2010-06-04 16:05:42

சைப்ரஸ் நாட்டில் திருத்தந்தை திருப்பயணம் முதல் நாள்


ஜூன்04,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் 16வது வெளிநாட்டுத் திருப்பயணத்தை இவ்வெள்ளி காலை உள்ளூர் நேரம் 9.30 மணிக்கு அதாவது இந்திய நேரம் நண்பகல் 1 மணிக்கு ரோம் நகரிலிருந்துத் துவக்கினார். சைப்ரஸ் நாட்டில் 3 நாள் திருப்பயணத்தை மேற்கொள்கிறார் நம் பாப்பிறை. கடந்த ஆண்டு மே மாதம் புனித பூமிக்குப் பயணம் மேற்கொண்டத் திருத்தந்தை, மத்தியக்கிழக்கு நாடுகளின் திருச்சபைத் தலைவர்களோடு செப்டம்பரில் ரோம் நகரில் நடத்தியக் கூட்டத்தின் இறுதியில் இவ்வாண்டு அக்டோபர் மாதம் 10 முதல் 24 வரை மத்தியக்கிழக்குப் பகுதிக்கான உலக ஆயர் மாநாடு ரோம் நகரில் கூட்டப்படும் என அறிவித்திருந்தார். அந்த மாநாட்டிற்கான திட்ட முன்வரைவை மத்தியக்கிழக்கு ஆயர்களிடம் ஒப்படைப்பது இத்திருப்பயணத்தின்போது இடம்பெற உள்ளது. மேலும் இத்திருப்பயணத்தின்போது கிறிஸ்தவ ஐக்கியப் பேச்சுவார்த்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை ஒருவர் சைப்ரஸ் நாட்டிற்கு மேய்ப்புப் பணி சார்ந்த திருப்பயணம் மேற்கொள்வது இதுவே முதன் முறையாகும்.
வெள்ளி உள்ளூர் நேரம் 9.30 மணிக்கு திருத்தந்தையைத் தாங்கிச்சென்ற ஆலித்தாலியா விமானம் சைப்ரஸின் நாட்டைச் சென்றடைந்தபோது உள்ளூர் நேரம் மதியம் 2 மணி. ரோம் நகருக்கு அப்போது நண்பகல் 1 மணி. இந்தியாவுக்கோ மாலை 4மணி 30 நிமிடங்கள். சைப்ரஸ் நாட்டின் பாஃபோஸ் நகரைச் சென்றடைந்த திருத்தந்தையை முதலில் அந்நாட்டிற்கான திருப்பீடத்தூதுவர் பேராயர் அந்தோனியோ ஃப்ராங்கோ விமானத்திற்குள் சென்று வாழ்த்தி வரவேற்றார்.
திருத்தந்தை விமானத்திலிருந்து கீழே இறங்கி வர, அரசுத்தலைவர் தெமெத்ரிஸ் கிறிஸ்தோஃபியாஸ் அவரைக் கை குலுக்கி வரவேற்றார். வரவேற்பு நிகழ்ச்சிக்கென ஏற்பாடு செய்திருந்த மேடை நோக்கி இரு தலைவர்களும் இணைந்து நடந்துச் சென்றனர். திருத்தந்தையை வரவேற்கக் காத்திருந்த சைப்ரஸின் Maronite பேராயர் Joseph Soueif, லத்தீன் ரீதி பிதாப்பிதா Fouad Twal, சைப்ரஸின் ஆர்த்தடாக்ஸ் பேராயர் இரண்டாம் Chrysostomos, தலத்திருச்சபை மற்றும் அரசு அதிகாரிகளையும் சந்தித்தார் திருத்தந்தை.ராணுவ அணிவகுப்பு மரியாதை திருத்தந்தைக்கு வழங்கப்பட, சைப்ரஸ் மற்றும் வத்திக்கான் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. முதலில் அரசுத்தலவர் திருத்தந்தையை வரவேற்றுப்பேசினார். திருத்தந்தையும் சைப்ரஸ் நாட்டிற்கான தன் முதல் உரையை வழங்கினார். வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின் ஒலிவ மரம் ஒன்றையும் திருத்தந்தை ஆசீர்வதித்தார். பின்னர் அரசு அதிகாரிகள் ஒவ்வொருவராக திருத்தந்தைக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.