2010-05-24 16:03:25

தொழிற்சாலை கழிவுகளால் விஷமாகும் மீன் உணவு : எச்சரிக்கிறது ஆய்வு.


மே 24, 2010. மேற்குவங்கத்தில் தொழிற்சாலை கழிவுகளால், மீன்கள் விஷத்தன்மை கொண்டதாக மாறிவிட்டதால், மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக, தனியார் நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் உள்ள சந்தை பகுதிகளில், 60 வகையான மீன் மற்றும் நண்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷத்தன்மை கொண்ட ரசாயனத்தின் அளவு மிக அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது. அதாவது, உலக சுகாதார நிறுவனத்தின் (டபிள்யு.எச்.ஓ.,) உணவு பாதுகாப்பு விதிகளில் அனுமதிக்கப் பட்டுள்ள அளவைவிட 70 முதல் 500 சதவீதம் கூடுதலாக இருப்பது தெரிய வந்தது.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் மீன்களின் உடலில் மீத்தைல் மெர்க்குரி அளவு கூடுவதாகவும் தெரியவந்தது. பாதரசம் பாதித்த மீன்களை உட்கொள்ளும் மனிதர்களுக்கு மூளை வளர்ச்சி குன்றுதல், மன உளைச்சல், குழந்தைகள் எடை குறைவு, உடல் உறுப்பு பாதிப்பு ஆகிய பிரச்னைகள் ஏற்படும் என்றும், மனித உடலில் இருக்கும் பாதரச அளவை, முடி மற்றும் இரத்த பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.