2010-05-24 15:05:06

“சிறந்த நகரம், சிறந்த வாழ்க்கை”


மே24,2010 RealAudioMP3 “சிறந்த நகரம், சிறந்த வாழ்க்கை”. இந்த சுலோகத்தை நேயர்களே உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். இந்தியாவின் அண்டை நாடான சீனாவின் ஷாங்காய்(Shanghai) நகரில் இந்த சுலோகத்தை இந்நாட்களில் எங்கும் காணலாம். சீனா, இம்மாதம் ஒன்றாந்தேதி இந்தத் தலைப்புடன் ஷாங்காய் நகரில் வெகு ஆடரம்பமாக world Expo 2010 என்ற சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைத் தொடங்கியது. முதல் நாள் நிகழ்வில் உலகம் அனைத்திலும் இருந்து 2,300 இசைக்கலைஞர்களும் பல்வேறு பங்களிப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். "நீ எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் நீ உன்னை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்ட சீனத் தத்துவக் கொள்கை இந்நாட்களில் ஷாங்காய் நகரில் உயிர் பெற்றிருப்பதை காண முடிகின்றதாகப் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். வருகிற அக்டோபர் 31ம் தேதி வரை 6 மாதங்கள் நடக்கும் இந்த பிரமாண்ட வர்த்தகத் திருவிழாவில் சுமார் 200 நாடுகளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கின்றன. இது பற்றி கருத்துச் சொல்லும் ஊடகங்கள்,

இதுவரை உலகில் இடம் பெற்ற வர்த்தகக் கண்காட்சிகளிலேயே இந்தக் கண்காட்சிதான் அதிகச் செலவுகளைக் கொண்டதாயும் உலக வரலாற்றிலே மிகப் பெரியதாயும் இருக்கின்றது. 5.28 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கண்காட்சிக்காக மட்டும், ஷாங்காய் நகர நிர்வாகம் ஐந்து கோடியே நாற்பது இலட்சம் அமெரிக்க டாலரைச் செலவிட்டுள்ளது. இது 2008 பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவை விட அதிகமாகும். இந்த ஷாங்காய் உலகக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு ஏழு கோடிப் பேர் முதல் பத்துக் கோடிப் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய சர்வதேச கண்காட்சி முதன் முதலில் 1851ம் ஆண்டு இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு உலகின் முக்கிய நகரங்களிலெல்லாம் இது நடந்து வருகிறது. கடந்த 2000 மாம் ஆண்டில் ஹனோவரில் நடந்த கண்காட்சிக்குப் பிறகு, மீண்டும் 2005ல் ஜப்பானில் நடந்தது. அடுத்த கண்காட்சி 2015ல் இத்தாலியின் மிலான் நகரில் நடக்கவுள்ளது.

