2010-05-31 13:33:38

“குழந்தையிடம் கற்றுக் கொள்ள”


மே31,2010 RealAudioMP3 இந்த ஞாயிற்றுக்கிழமை, காலை பத்துமணித் திருப்பலிக்குச் சென்றிருந்தேன். அங்கு எனக்கு முன்வரிசையில் ஒரு குடும்பம் வந்து அமர்ந்தது. அது ஐந்து குழந்தைகளைக் கொண்ட ஓர் இத்தாலியக் குடும்பம். மேற்கத்திய உலகில் மிகக்குறைவான பிறப்பு விகிதத்தில் இத்தாலி இரண்டாவது இடத்தில் இருக்கின்றது. இந்தப் பிறப்பு, ஒரு பெண்ணுக்கு 1.23 என்ற விகிதத்தில் உள்ளது. இத்தாலியில் 2009ம் ஆண்டில் பிறப்பு விகிதம் பூஜ்யம். கடந்த வாரத்தில் இத்தாலிய ஆயர் பேரவையின் 61வது கூட்டத்தில் உரையாற்றிய அவ்வாயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ, இத்தாலியில் 50 விழுக்காட்டுக்கு மேற்பட்ட குடும்பங்களில் பிள்ளைகள் இல்லை. 25 விழுக்காட்டுக் குடும்பங்களுக்கு ஒரு குழந்தைதான் இருக்கிறது, மேலும் 20 விழுக்காட்டுக் குடும்பங்களுக்கு இரண்டு பிள்ளைகளும் 5.1 விழுக்காட்டுக் குடும்பங்களுக்கு மூன்றும் அதற்கு மேற்பட்ட பிள்ளைகளும் உள்ளனர் என்று அறிவித்தார். இந்தப் புள்ளி விபரத்தை வாசித்திருந்த எனக்கு, ஞாயிறு திருப்பலியில் ஐந்து பிள்ளைகளுடன் இந்த இத்தாலியக் குடும்பத்தைப் பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் அந்தத் தந்தையும் தாயும் அவ்வளவு ஒரு பக்தியோடும் மிகுந்த பாசத்தோடும் பிள்ளைகள் திருப்பலியில் பங்கெடுக்கச் செய்தனர். மூத்த பையனுக்கு பத்து வயதுதான் இருக்கும். கடைசி ஐந்துமாதக் குழந்தை கைவண்டியில் படுத்திருந்தது. அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் தாயையும் தந்தையையும் பற்றிக் கொண்ட விதம், அவர்களைப் பெற்றோர் அரவணைத்த விதம், அந்தத் தாய் திருப்பலி முடிந்து, பிள்ளைகளை ஒருவரிச் செபத்தைச் சொல்ல வைத்து அவர்களை அழைத்துச் சென்ற விதம் என்னில் ஏதோ செய்தது. எனது சின்ன வயது அனுபவங்கள் பசுமையாக வந்து சென்றன.

குழந்தைகள் என்றாலே குதுகூலமானவர்கள், ஆனந்தமானவர்கள். இவர்களின் உலகம் மகிழ்ச்சியானது, கள்ளம் கபடமில்லாதது, வேடிக்கைகளும் வினோதங்களும் நிறைந்தது. அங்கு பொறாமை, கோபம், வெறுப்பு, பயம் உண்டு. ஆனால் அவைகளுக்கு ஆயுள் மிகக்குறைவு. மேலே குறிப்பிட்ட அந்தக் குடும்பத்தில் இரண்டாவது பையன் திருப்பலியில் குறும்பு செய்து கொண்டிருந்ததால் தந்தை கண்டித்தார். அவன் உடனே தேம்பித் தேம்பி அழுதான். அழுகையோடு தாயிடம் ஒட்டிக் கொண்டான். கண்சிமிட்டும் நேரத்தில் அவன் தந்தையின் மடியில் அமர்ந்தான். இதுதான் குழந்தைகளின் குணம். சோகம், துக்கம் வெகுநேரம் நீடிக்காது. அவர்களில் மகிழ்ச்சி மட்டுமே சாகாவரம் பெற்றிருக்கிறது. பெரியவர்களுக்குக் கிடைக்கும் ஒருகோடி ரூபாய் முதலீட்டைவிட ஒரு சிறிய சீனிவெடியும் கடலைமிட்டாயும் குழந்தைகளுக்கு உயர்ந்ததாக இருக்கின்றன. இந்தக் குழந்தைகளிடம் நடிப்பு இருக்காது. மாறாக எதார்த்தம் இருக்கும். பெரியவர்கள் இவர்களிடம் பிரியமாக நடந்து கொள்வதும் விளையாட்டுக் காட்டுவதுமாக இருப்பார்கள். அவர்கள் காட்டும் அன்பில் ஒருவித விளையாட்டு உணர்ச்சி இருக்கும். ஆனால் குழந்தைகளிடம் உண்மையிலே அன்பு இருக்கும்.

