2010-05-25 14:45:02

அரசியல் கைதிகளுக்காக அரசுத்தலைவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினர் Cuba தலத்திருச்சபை அதிகாரிகள்.


மே 25, 2010. Cuba தலத்திருச்சபை அதிகாரிகள் அரசுத்தலைவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதைத் தொடர்ந்து அரசியல் கைதிகளின் நிலையில் மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் எதிர்ப்பாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அரசுத்தலைவர் Raul Castro வைச் சந்தித்தபின் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த அந்நாட்டு கர்தினால் Jaime Ortega Alamino மற்றும் பேராயர் Dionisio Garcia Ibanez, அரசியல் கைதிகள் நடத்தப்படும் முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படும் என தங்களுக்கு உறுதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

நோயுற்றுள்ள அரசியல் கைதிகள் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்படுவதற்கும் ஏனைய அரசியல் கைதிகள் அவர்களின் வீட்டுக்கருகிலேயே தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

ஹவானா துணை ஆயர் Juan de Dios Hernandez Ruizன் கூற்றுப்படி, சிறை வைக்கப்பட்டுள்ள சில அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

கியூபாவில் 200க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக அரசு எதிர்ப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.