2010-06-01 13:10:00

திருத்தந்தையின் சைப்ரஸ் பயணம் குறித்து திருப்பீடப்பேச்சாளர் விளக்கம்.


ஜூன்01, 2010 இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின்னான ஆதிகால மறைபோதகர்கள் நடந்து சென்ற பாதையில் திருப்பயணியாக திருத்தந்தை சைப்ரஸ் நாட்டிற்குப் பயணம் செய்ய உள்ளதாகக் கூறினார் திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு பெதெரிக்கோ லொம்பார்தி.

மத்திய கிழக்கு ஆயர்களைத் திருத்தந்தை ஏன் சைப்ரஸில் சந்தித்து அடுத்த ஆயர் மாமன்றத்திற்கான முன்வரைவு ஏட்டை வழங்க வேண்டும் என்ற பரவலான கேள்விக்கு வத்திக்கான் தொலைக்காட்சியில் பதிலளித்த திருப்பீடப் பேச்சாளர், இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து திருத்தூதர்கள் பணி நூல் கூறுவதை வாசித்தால் விளக்கம் கிடைக்கும் என்றார்.

பர்னபாஸ் சைப்ரஸைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல அங்கு நற்செய்தி அறிவித்துள்ளார் மற்றும் புனித பவுலும் அங்குப் பயணம் செய்துள்ளார் மற்றும் பலமுறை அந்நாடு வழியாகச் சென்றுள்ளார் என்ற திருப்பீடப்பேச்சாளர் குரு லொம்பார்தி, அத்தகைய முக்கியத்துவம் நிறைந்த இடத்தில் திருத்தந்தை மத்திய கிழக்கு ஆயர்களைச் சந்திப்பது புரிந்துக் கொள்ளக்கூடியதே என்றார்.

எருசலேமுக்கானப் பயணங்களும் கிழக்குக்கும் மேற்குக்குமானப் பயணங்களும் இந்நாடு வழியாகவே அக்காலத்தில் இடம்பெற்றுள்ளன என்பதையும் எடுத்தியம்பினார் அவர்.

இவ்வாரம் வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாள் திருப்பயணத்தை சைப்ரஸில் மேற்கொள்ளவுள்ளார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.