் நூற்றாண்டில் அராபியப் படையெடுப்பின் போது முற்றிலுமாக அழிவுக்குள்ளாக்கப்பட்டது. அதே இடத்தில் கட்டப்பட்டுள்ள சிறியக்கோவிலைச் சந்திக்கச் சென்றார் திருத்தந்தை.
பழைய பசிலிக்காவின் இடிபாடுகளிடையேக் கட்டப்பட்டுள்ள இக்கோவில் ஆர்த்தடாக்ஸ், கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவர்களின் பொது வழிபாட்டுத்தலமாக இருப்பதால் இவ்விடத்திலேயே கிறிஸ்தவ ஐக்கிய வழிபாட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. பாஃபோஸின் ஆர்த்தடாக்ஸ் ஆயர் ஜியார்ஜியோஸ் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இவ்விடத்தை அடைந்ததும் முதலில் அங்குள்ள திருத்தலத்திற்குள் சென்றத் திருத்தந்தை முழந்தாள்படியிட்டு சிறிது நேரம் செபித்தார். வெளியிலோ சரித்திரச் சிறப்பு வாய்ந்த இடிபாடுகளிடையே விசுவாசிகள் பெருமெண்ணிக்கையில் திருத்தந்தைக்காகக் காத்திருந்தனர். கோவிலிலிருந்து திருத்தந்தை வெளியே வருகையில் 10 வயது இலங்கைச் சிறுமி ஜஸ்மிதா மஹராஜசிங்கை ஆசீர்வதித்தார். இந்தச் சிறுமியை தனிப்பட்ட விதத்தில் திருத்தந்தை ஆசீர்வதிப்பதற்கு என்ன காரணம் என சிலர் யோசிக்கலாம்.

இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்டு சைப்ரஸின் போஃபாஸில் வாழ்ந்து வரும் 10வயது சிறுமி ஜஸ்மிதா மஹராஜசிங் தன் நோய் காரணமாக பல்வேறு கடுமையான சிகிச்சைகளைத் தாங்கியவர். இவர் இதய அறுவை சிகிச்சையையும் 10 மணி நேர மூளை அறுவைச் சிகிச்சையயும் தாங்கி இன்று நலமுடன் வாழ்பவர். இஸ்ராயேலில் மேற்கொள்ளப்பட்ட இவரின் அறுவச் சிகிச்சைகளுக்கென 2 இலட்சம் டாலர்கள், நல்மனதுடைய மக்களால் கொடையாக வழங்கப்பட்டது. சைப்ரஸ் மக்கள் இச்சிறுமியை “சைப்ரஸின் வானதூதர்” என்றே பெருமைப்படுத்துகின்றனர். ஏனெனில் இச்சிறுமி தன் உடலில் தாங்கிய இத்தனைத் துன்பங்களுக்குப் பின்னரும் இன்று புன்சிரிப்புடன் நன்முறையில் கல்வி பயின்று வருகிறார். இவரின் படிப்புக்கு முழு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இத்தகையச் சிறப்பு வாய்ந்த ஒரு சிறுமியைத்தான் திருத்தந்தை ஆசீர்வதித்து வாழ்த்துக்களை வெளியிட்டார்.
கோவிலுக்கு வெளியே திருத்தந்தையைச் சந்திக்க பல ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை ஆயர்களுடன் அர்மீனியன்,லூத்தரன் மற்றும் ஆங்கிலிக்கன் உயர்மட்ட பிரதிநிதிகளோடு விசுவாசிகளும் காத்திருக்க, பாடகர் குழு பண் இசைத்து திருத்தந்தையை வரவேற்றது. புனித பூமியின் ஒரு பகுதியாக சைப்ரஸ் நாடு கருதப்படுவதால், புனித பூமி தொடர்புடைய அமைப்புகளின் பிரதிநிதிகளும் அங்குக் குழுமியிருந்தனர்.
இங்கு நடந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு ஜெபவழிபாட்டில் முதலில் ஆர்த்தடாக்ஸ் பேராயர் இரண்டாம் கிறிஸோஸ்தொமோஸ் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.
இந்த இடத்தில் தான் அப்போஸ்தலர்களின் முதல் புதுமை இடம்பெற்றது, இங்குதான் ஐரோப்பியக் குடிமகன் ஒருவர் முதன்முதலாக திருமுழுக்குப் பெற்றார், இங்குதான் முதலில் சிலைவழிபாடுகள் அகற்றப்பட்டு சிலுவையின் மகிமை உயர்த்தப்பட்டது, இவ்விடத்திலிருந்துதான் ஐரோப்பாவின் கிறிஸ்தவ மூலத்திற்கான முதல் வித்து புறப்பட்டது, ஐரோப்பியக் கிறிஸ்தவக் கலாச்சாரத்தின் அடித்தளமே இங்கு தான் இடப்பட்டது என அவ்விடத்தின் பெருமைகளை அடுக்கிக்கொண்டேச் சென்ற ஆர்த்தடாக்ஸ் பேராயர், 1974ம் ஆண்டிற்குப்பின் துருக்கியர்களின் ஆக்ரமிப்பால் சைப்ரஸ் நாடு துண்டாடப்பட்டுள்ளது குறித்தக் கவலையையும் வெளியிட்டார். சைப்ரஸின் புனித நினைவிடங்களையும், கலாச்சாரப் பாரம்பரியங்களையும் காப்பாற்றி நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதில் திருத்தந்தையின் உதவியையும் நாடினார்.
அதன்பின் திருத்தந்தையும் தன் உரையை வழங்கினார்.