இந்த ஷாங்காய்க் கண்காட்சி, உலக நாடுகளிடையே தனது செல்வாக்கு அதிகரிக்க வழிவகுக்கும், தனது மதிப்பும் பொருளாதாரமும் மேலும் உயரும் என்று சீனா எதிர்பார்த்துள்ளது. அதனுடைய எதிர்பார்ப்பு பெரும்பாலும் நிறைவேறும் என்றே இந்நாளைய உலக நடப்புகளை வைத்துச் சொல்ல முடிகின்றது. சீனச் சந்தையில் நம்பிக்கை வைத்துள்ள பெப்சி குளிர்பானக் கம்பெனி,(PepsiCo) 250 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்வதற்குத் திட்டமிட்டு வருவதாக அந்தக் கம்பெனியின் செயலாக்கத் தலைவர்கள் இச்சனிக்கிழமையன்று அறிவித்தனர். இந்த முதலீடு சீனாவில் தாங்கள் வைத்திருக்கும் பெரும் நம்பிக்கையை மிகத் தெளிவாகப் பிரதிபலிப்பதாக இருக்கின்றது என்று அதன் செயல்திட்டத் தலைவர் Indra Nooyi கூறியுள்ளார். இதன்மூலம் கடந்த முப்பது ஆண்டுகளில் அதிகமாக முதலீடு செய்த கம்பெனி என்ற பெயரையும் பெறுகிறது. கடந்த ஆண்டில் Coca Cola 200 கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஷாங்காய் உலகக் கண்காட்சி, வெறும் வர்த்தக நோக்கில் மட்டும் அமையாமல், “சிறந்த நகரம், சிறந்த வாழ்க்கை” என்ற கருத்தை வலியுறுத்துவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. “கிழக்கின் பாரிஸ்” என்றழைக்கப்பட்ட இந்த ஷாங்காய் நகரம், இன்று உலகில் மிகவும் நவீன முறையில் வளர்ச்சியடைந்துள்ள நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இன்றைய உலக நகரங்களின் அதீத வளர்ச்சியினால், இன்றைய உலக மக்கள் தொகையான 660 கோடியில் பாதிக்கும் மேற்பட்டோர் ஏற்கனவே நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வெண்ணிக்கை 2050ம் ஆண்டுக்குள் 70 விழுக்காடு அதிகரிக்கும். இன்று ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட மாநகரங்கள் 22 உள்ளன. இவை 2015க்குள் 26 ஆக உயரும். முன்னூறுக்கும் அதிகமான நகரங்கள் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை ஏற்கனவே கொண்டுள்ளன. சீனாவில் மட்டும் கடந்த முப்பது ஆண்டுகளில் நகரங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை 19 லிருந்து ஏறத்தாழ ஐம்பது விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. மொத்தத்தில் சுமார் 40 கோடிப்பேர் நகரங்களில் குடியேறியிருக்கின்றனர். யாங்ப்பு மாவட்டத்தில் மட்டும் 18 ஆயிரம் பேர் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வாழ்கின்றனர். இந்நிலை பெர்லின் நகரைவிட ஐந்து மடங்கு அதிகம். இந்நிலை உலக சமுதாயத்துக்குப் பெரும் சவால்களையும் முன்வைக்கின்றன. இவ்வாறு ஐக்கிய நாடுகள் நிறுவனம் முன்னுரைத்துள்ளது.

இன்றைய நவீனப் போக்குவரத்து வசதிகளும் பெரு நகரங்களை நோக்கி அதிகமான மக்கள் இடம் பெயரக் காரணமாக அமைகின்றன. அதனால் நகரங்களும் ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோடியே முப்பது இலட்சம் பேருக்கான தங்குமிடங்களை அமைத்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது. இந்த நிலை நீடித்தால் 2050ம் ஆண்டிற்குள் 640 கோடி நகரவாசிகளுக்கு மின்சாரம், தண்ணீர், அத்தியாவசியப் பொருட்கள், நலவாழ்வு வசதிகள் போன்றவை தேவைப்படும். அதேசமயம், நகரங்களும் மின்சக்தியை செலவழிப்பது மற்றும் கரியமில வாயுவை வெளியேற்றுவதைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. உலக அளவில் பயன்படுத்தப்படும் மின்சக்தியில் 75 விழுக்காட்டை இன்று நகரங்கள் விழுங்கி விடுகின்றன. இதனால் சுற்றுச்சூழலில் வெளியேற்றப்படும் வாயுக்களில் 80 விழுக்காட்டுக்கு இவை பொறுப்பாகின்றன. இம்மாதிரியான சூழல் கட்டடக்கலைக்கும் புதிய சவால்களை முன்வைக்கின்றது. கட்டடக்கலையின் ஸ்டார் எனச் சொல்லப்படும் டானியேல் லிபெஸ்கின்ட் (Daniel Libeskind) என்பவர் சொல்கிறார் – பெரிய மற்றும் உறுதியான கட்டிடம் இரசிக்கும் தன்மையுடையதாக இருக்காது. ஏனெனில் நாம் மின்சக்தியை சேமிக்கிறோம் என்று.

