2010-05-28 15:22:30

ஆப்ரிக்காவில் இடம் பெறும் மனித வியாபாரப் பிரச்னைகளை உலகினரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்கு ஆயர்கள் நடவடிக்கை


மே28,2010 ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதிகளில் இடம் பெறும் மனித வியாபாரப் பிரச்னைகளை உலகினரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதற்கு அப்பகுதி ஆயர்கள் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

லெசோத்தோ, நமிபியா, தென்னாப்ரிக்கா, ஜிம்பாபுவே ஆகிய நாடுகளின் ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகள், கடந்த வாரத்தில் Planet Waves என்ற குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மனித வியாபாரம் குறித்த பிரச்னையைக் களைவதற்கானத் தங்களது ஒத்துழைப்புக்கு உறுதி வழங்கினர்.

வறுமை, பொருளாதாரச் சீர்குலைவு, சண்டைகள், குறைந்த ஊதியத்திற்கான வேலை போன்ற காரணங்களால் ஆப்ரிக்காவின் தெற்குப் பகுதிகளில் மனித வியாபாரம் அதிகரித்து வருவதாக ஆயர்கள் கூறியுள்ளனர்.

மொசாம்பிக் நாட்டிலிருந்து மட்டும் ஒரு வாரத்திற்கு 300 பேர் வீதம் தென்னாப்ரிக்காவுக்குச் சட்டத்துக்குப் புறம்பே நுழைகின்றனர்.

மேலும், வருகிற ஜூன் 11 முதல் ஜூலை 11 வரை தென்னாப்ரிக்காவில் நடைபெறவிருக்கின்ற உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டின் போது சுமார் நாற்பதாயிரம் பாலியல் தொழிலாளிகளும் விபசாரிகளும் நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படுவார்கள் என்று திருச்சபை பயப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.