2010-06-04 16:15:53

துருக்கியில் ஆயர் Luigi Padovese அவரது வாகன ஓட்டுனரால் கொலை செய்யப்பட்டார்


ஜூன்04,2010 துருக்கியில் அனதோலியா பகுதிக்கு பொறுப்பாளராக இருந்த ஆயர் Luigi Padovese இவ்வியாழன் மதியம் அவரது வாகன ஓட்டுனரால் கொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 63.
1947ஆம் ஆண்டு இத்தாலியின் மிலான் நகரில் பிறந்த Luigi, கப்புச்சின் சபையில் துறவற வாழ்வை மேற்கொண்டார். இவர் 1973ஆம் ஆண்டு குருவாகவும், பின்னர் 2004ஆம் ஆண்டு ஆயராகவும் திருநிலைபடுத்தப்பட்டார்.
ஆயர் Luigi Padovese கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு Lombardi செய்தியாளர்களிடம் கூறினார். ஆயரது அற்பண வாழ்வு, துருக்கியில் வாழும் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க வழிகாட்டும் வகையில் அமைந்திருந்ததென அருட்தந்தை Lombardi மேலும் கூறினார்.
துருக்கியிலுள்ள திருச்சபை நேரியதொரு தலைவரை இழந்துள்ளதென துருக்கிக்கான திருப்பீட தூதுவர் பேராயர் Antonio Lucibello கூறினார். இத்தாலியில் பிறந்த Luigiயின் மறைவுக்கு இத்தாலிய ஆயர்கள் பேரவையின் சார்பாக தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாக இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Angelo Bagnasco கூறினார்.ஆயர் Padoveseஐக் கொலை செய்த அவரது ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மன நிலை சரியில்லாதவர் எனவும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.