உள்கட்டமைப்புக்களை நவீனப்படுத்தவும், சாலைகளையும் இரயில்பாதை இணைப்புக்களையும் தண்ணீர், மின்சக்தி விநியோக அமைப்புக்களையும் முன்னேற்றுவதற்குமென அடுத்த இருபது ஆண்டுகளுக்கு உலகிற்கு 41 ஆயிரம் கோடி டாலர் தேவை என்று மோர்கன் ஸ்டான்லி என்பவர் சொல்கிறார். இடங்களைப் பசுமையாக வைத்திருப்பதற்கென ஏறக்குறைய முப்பதாயிரம் கோடி யூரோக்கள் செலவழிக்கப்படுவதாக அமெரிக்க வங்கி ஒன்று அறிவித்துள்ளது. அதேசமயம் வளர்ந்து வரும் நாடுகள், தங்களது நகரங்களில் தண்ணீரையும் காற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும், மின்சக்தியை சேமிக்கவும் முயற்சி எடுத்து வருகின்றன என்றும் அவர் சொல்கிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, “சுழன்றதும் ஏர்பின்னதும் உலகம், உழுவார் உலகத்தாருக்கு ஆணி, இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்தான்” போன்ற கூற்றுகள் பொய்யாகி வருகின்றன. ஏராளமானக் கிராமங்களைக் கொண்ட இந்தியாவில் கிராமங்களின் வளர்ச்சியும் விவசாய வளர்ச்சியும் தேயத் தொடங்கியுள்ளன. கிராமப்புற விவசாயிகளுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதால் அம்மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். 1991ம் ஆண்டு 25.7 விழுக்காடாக இருந்த நகர்ப்புற வளர்ச்சி தற்போது 27.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே நகர்மயமாதலில் தமிழகம்தான் முதலிடத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் நகரங்களின் மக்கள்தொகையும் கிராமங்களின் மக்கள்தொகையும் சரிபாதியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நகரமயமாதலில் பயங்கரவாதமும் அதிகரிப்பதாகவும் கூறப்படுகின்றது.

சீனா உட்பட உலக நாடுகள் இத்தகைய சவால்களை எதிர்நோக்கும் இவ்வேளையில் ஷாங்காயில் “சிறந்த நகரம் சிறந்த வாழ்வு” என்ற சுலோகத்துடன் உலக எக்ஸ்போ 2010 நடை பெற்று வருகிறது. ஆயினும் உலகில் சுற்றுச்சூழலில் முன்னேற்றம் இல்லாவிட்டால் பெரும்பாலான நகரவாசிகளுக்குச் சிறந்த வாழ்வு அமையாது. எனவே இந்த மே மாதம் முதல் வருகிற அக்டோபர் வரை ஷாங்காயில் 240, நாடுகளும் நகரங்களும் சர்வதேச நிறுவனங்களும் உலகின் பெருநகரங்களுக்கு நல்ல தீர்வுகளைப் பரிந்துரைக்கும், இந்த ஷாங்காய் வர்த்தகக் கண்காட்சியைப் பார்வையிடும் சுமார் 10 கோடி மக்கள் சிறந்த வாழ்வுக்குத் தேவையானப் புதுச் சிந்தனைகளைப் பெற்றுச் செல்வார்கள் என நம்புவோம்.

வருங்காலம் இன்றே தொடங்க வேண்டும். சுத்தநீர், சுத்தக் காற்று, உறுதியான கட்டிடத் தொழிற்நுட்பம், மின்விளக்கு, தரமான மருத்துவ உதவி போன்றவற்றிற்கானப் பரிந்துரைகள், இவை கிடைப்பதற்கான தீர்வுகள், பசுமைக் கருத்துக்கள், நல்ல தகவல்கள் இந்த எக்ஸ்போவில் கிடைக்கின்றன. சிறந்த வாழ்வுக்கான அவற்றைப் பயன்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

ஒருசமயம் ஒரு கழுதை குழிக்குள் விழுந்து விட்டது. பார்த்தவர் பலரும் பரிகசித்தனர். சிறார் அதன்மேல் மண்ணையும் கல்லையும் எறிந்தார்கள். பெரியவர்கள் குப்பைகளைக் கொட்டினார்கள். ஆனால் கழுதை மனம் தளரவில்லை. மெல்ல மெல்லத் திமிறி எழுந்தது. குழியைவிட்டுக் குதித்து வெளியேறியது. அப்போது குப்பைக்குள் புழுக்களைத் தேடிய சேவல் கூவியதாம் - வீண்பழிகளும் வசவு வார்த்தைகளும், விழுந்து கிடப்பவனுக்குத் தளர்ச்சியும் தரலாம். எழுச்சியும் தரலாம் என்று. ஆம். விழுவதில் தவறில்லை. ஆனால் விழுந்து கிடப்பதில்தான் தவறு.

எனவே சிறந்த வாழ்வைத் தேர்ந்தெடுக்கச் சிந்தைக்குக் கிடைப்பதை எடுத்துக் கொண்டு எழுச்சி பெறுவோம். சீனத் தத்துவம் சொல்கிறது - "நீ எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் நீ உன்னை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்" என்று.








All the contents on this site are copyrighted ©.