2010-05-25 14:45:41

குடியேற்றதாரர்க்கான திருப்பீட அவையின் பணிகள் திருத்தந்தையின் அக்கறையை வெளிப்படுத்துகின்றன.


மே 25, 2010. இடம் விட்டு இடம் பெயரும் மக்களுக்கான திருச்சபையின் பணி பங்குத்தள அளவிலும், மறைமாவட்ட அமைப்பு முறைகளிலும், ஆயர் பேரவைத் திட்டங்களிலும், பிற சர்வதேச அமைப்புகளுடனான திருச்சபையின் திட்டங்களிலும் தெளிவாகக் காணக்கிடப்பதாக எடுத்துரைத்தார் பேராயர் Antonio Maria VEGLIÒ.

குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான மேய்ப்புப்பணி அக்கறைக்கான திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Maria VEGLIÒ உரைக்கையில், தங்கள் நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் மக்களைக் குறித்த திருத்தந்தையின் அக்கறையில் பங்குதளங்கள் முதல் கத்தோலிக்க சர்வதேச அமைப்புகள் வரை அனைத்தும் பங்கு கொள்கின்றன என்றார்.

குடிபெயர்தல் என்பதை அதன் ஏழ்மை நிலையிலும் துன்பங்களிலும் புரிந்துகொண்டு சேவையாற்றுவதையும், குடிபெயர்தலை புதிய நாட்டிற்கான மூலதனமாக நோக்கி அதற்கியைந்த சூழல்களை உருவாக்கிக் கொடுப்பதையும் திருச்சபையின் குடியேற்றதாரர்க்கான அவை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் பேராயர்.

திருச்சபையின் குடியேற்றதாரர்க்கான மேய்ப்புப்பணி அவை தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளோடும், தனியார் நிறுவனங்களோடும், சுய உதவிக் குழுக்களோடும் இணைந்து தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் சிறப்புப் பணியாற்றி வருகிறது எனவும் கூறினார் பேராயர் Maria VEGLIÒ .

இப்புதன் முதல் வெள்ளி வரை தன் 19வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை நடத்திவருகிறது குடியேற்றதாரர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான மேய்ப்புப்பணி அக்கறைக்கான திருப்பீட அவை.








All the contents on this site are copyrighted ©.