2010-06-01 13:11:11

பெண்கள் புகைப்படித்தலை நிறுத்துமாறு ஐ.நா.பொதுச்செயலர் அழைப்பு


ஜூன்01,2010 புகையிலை அழுக்கானது மற்றும் மரணத்தை ஏற்படுத்தக்கூடியது என்று சொல்லி, புகையிலையைப் பயன்படுத்த வேண்டாம் என்று உலகப் பெண்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன்.

புகைபிடிப்பது கவர்ச்சியானத் தோற்றத்தை அளிப்பதுமல்ல, ஆளுமையை மேன்மைப்படுத்திக் காட்டுவதுமல்ல என்று உலக புகையிலை எதிர்ப்பு தினமான இத்திங்களன்று செய்தி வெளியிட்ட பான் கி மூன், இக்காலத்தில் இளம் பெண்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்தார்.

WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் அண்மை ஆய்வில், 151 நாடுகளில் புகைப்பிடிக்கும் சிறுவர் சிறுமியர் எண்ணிக்கை சமமாக இருப்பதாகத் தெரிவிக்கப்ப்டடுள்ளது.

பல்கேரியா, சிலே, கொலம்பியா, கூக் தீவுகள், குரோவேஷியா, செக் குடியரசு, மெக்சிகோ, நியுசிலாந்து, நைஜீரியா, உருகுவாய் உட்பட சில நாடுகளில் சிறுவர்களைவிட சிறுமிகளே அதிகம் புகைப்பிடிப்பதாகவும் அவ்வாய்வு தெரிவிக்கிறது.

பத்து பெண்களுக்கு ஒரு பெண்ணுக்குக் குறைவான விகிதத்திலே புகைப்பிடித்தாலும் உலகில் இன்றும் சுமார் இருபது கோடிப் பெண்கள் புகைப்பிடிக்கின்றனர், புகைப்பிடித்தல் தொடர்புடைய நோய்களால் உலகில் ஆண்டுதோறும் 15 இலட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் இறக்கின்றனர், இவ்வெண்ணிக்கை 2030க்குள் 25 இலட்சமாக உயரக்கூடும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்தது.

புகையிலை தொடர்புடைய நோய்களால் உலகில் ஆண்டுதோறும் ஆறு இலட்சம் பேர் இறக்கின்றனர், இவர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்கள் என்று WHO நிறுவனத்தின் இயக்குனர் Margaret Chan கூறினார்.

இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினம் ஜப்பானின் டோக்கியோவில் சிறப்பிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.