2010-06-05 16:37:22

ஆர்த்தடாக்ஸ் பேராயருக்கு திருத்தந்தையின் வாழ்த்துரை


மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் உரோமைக்கு வந்திருந்ததை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். இன்று மீண்டும் உங்கள் தாயகத்தில் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன். உங்கள் வழியாக சைப்ரஸ் திருச்சபையின் அனைத்து ஆயர்கள், குருக்கள், தியாக்கோன்கள், துறவறத்தோர், விசுவாசிகள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
சென்ற ஆண்டு Paphosல் நடைபெற்ற அகில உலக இறையியல் உரையாடலின் போது, சைப்ரஸ் திருச்சபை அந்த நிகழ்வை ஏற்று நடத்தியதற்காக முதன் முதல் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.

சைப்ரஸ் திருச்சபை உரையாடலுக்குக் கொடுத்துவரும் முக்கியத்துவத்திற்காக உங்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன். தொடர்ந்து கிழக்கு, மேற்கு திருச்சபைகளிடையே முழுமையான, அனைவரும் காணக் கூடிய ஒற்றுமையை வளர்ப்பதற்கு, தூய ஆவியானவர் உங்களை வழி நடத்துவாராக.

சென்ற ஆண்டு உரோமைக்கருகே L’Aquila பகுதியில் நடந்த நில நடுக்கத்தின் போது, திருச்சபையின் சகோதரத்துவம், ஒருமைப்பாடு இவற்றை உணர்த்தும் வண்ணம் அந்த மக்களுக்கு சைப்ரஸ் திருச்சபை அளித்த உதவியை நினைத்துப் பார்க்கிறேன். இதே ஒருமைப்பட்டு உணர்வை இப்பகுதியில் வளர்க்க சைப்ரஸ் திருச்சபைக்கு இறைவன் வரங்களை வழங்க வேண்டுகிறேன்.

பாரம்பரியமாக, சைப்ரஸ் புனித பூமியின் ஒரு பகுதியாக எண்ணப்பட்டு வருகிறது. மத்திய கிழக்குப் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் மோதல்கள் கிறிஸ்துவைப் பின் தொடரும் அனைவருக்கும் கவலையை அளித்து வருகிறது. பாரம்பரியம் மிக்க இந்தத் திருச்சபை சமாதானத்தில் வளர்ந்து வர இறைவனை வேண்டுகிறேன். மீண்டும் உங்கள் வரவேற்பிற்கு நன்றியைக் கூறுகிறேன். சைப்ரஸ் திருச்சபையின் குருக்கள், துறவறத்தார், விசுவாசிகள் அனைவருக்கும் என் செபங்கள் உண்டு என உறுதியளிக்கிறேன்.







All the contents on this site are copyrighted ©.