2010-06-02 15:59:26

சிலுவைகள் குறித்த வழக்கில் இத்தாலிக்கு ஆதரவாக மேலும் பத்து ஐரோப்பிய நாடுகள் இணைந்துள்ளன


ஜூன்02, 2010 சிலுவைகளை வகுப்பறைகளிலிருந்து நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றம் விதித்த ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்த இத்தாலிய அரசுக்கு ஆதரவாக மேலும் பத்து ஐரோப்பிய நாடுகள் இணைந்துள்ளன.
கடந்த நவம்பர் மாதம் இத்தாலியில் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள சிலுவைகளை அகற்ற ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றம் விதித்த ஆணைக்கு எதிராக சிலுவைகள் தங்கள் நாட்டில் மதத்தைத் தாண்டிய ஒரு கலாச்சார அடையாளம் என்று இத்தாலிய அரசு மேல் முறையீடு செய்ததால், அந்த வழக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த வழக்கில் ஆர்மீனியா, பல்கேரியா, சைப்ரஸ், கிரீஸ், லித்துவேனியா, மால்டா, மொனாக்கோ, சான் மரினோ, ரொமேனியா, ரஷ்ய கூட்டமைப்பு ஆகிய பத்து நாடுகள் இத்தாலிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இந்த வழக்கு குறித்த விசாரணை மீண்டும் ஜூன் 30ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த வழக்கு குறித்த தீர்ப்பு சொல்லப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கள் நாட்டை எந்த வகையிலும் பாதிக்காத ஒரு வழக்கில், இத்தாலிய அரசுக்கு மற்ற நாடுகள் ஆதரவைத் தெரிவித்திருப்பது இது வரை நிகழ்ந்திராத ஒன்று என்பதால், இந்த வழக்கு அதிகத் தனித்தன்மை வாய்ந்தது என்று செய்திக்குறிப்புகள் கூறுகின்றன. ஐரோப்பிய கல்வியை மதசார்பற்றதாய் மாற்றுவதில் நீதி மன்றங்கள் தலையிடுவதையும், ஐரோப்பிய கலாச்சாரம், பாரம்பரியம் குறித்த பல்வேறு நாடுகளின் நிலைப்பாட்டையும் தெளிவாக்க இந்த வழக்கு வழி வகுக்கும் என்று செய்திக்குறிப்புகள் மேலும் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.