அன்பு நேயர்களே, இந்தக் குழந்தைகளுக்கென சர்வதேச அளவில், தேசிய அளவில் விழாக்கள் எடுக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு இலங்கையில் அக்டோபர் ஒன்றாந்தேதி குழந்தைகள் தினம். அத்தினம் பிரேசிலில் அக்டோபர் 12. அந்த நாள் அந்நாட்டில் காட்சி மாதாவின் (Our Lady of Aparecida) திருவிழா மற்றும் அரசு விடுமுறை நாளும் ஆகும். அந்நாள் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் நான்காவது புதன்கிழமையாகும். பாரதத்தில், அந்நாள் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ம் தேதியாகும். ஆயினும் ICD என்ற பன்னாட்டுக் குழந்தைகள் தினம் ஜூன் முதல் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள் 1920ம் ஆண்டு முதன்முதலில் துருக்கி நாட்டில் சிறப்பிக்கப்பட்டது. பின்னர் 1925ம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் கடைபிடிக்கப்பட்டது. இந்தக் குழந்தைகள் தினம் 1925ம் ஆண்டு ஜூன் முதல் தேதி நடைபெற்ற இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகளை வைத்துக் கொண்டாடப்படுகிறது. ஒன்று, குழந்தைகளின் நல்வாழ்வுக்காக ஜெனீவாவில் உலக கருத்தரங்கு நடைபெற்றது. இரண்டாவது, சான் பிரான்சிஸ்கோவிலுள்ள சீனத் தூதரக(Consul - general) அதிகாரி, பல சீன அனாதைக் குழந்தைகளை ஒன்று சேர்த்து டிராகன் போட் விழாவைக் (Dragon Boat Festival) கொண்டாடியது. இந்த இரண்டு விழாக்களும் குழந்தைகளின் நல்வாழ்வை மையமாகக் கொண்டிருந்ததால் இச்சர்வதேச தினம் ஜூன் முதல் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

இந்தப் பன்னாட்டுக் குழந்தைகள் தினம் பலநாடுகளில் மறைபொருளாக இருந்தாலும், வருங்காலத்தைக் கட்டி எழுப்பும் சிற்பிகளாகிய குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டு சிறப்பிக்கப்படுகின்றது. இவர்களை வருங்கால உலகின் தூண்கள், சிற்பிகள், தலைவர்கள் என்றெல்லாம் சொல்லிப் பெருமைப்படுகின்றோம். ஆனால் இந்தத் தூண்கள் இக்காலத்தில் சமூக, கலாச்சார, சமய மற்றும் இனத் துவேஷங்களில் எதிர்நோக்கும் வன்முறைகள் சொல்லில் அடங்காதவை. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் யூனிசெப் குழந்தைகள் நிதி அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை உண்டாக்குகின்றன. உலக அளவிலுள்ள ஒரு கோடியே 70 இலட்சம் அகதிகளில் 41 விழுக்காட்டினர் சிறார் என்று நம்பப்படுகின்றது.

நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்துள்ள 2 கோடியே 50 இலட்சம் பேரில் சிறாரும் இளையோருமே வன்முறைக்கும் பாலியல் வன்செயல்களுக்கும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றனர். போரினால் ஏறக்குறைய இரண்டு கோடிச் சிறார் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறி இருக்கின்றனர். 87 நாடுகளில் வாழ்கின்ற சிறார், ஆறு கோடி மிதிவெடிகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர். மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர், சிறார் படைவீரர்களாக வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பத்து வயதுக்கு உட்பட்டவர்கள். வறுமை, பசி, தடுக்கக்கூடிய நோய்கள் போன்ற வன்செயல்களின் பக்க விளைவுகளால் தினமும் சுமார் முப்பதாயிரம் சிறார் இறக்கின்றனர். 5 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சுமார் 25 கோடிச் சிறார், குறிப்பாக சிறுமிகள் கட்டாய வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில், காஷ்மீர் இராணுவத்தின் நடவடிக்கைகளால் இந்தியாவுக்குள் ஊடுருவ இயலாத பயங்கரவாதிகள், காஷ்மீரிலுள்ள சிறுவர்கள் மற்றும் ஐ.டி., தொழில்நுட்பம் அறிந்த இளையோரைப் பயங்கரவாதப் பயிற்சிக்கு ஈர்க்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இந்த ஒருநிலையில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச் செயலர் பான் கி மூன், சிறார் வியாபாரம், சிறார் விபசாரம், சிறார் படைவீரர் போன்றவற்றைத் தடை செய்யும் உலக உடன்பாடுகளை 2012ஆம் ஆண்டுக்குள் அனைத்து நாடுகளும் முழுமையாக அமல்படுத்துமாறு கேட்டுள்ளார். நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மூன்று மாதங்களுக்கு முன்னர் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிறார் படைவீரர்களை ஐ.நா.வின் மேற்பார்வையில் விடுதலை செய்திருப்பதையும் பான் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், போரின் கொடுமைக்குப் பலியாகும் அப்பாவிச் சிறாரின் நிலையை உலகுக்கு உணர்த்தும் நோக்கத்தில், ஐ.நா.நிறுவனம், சண்டையின் வன்கொடுமைக்குப் பலியாகும் சிறார்க்கான சர்வதேச நாளை ஜூன் நான்காம் தேதி கடைபிடிக்கிறது.

