2010-05-29 14:50:13

பாகிஸ்தானில் சமய சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமாறு ஐ.நா. வல்லுனர்கள் விண்ணப்பம்


மே29,2010 பாகிஸ்தானில் இவ்வெள்ளியன்று, அஹமதியா சிறுபான்மை சமூகத்தின் குறைந்தது 70 உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருக்கும்வேளை, அந்நாட்டில் சமய சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமாறு ஐ.நா.வின் மூன்று மனித உரிமை வல்லுனர்கள் பாகிஸ்தான் அரசை விண்ணப்பித்துள்ளனர்.

சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்கள் தொடர்ந்து கொலைமிரட்டல்களையும் பாகுபாடுகளையும் வன்முறைத் தாக்குதல்களையும் எதிர்நோக்குகின்றனர் என்று அந்த வல்லுனர்கள் இணைந்து ஐ.நா.பொதுச் செயலருக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

லாகூரில் சிறுபான்மை முஸ்லிம் மதப்பிரிவான அஹமதியா மதப்பிரிவு ஒன்றின் இரு மசூதிகளை ஆயுததாரிகள் ஒரே காலத்தில் தாக்கியதில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன், எண்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

மொடல் டவுண் மற்றும் கர்ஹி சாகூ என்னும் இடங்களிலுள்ள மசூதிகளில் இத் தாக்குதல்கள் தொழுகை வேளையில் இரண்டு மணிநேரம் நடந்துள்ளன.

அஹமதி பிரிவு இஸ்லாமியர்கள் லாகூரில் பல தடவைகள் சுனி இன குழுக்களால் பல தடவைகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளர்கள்.

அஹமதி மதப்பிரிவினர் தாம் இஸ்லாமியர்கள் என்று உரிமை கோருகின்ற போதிலும், அவர்களை முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பாகிஸ்தான் 1973ல் அறிவித்துள்ளதுடன், 1984ல் அவர்கள் தம்மை முஸ்லிமாக அறிவிக்கவோ அல்லது அடையாளப்படுத்தவோ முடியாது என்றும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.