திருத்தந்தையின் உரைக்குப்பின் அனைவரும் இணைந்து கர்த்தர் கற்பித்த செபத்தை ஜெபிக்க இறுதியில் பாடலுடன் நிறைவுப் பெற்றது அக்கிறிஸ்தவ ஐக்கிய வழிபாடு.
மீண்டும் கோவிலுனுள் சென்ற திருத்தந்தை கத்தோலிக்க திருச்சபையால் போஃபாஸ் நகரில் கட்டப்பட்டுள்ள முதியோர் இல்லத்திற்கான ஆரம்ப விழாப் பலகையை ஆசீர்வதித்தார். பின்னர் கோவில் அருகே அப்பகுதி அரசு அதிகாரிகள் கூடி நின்று திருத்தந்தையை வாழ்த்தினர். போஃபாஸின் ஆளுனர் திருத்தந்தைக்கு ஒரு நினைவுப்பரிசையும் வழங்கினார்.
இதையெல்லாம் முடித்துவிட்டு திருத்தந்தை ஆயியா கிரியாகி கிறிஸோபோலிதிஸா (Agia Kiriaki Chrysopolitissa) என்ற் இடத்திலிருந்து திருத்தந்தை புறப்பட்டபோது உள்ளூர் நேரம் பிற்பகல் 4 மணி 30 நிமிடங்களாகும். இந்திய நேரம் மாலை 7மணி. அங்கிருந்து 170 கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள தலைநகர் நிக்கோஸியாவவுக்கு காரிலேயே பயணம் செய்த திருத்தந்தை, ஏறத்தாழ 2மணி நேர பயணத்திற்ப் பின் அங்குள்ள திருப்பீடத்தூதரகம் சென்று இரவு உணவருந்தி நித்திரையில் ஆழ்ந்தார்.

தலைநகர் நிக்கோஸியா இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதி தற்போது திருத்தந்தை பயணம் மேற்கொண்டு வரும் சைப்ரஸ் குடியரசின் தலைனகராகவும், ஏனைய பகுதி துருக்கி ஆக்ரமிப்பின் கீழுள்ள 36 அல்லது 37 விழுக்காட்டு சைப்ரஸ் நிலப்பகுதியின் தலைநகராகவும் உள்ளது. தலை நகரிலேயே துருக்கிய ராணுவம் உள்ளது மற்றும் திருத்தந்தையின் திருப்பயணத்திற்கு முந்திய நாள் துருக்கியியுலுள்ள ஆயர் ஒருவர் அவரின் காரோட்டியால் கொல்லப்பட்டது ஆகியவைகளக் கருத்தில் கொண்டு சைப்ரஸ் காவல்துறை 1000க்கும் மேற்பட்ட காவலர்களை இப்பயணத்தின் பாதுகாப்பையொட்டி நிறுத்தியுள்ளதாக சைப்ரஸ் காவல்துறை பேச்சாளர் மிக்கேலிஸ் கட்சோவ்னோத்தோஸ் அறிவித்துள்ளார்.

