2010-06-03 14:57:02

புனித ஜான் மரிய வியான்னி கத்தோலிக்கத் திருச்சபையின் அனைத்து குருக்களின் பாதுகாவலராக அறிவிக்கப்படுவார்


ஜூன்03,2010 புனித ஜான் மரிய வியான்னி கத்தோலிக்கத் திருச்சபையின் அனைத்து குருக்களின் பாதுகாவலராக அறிவிக்கப்படுவார் என்று வத்திக்கான் அறிக்கை ஒன்று கூறுகிறது.
குருக்கள் ஆண்டின் நிறைவாக, ஜூன் 9 முதல் 11 வரை மூன்று நாட்கள் வத்திக்கானில் நடைபெற உள்ள பல நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களை இப்புதனன்று வெளியிட்ட குருக்களுக்கானத் திருப்பேராயம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி குருக்கள் ஆண்டை அறிவித்த திருத் தந்தை 16ம் பெனடிக்ட், இவ்வாண்டு ஜூன் 11ஆம் தேதி, இயேசுவின் திரு இருதயத் திருநாளன்று, புனித பேதுரு வளாகத்தில் நடைபெறும் திருப்பலியுடன் இக்குருக்கள் ஆண்டை நிறைவு செய்வார் என்றும், அத்திருப்பலியின் போது இதுவரை பங்கு குருக்களுக்கு பாதுகாவலர் என்று போற்றப்படும் புனித ஜான் மரிய வியான்னியை அனைத்து குருக்களுக்கும் பாதுகாவலாராக திருத்தந்தை அறிவிப்பார் என்றும் திருப்பேராயத்தின் அறிக்கை கூறுகிறது.
மக்களும் அருட்பணியாளர்களும் குருத்துவத்தின் உன்னத நிலையை இன்னும் ஆழமாக உணர குருக்கள் ஆண்டின் நிறைவாக நடைபெறும் இந்த நிகழ்வுகள் வழிவகுக்கும் என்று இத்திருப்பேராயத்தின் தலைவரான கர்தினால் Claudio Hummes கூறினார்.
இந்த நிகழ்வுகளில் உலகின் 91 நாடுகளிலிருந்து வருகை தரும் 9000க்கும் அதிகமான குருக்கள், துறவறத்தார், குருமட மாணவர்கள், விசுவாசிகள் என அனைவரும் பங்கு பெறுவர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.