2010-05-28 15:17:06

திருத்தந்தை - உண்மையான சகோதரத்துவத்தை ஊக்குவிப்பது சமூக அமைதிக்கு இன்றியமையாதது


மே28,2010 உண்மையான சகோதரத்துவத்தை ஊக்குவிப்பது சமூக அமைதிக்கும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சிக்கும் இன்றியமையாத கூறாகும் என்று பெனின் (Benin) நாட்டுப் புதிய தூதுவர் Comlanvi Théodore Loko விடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இவ்வெள்ளியன்று திருப்பீடத்துக்கான பெனின் நாட்டுப் புதிய தூதுவர் Loko விடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, உண்மையான சகோதரத்துவம், பிரிவினைகளைத் தகர்த்து தேசிய ஐக்கியத்தையும் குடும்பங்களில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

பெனின் நாட்டுக் கலாச்சார மரபுகள் குறித்துக் குறிப்பிட்ட திருத்தந்தை, இவற்றில் முக்கியமானதாகிய வாழ்வின் தூய்மை காக்கப்பட வேண்டும், குறிப்பாக அது நாட்டின் சட்டங்கள் மூலம் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

எல்லாக் குடிமக்களின் சமமாண்பையும் சகோதரத்துவத்தையும் காப்பது உறுதியான சமுதாயம் வளருவதற்கு அடிப்படையான கோட்பாடாகும் என்றும் சகோதரத்துவம், எப்பொழுதும் நீதியைக் கடைபிடிப்பதற்கு இட்டுச் செல்ல வேண்டும் என்றும் கூறினார் அவர்.

சகோதரத்துவம், நீதி, உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டைக் கட்டி எழுப்ப முயற்சிக்கும் பெனின் நாட்டினர் எல்லாருக்கும் தமது வாழ்த்தையும் ஆசீரையும் வழங்குவதகாவும் புதிய தூதுவர் Lokoவிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்

மேற்கு ஆப்ரிக்க நாடான பெனின், 1872ல் ப்ரெஞ்ச் காலானியாக மாறி 1960ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி சுதந்திரம் பெற்றது.








All the contents on this site are copyrighted ©.