திருத்தந்தையின் சைப்ரஸ் நாட்டிற்கான இரண்டாம் நாள் பயணத்திட்டங்கள் திருப்பீடத்தூதரகத்திலிருந்து 3கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்று சந்திப்பதிலிருந்துத் தொடங்கியது. முதலில் இருதலைவர்களும் தனியாக சிறிது நேரம் சந்தித்து நினைவுப்பரிசுகளைப் பரிமாறிக்கொண்டனர். பின்னர் அரசுத்தலைவர் தெமெத்ரிஸ் கிறிஸ்தோஃபியாஸின் குடும்ப அங்கத்தினர்கள் திருத்தந்தைக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.
சைப்ரஸ் நாடு 1960ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது அந்நாட்டின் முதல் அரசுத்தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி செய்தவர் ஆர்த்தடாக்ஸ் பேராயர் மூன்றாம் மக்கரியோஸ் என்பதையும் நாம் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.
நிக்கோஸியாவின் அரசுத்தலைவர் மாளிகையிலேயே அரசு அதிகாரிகளையும் சைப்ரஸிற்கான பிற நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்தார் திருத்தந்தை. முதலில் அரசுத்தலைவர் திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்க திருத்தந்தையும் தன் உரையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை முடித்தபின் அங்கிருந்து 5கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள புனித மரோன் துவக்கப்பள்ளிக்குச் சென்று கத்தோலிக்க சமுமூகத்தினரைச் சந்தித்தார் பாப்பிறை. மரோனைட் கிறிஸ்தவ சபையின் பேராயர் யூசூப் சியோப் திருத்தந்தையை முதலில் வாழ்த்தி வரவேற்க திருத்தந்தையும் தன் உரையை கத்தோலிக்க சமுதாயத்திற்கு வழங்கினார்.

கத்தோலிக்க சமுதாயத்தைச் சந்தித்து ஆசீரை வழங்கிய பின்னர் காரில் ஏறி 10 கிலோமீட்டர்கள் பயணம் செய்து ஆர்த்தடாக்ஸ் பேராயர் இல்லம் வந்தார் திருத்தந்தை. ஏற்கனவே விமான நிலைய வரவேற்பின் போதும், அதே நாளில் புனித பவுலின் நினைவிடம் இருக்கும் Agia Kiriaki Chrysopolitissa லும் திருத்தந்தை ஆர்த்தடாக்ஸ் பிதாப்பிதாவைச் சந்திதுள்ள போதிலும், தற்போது அவரின் இருப்பிடத்திற்கே நேரடியாகச்சென்று அவருக்கான தன் மதிப்பையும் மரியாதையையும் வெளியிட்டார். முதலில் இருவரும் தனியாகச் சிறிது நேரம் சந்தித்து, பேச்சுவார்த்தைகளை நடத்தினர். பின்னர் திருத்தந்தை அந்நாட்டின் மிகவும் புகழ் பெற்றவரும் முதல் அரசுத்தலைவருமான ஆர்த்தடாக்ஸ் பேராயர் மக்கரியாஸின் கல்லறையைச் சென்று தரிசித்தார். பேராலயத்தையும் பார்வையிட்டு ஜெபித்தபின் திருத்தந்தை மேடைக்கு வர, பேராயர் இரண்டாம் கிறிஸோஸ்தொமோஸ் அவரை வரவேற்றுப் பேசினார். திருத்தந்தையும் அங்கு தன் வாழ்த்துரையை வழங்கினார்.

இதன் பின் திருத்தந்தை, திருஉருவங்களின் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார். வட சைப்ரஸில் துருக்கியர்கள் ஆக்ரமிப்புச் செய்த பின்னர் கொள்ளையடிக்கப்பட்டு அவர்களால் வெளினாடுகளில் விற்கப்பட்டு தற்போது மீண்டும் சைப்ரஸுஜக்கு வந்துள்ள புனிதப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இவ்வருங்காட்சியகம்.
கோவிலையும் அதன் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டபின், அங்கேயே ஆர்த்தடாக்ஸ் பேராயர் இல்லத்தில் மதிய உணவருந்தினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
 நேயர்களே! சனி மாலை இடம்பெற்ற திருத்தந்தையின் திருப்பலி மற்றும் ஞாயிறு தின நிகழ்ச்சிகள் குறித்து, நாளை இதே நேரம் செவிமடுப்போம்.







All the contents on this site are copyrighted ©.