அன்பு நேயர்களே, ஆழமாகச் சிந்தித்தால் மனிதர் அத்தனை பேரும் அலைவது அன்புக்காகத்தான். இந்த அன்பைக் கொன்றால், அதுதான் அழிக்க முடியாத அநீதியாக இருக்கும். எல்லா உயிர்களும், அதிலும் குறிப்பாக, இந்தச் சின்னஞ்சிறுசுகளுக்கு இந்த அன்பு அதிகம் தேவை. இளவயதில் அன்பில்லாமல் வளருவதே பிற்கால வாழ்வில் பெரும்பாலும் வன்செயலிலும் பிற கொடூரங்களிலும் ஈடுபட வைக்கின்றது. பணம் பணம் என்று பிள்ளைகளை ஆயாக்களின் பராமரிப்பில் விட்டுவிடும் இக்காலப் பல படித்த பெற்றோருக்கு மத்தியில், தர்மபுரி மாவட்ட அந்த ஏழை கல் உடைக்கும் கூலித் தொழிலாளிக் குடும்பத்தின் அன்பு நம்மை ஒருகணம் சிந்திக்க வைக்கிறது. “ஏங்க, உங்க குழந்தை, குரங்கு மாதிரியே இருக்குறதாலே அவனைச் சர்க்கஸ்காரங்க ஒரு இலட்சம் ரூபாய்க்குக் கேட்குறாங்க. யோசிக்காமல் தள்ளிவிட்டுப் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள்” என்று துளிகூட நாகரீகமோ, மனிதாபிமானமோ இல்லாமல் ஆலோசனை சொன்னவர்களை அலட்சியப்படுத்தி அந்தக் குரங்கு போன்ற பிள்ளையை அக்குடும்பம் பாசத்தோடு வளர்த்து வருகின்றது. “என்னதான் குறை இருந்தாலும் அவன் எங்களுக்குக் கடவுள் கொடுத்த குழந்தை, கடவுளோட குழந்தை” என்று சொல்லும் அவர்கள் எங்கே. இவ்வளவுக்கும் மண்தரையில் சோற்றை உருண்டை உருண்டையாய் வைத்தால்தான் அந்தப் பையன் சாப்பிடுவானாம். வீட்டிற்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் ஆடுமாடு மாதிரி வாய் வைத்துத்தான் தண்ணீர் குடிப்பானாம்.

பெற்றோரே, வேலை வேலை என்று பிள்ளைகளுக்குக் காட்ட வேண்டிய அன்பிலும் அக்கறையிலும் குறை வைக்காதீர்கள். பிள்ளைகளுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து இலட்சாதிபதிகளானச் சில குடும்பங்கள் பற்றித் தெரியும். எந்தப் பிள்ளைக்காகப் பாடுபட்டார்களோ அந்தப் பிள்ளையே அவர்களை மதிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஊதாரியாய் ஊர் சுற்றுகிறது. பணம் இருந்தும் நிம்மதியை இழந்து வாழ்கின்றனர் பெற்றோர். அந்தப் பிள்ளை தந்தையின், தாயின் அன்புக்காக ஏங்கிய சமயத்தில் அன்பு காட்டப் பெற்றோருக்கு நேரமில்லை. கலில்கிப்ரன் சொன்னார்- “குழந்தைகள் பெற்றோரிடமிருந்து வெளிவருவதில்லை. பெற்றோர் மூலமாக வெளிப்படுகிறது” என்று. எனவே பெற்றோர் இதைப் புரிந்து கொண்டு குழந்தையை அதன் இயல்பிலே வளர்ப்பது மிகப்பெரிய கலையாகும்.

குழந்தாய், உனக்கே தெரியாது - நீ நடக்க, உன் காலடியை எடுக்கும் ஒவ்வொரு கணமும் நீ வீழ்கின்றாய். மறுகணமும் நீ ஊன்றிக் கொள்கின்றாய். உன்னை ஒரு கோலாக எண்ணி மீண்டும் எழுகிறாய். உன்னை ஒரு கத்தி முனையில் சமன் செய்தால் உன் நிறை எல்லாம் ஓர் புள்ளியில் குவிவதாய் எண்ணிக்கொள். எல்லாமே உன் வருங்கால வெற்றியை நோக்கியே இருக்கும்.








All the contents on this site are copyrighted ©.